சிங்கள அதிபர் தேர்தலும், தேசியத் தலைவரின் சிந்தனையும்-5

புதன் அக்டோபர் 30, 2019

எதிரிக்கு எதிரி நண்பன் - ‘கலாநிதி’ சேரமான்

சிங்கள தேசத்து அதிபர் தேர்தலைப் புறக்கணிக்குமாறு தமிழர்களைக் கோருவது, மறைமுகமாக கோத்தபாய ராஜபக்சவின் வெற்றிக்கு வழிசமைக்கும் கபட நோக்கத்தைக் கொண்ட நகர்வு என்ற குற்றச்சாட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகிய தமிழ் அரசியல் கட்சிகளாலும், அக் கட்சிகளுக்குப் பரிவட்டம் கட்டுவோராலும் முன்வைக்கப்படுகின்றது.

இது எவ்வளவு தூரத்திற்கு உண்மை?

உண்மையில் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கப் போவது தமிழர்களோ அன்றி முஸ்லிம்களோ அல்ல. அவரது வெற்றியைத் தீர்மானிக்கப் போவது பெளத்த - சிங்களவர்கள் மட்டுமே.

111

கடந்த 08.01.2015 அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறீசேன வெற்றியீட்டியதும், அதற்குத் தமிழர்களின் வாக்குகளே காரணம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உரிமை கோரியது. உடனேயே அதை மறுதலித்த முஸ்லிம் தலைவர்கள், சிறீசேனாவிற்கு முஸ்லிம்கள் வாக்களிக்காது விட்டிருந்தால் அவரால் தேர்தலில் வெற்றி பெற்றிருக்க முடியாது என்று பதிலடி கொடுத்தார்கள். இவையயல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு சிங்கள-பெளத்த பேரினவாதம் என்ன சும்மாவா இருக்கும்?

உடனேயே செய்தியாளர் மாநாட்டைக் கூட்டிய ஜாதிக யஹல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க, சிறீசேனவின் வெற்றியில் பெளத்த - சிங்கள மக்களின் செல்வாக்கைப் பெற்ற தமது கட்சி முக்கிய பங்கை வகித்ததாகக் கர்ச்சித்ததோடு, சிங்கள - பெளத்த மக்களின் ஆதரவு இல்லையயன்றால் தமிழர்களாலும் சரி, முஸ்லிம்களாலும் சரி சிறீசேனவைத் தேர்தலில் வெற்றியீட்ட வைத்திருக்க முடியாது என்றார்.  

சரி, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் உண்மையில் என்ன நடந்தது என்று பார்ப்போம். சிறீசேனவின் வெற்றிக்காக ஐக்கிய தேசியக் கட்சி வாலாலும், கூந்தலாலும் ஓடியோடி உழைத்தது. மறுபுறத்தில் அன்று மகிந்த ராஜபக்சவின் தலைமையில் இயங்கிய சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து உடைத்துக் கொண்டு சிறீசேனவுடன் வெளியில் வந்த சுதந்திரக் கட்சியின் மாற்று அணியினரும் அவரது வெற்றிக்காக உழைத்தார்கள்.

அவர்களுக்குப் பக்கபலமாக சந்திரிகா அம்மையார் நின்றார். மறுபுறத்தில் சிறீசேனவின் வெற்றிக்காக ஜே.வி.பியும், ஜாதிக யஹல உறுமயவும் கடுமையாக உழைத்தன. இவற்றோடு தமிழ் - முஸ்லிம் வாக்குகளும் சிறீசேனவிற்குக் கிடைக்க அவர் வெற்றி பெற்றார்.

ஆக, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கிய சிறீசேனவின் வெற்றியில் தமிழ் - முஸ்லிம் மக்கள் வகித்தது ஒரு சிறிய பாகம் தான். ஒருவேளை சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மாற்று அணியினரின் ஆதரவு சிறீசேனவிற்குக் கிட்டாமல் இருந்திருந்தால் நிச்சயம் அவர் தோற்றிருப்பார்.

