சிங்கள அதிபர் தேர்தலும்,தேசியத் தலைவரின் சிந்தனையும்!

செவ்வாய் செப்டம்பர் 03, 2019

மீண்டும் கட்டவிழும் வரலாறு - கலாநிதி சேரமான்

கடந்த சில வாரங்களாக ஈழத்தீவின் அரசியற் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. சிங்கள அதிபர் மைத்திரிபால சிறீசேனவின் ஆட்சிக் காலம் அதன் அந்திம நாட்களை எட்டியிருக்கும் நிலையில், மகாநாயக்க தேரர்களின் நல்லாசியுடன் அரியாசனம் ஏறி இனிவரும் ஐந்து ஆண்டுகளுக்கு லங்காபுரியை யார் ஆட்சி செய்வது என்பதற்கான குடுமிப்பிடிச் சண்டை தென்னிலங்கையில் வலுவடைந்துள்ளது.

மகிந்தரின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவிற்கும், ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நிகழலாம் என எதிர்பார்க்கப்பட்ட பலப்பரீட்சை இப்பொழுது இருவரையும் தாண்டி சஜித் பிரேமதாசா, கரு ஜெயசூரிய, அனுராகுமார திசநாயக்க என ஐந்து தலைகள் மோதும் களமாக மாறி வருகின்றது.

111

ஐக்கிய தேசியக் கட்சியின் அதிபர் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவா, சஜித் பிரேமதாசாவா அல்லது கருஜெய சூரியவா களமிறங்கப் போகின்றார்கள் என்பது இன்னும் சில வாரங்களில் உறுதியாகிவிடும்.

முன்பெல்லாம் அதிபர் தேர்தலுக்கான திருவிழா தென்னிலங்கையில் களைகட்டத் தொடங்கும் பொழுது, தமிழர் தாயகம் சோபையிழந்து காணப்படும். இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன? என்பதாக சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலைத் தமிழர்கள் புறமொதுக்கியது இதற்கு ஒரு காரணம்.

ஈழத்தீவில் தமிழர்களின் இருப்பு மீதான சுருக்குக் கயிற்றைச் சிங்கள‡பெளத்த இனவாதப் பூதம் இறுக்கும் சந்தர்ப்பமாக அதிபர் தேர்தல் அமைவதும் இதற்கு இன்னொரு காரணம்.

ஆனால் இப்பொழுது நிலைமை அப்படி இல்லை. சிங்கள அதிபரைத் தெரிவு செய்யும் போட்டியில் தமிழர்களுக்கும் காத்திரமான பங்கு இருப்பது போன்றும், இந்தச் சந்தர்ப்பத்தில் தமது வாக்குகளைச் சரியான முறையில் தமிழர்கள் பயன்படுத்தத் தவறினால், தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் சூன்யமயமாகிவிடும் என்றும் பெரும் மாயை ஒன்று கட்டியயழுப்பப்பட்டு வருகின்றது.

இவ்வாறான மாயையைக் கட்டியயழுப்பும் கைங்கரியத்தில் வெறுமனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தர் மட்டும் ஈடுபடவில்லை. தமிழ் மக்களின் இரட்சராகத