இதற்கான ஆதாரமாக 26.01.2010 அன்று நடைபெற்ற சிங்கள தேசத்து அதிபர் தேர்தல் முடிவுகளைக் கொள்ளலாம். அன்று மகிந்த ராஜபக்சவிற்குப் போட்டியாகக் களமிறங்கிய சரத் பொன்சேகாவின் வெற்றிக்காக ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முஸ்லிம் கட்சிகளும் குத்தி முறிந்தன.

ஆனாலும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் முழுமையான ஆதரவு மகிந்த ராஜபக்சவிற்கு இருந்ததால் பொன்சேகாவால் வெற்றி பெற இயலவில்லை.

அதாவது 2010ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மகிந்த ராஜபக்சவிற்குப் பக்கபலமாக முழுச் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் நின்றதால் அவர் வெற்றி பெற்றார். 2015ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி இரண்டாக உடைந்ததால் அவர் தோற்றார்.

ஆனால் இன்று நிலைமை அப்படி இல்லை. ஒருபுறத்தில் மைத்திரிபால சிறீசேனவின் தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சி கோத்தபாய ராஜபக்சவிற்குப் பக்கபலமாக நிற்கின்றது. மறுபுறத்தில் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்து சென்று மகிந்தர் உருவாக்கிய சிறீலங்கா பொதுஜன பெரமுனவும் கோத்தபாயவிற்குத் துணை நிற்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி மேற்குலகம் விரும்பும் திறந்தவெளிப் பொருளாதாரத்தை ஆதரிக்கும் ஒரு முதலாளித்துவக் கட்சி. மானியங்களையும், அரசாங்க வேலைகளையும் நம்பியிருக்கும் சிங்கள - பெளத்த மக்களைப் பொறுத்தவரை இது ஏற்புடைய ஒன்றல்ல. தவிர மகிந்தரின் காலத்தில் சீனாவின் நிதியுதவியுடன் தென்னிலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகள் ஏறத்தாழ முடங்கிப் போயுள்ளன.

இதுவும் ஐக்கிய தேசியக் கட்சி மீது சிங்கள - பெளத்த வாக்காளர்கள் அதிருப்தியடைவதற்கு இன்னுமொரு காரணமாகும்.

இவை எல்லாவற்றையும் விட தென்னிலங்கையிலும் சிங்கள மக்களுக்கே உரித்தான சாதிய அரசியலும் தலைவிரித்தாடுகின்றது. ஐக்கிய தேசியக் கட்சி என்னதான் தாராண்மைவாதம் பேசினாலும், ‘கோவிகம’ எனப்படும் உயர்சாதிச் சிங்கள அரசியலாலும், கண்டிச் சிங்களவர் -  கரையோரச் சிங்களவர் என்ற பிரதேசவாதப் பிரிவினைகளாலும் அக்கட்சி பிளவுண்டு கிடக்கின்றது.

இந்தப் பிரிவினைகள் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.

ஆக, தமிழ் மக்கள் சஜித் பிரேமதாசாவிற்கு வாக்களித்தாலும் சரி, தேர்தலைப் புறக்கணித்தாலும் சரி, அவரைத் தோற்கடிப்பதற்கும், கோத்தபாயவை வெற்றியீட்ட வைப்பதற்கும் பெரும்பான்மையான சிங்கள -பெளத்தவர்கள் முடிவு செய்து விட்டார்கள் என்றால், அதன் பின்னர் தேர்தலின் முடிவுகளை ஆண்டவன் நினைத்தாலும் மாற்றிவிட முடியாது.

இங்கு இன்னுமொரு விடயத்தையும் நாம் குறிப்பிட்டாக வேண்டும். கடந்த ஆண்டு ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியைக் கலைத்து விட்டு மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக மைத்திரிபால சிறீசேன நியமித்த பொழுது, அதனை முறியடிக்கும் முயற்சிகளில் மேற்குலகம் இறங்கியது. மீண்டும் ரணிலை ஆட்சியில் அமர்த்துவதற்கான முயற்சிகளில் அமெரிக்க இராசதந்திரிகள் முழு மூச்சுடன் இறங்கினார்கள்.

111

 ரணிலை ஆதரிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அழுத்தம் பிரயோகித்தார்கள். அவர்களும் தமது எசமான்களின் கட்டளைகளை சிரமேற்கொண்டு ரணிலின் வெற்றிக்காக ஓடியோடி உழைத்தார்கள். இறுதியில் மகிந்த ராஜபக்சவைப் பிரதமராகக் கொண்டு சிறீசேன அமைத்த அரசாங்கம் சட்டவிரோதமானது என்று சிறீலங்கா உச்சநீதிமன்றம் அறிவித்தது.

சமநேரத்தில் மகிந்தரின் அரசாங்கம் இயங்குவதற்கு சிறீலங்கா மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்தது. பிறகென்ன? மீண்டும் சிங்கள தேசத்துப் பிரதமராக ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக் கட்டில் ஏறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், அதற்குப் பரிவட்டம் கட்டுவோருக்கும் தாங்க முடியாத பெருமை.

சிறீலங்காவின் அரசியலில் கிங்க் மேக்கேர்ஸ் (ஆட்சியாளரைத் தீர்மானிப்பவர்கள்) என்ற வகிபாகத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றிருப்பதாக இராசம்பந்தரும், மதியாபரணம் ஏபிரகாம் சுமந்திரனும் உலகம் முழுவதும் பறைதட்டிக் கொண்டார்கள்.

கடந்த ஒரு வாரத்திற்கு முதல் சுவிற்சர்லாந்து சூரிச் நகரில் சுவிற்சர்லாந்து அரசாங்கத்தால் புலம்பெயர் தமிழர் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட மாநாட்டில் இதே கருத்து தமிழ் அமைப்பொன்றின் பிரதிநிதியால் முன்வைக்கப்பட்டது.

தமிழ் மக்களின் ஆதரவு இன்றி ஒக்ரோபர் சதிப்புரட்சியை ஐக்கிய தேசியக் கட்சியாலோ, அன்றி மேற்குலக நாடுகளாலோ முறியடித்திருக்க முடியாது என்று அந்தத் தமிழ் அமைப்பின் பிரதிநிதி வாதிட்டார். அவரது வாதத்தை உன்னிப்பாகக் கேட்ட சுவிஸ் வெளியுறவுத்துறை அமைச்சின் இராசதந்திரி கூறினார்: ‘இல்லையே! ரணிலின் அரசாங்கம் காப்பாற்றப்பட்டதற்கு தமிழர்களோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ காரணம் அல்ல.

அதற்குக் காரணம் சிறீலங்கா உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு. ரணிலின் ஆட்சியை சிறீசேன கலைத்தது தவறு என்று சிறீலங்கா உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்காது விட்டிருந்தால் எதுவுமே நடந்திருக்காது.

நீதிமன்றத்தின் தீர்ப்புத் தான் ரணிலின் ஆட்சி தக்க வைக்கப்பட்டதற்கு காரணம்.’

துர்ப்பாக்கியவசமாக இந்த அரசியல் யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல் நாம் ஏதோ கிங்க் மேக்கேர்ஸ் என்ற நினைப்பில் இருக்கின்றோம்.  

சரி, இப்பொழுது மீண்டும் சிங்கள தேசத்து அதிபர் தேர்தல் களத்திற்கு எமது கவனத்தைத் திருப்புவோம். இந்தத் தேர்தலில் யார் வெற்றிப் பெறப் போகின்றார்கள், யார் தோல்வியடையப் போகின்றார்கள் என்பதை தீர்மானிக்கப் போவது பெளத்த - சிங்கள மக்கள் மட்டும் தான். கோத்தபாயவை வெற்றியீட்ட வைப்பதில்லை என்று பெரும்பான்மையான சிங்கள மக்கள் தீர்மானித்தால் மட்டும் தான் எந்த வேட்பாளர் வெற்றிபெறுவார் என்பதைத் தீர்மானிப்பவர்களாகத் தமிழர்கள் இருப்பார்கள்.

இப்பொழுது சிங்கள தேசத்து அதிபர் தேர்தலைத் தமிழர்கள் புறக்கணிப்பதால் தமிழர்களுக்கு என்ன நன்மை ஏற்படும் என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம். முதலாவதாக தேர்தல் புறக்கணிப்பு வெற்றிகரமாக நிகழ்ந்தேறினால், கடந்த 2005ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் முடிவுகளை ஆயுதமுனை கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் தீர்மானித்தார்கள் என்ற உலக நாடுகளின் வாதம் தோல்வியுறும். தமிழீழ விடுதலைப் புலிகள் மீது ஏற்படுத்தப்பட்ட களங்கமும் நீங்கும்.

இரண்டாவது கோத்தபாய ஒரு சீன சார்பாளர். மேற்குலகிற்கு ஒரு நம்பிக்கை உண்டு: கடந்த காலத்தில் நடந்து கொண்டது போன்று கோத்தபாயவோ, அன்றி மகிந்தரோ நடந்து கொள்ள மாட்டார்கள் என்பது தான் அந்த நம்பிக்கை.

ஆனாலும் மேற்குலகம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், சீனாவைத் தூக்கியயறிந்து விட்டு மேற்குலகை ஆரத்தழுவும் மனோநிலையில் மகிந்தரும் சரி, கோத்தபாயவும் சரி இல்லை. ஆக கோத்தபாயவுடன் முரண்பாடுகள் ஏற்படும் பொழுது கிடப்பில் போடப்பட்ட தமிழர் பிரச்சினையை மீண்டும் மேற்குலகம் கையிலெடுக்கும்.

111

தமிழின அழிப்பிற்கான அனைத்துலக நீதி, தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகியவற்றின் அடிப்படையில் இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு என்ற தமிழர்களின் அடிப்படைக் கோரிக்கைகளில் ஓரளவு சிரத்தையைக் காட்டினால் தான் கோத்தபாயவை வழிக்குக் கொண்டு வரலாம், அல்லது அதிபர் தேர்தலின் பின் நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் ரணிலை ஆட்சிக் கட்டில் ஏற்றலாம் என்று மேற்குலகம் கணிப்பிடும் என்று நாம் கூறின் அது மிகையில்லை.

மூன்றாவது இவை தவறிப் போனாலும்கூட தமிழர் பிரச்சினையை அனைத்துலக மயப்படுத்தி அடுத்த ஐந்து ஆண்டுகளின் பின்னராவது மகிந்தரையும், கோத்தபாயவையும் ஆட்சிபீடத்தில் இருந்து அகற்றலாம் என்று மேற்குலகம் வியூகம் வகுக்கும். இதன் அர்த்தம் இனவழிப்பிற்கு நீதி கிட்டும் என்றோ, அன்றி இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கிட்டும் என்பதோ அல்ல. மாறாக கடந்த ஐந்து ஆண்டுகளாக முட்டுச் சந்தியில் முடங்கிக் கிடக்கும் தமிழர்களுக்கான அனைத்துலக நீதியும், அரசியல் தீர்வும் குறைந்த பட்சம் அடுத்த கட்டத்தை நோக்கியாவது நகரும்.

இன்று தமிழர்களிடம் ஆயுத பலம் இல்லை. எனவே அர்த்தசாத்திரத்தில் கெளடில்யர் வகுத்த எதிரிக்கு எதிரி நண்பன் என்ற யுக்தியைக் கையாண்டே தமது இலக்கைத் தமிழர்கள் அடைய முடியும். இதற்கான முதற்படி தான் சிங்கள தேசத்து அதிபர் தேர்தலைப் புறக்கணிப்பது.

(முற்றும்)

நன்றி: ஈழமுரசு

முன்னைய தொடர்கள்:

பாகம் - 01

பாகம் -0 2

பாகம் -0 3

பாகம் - 04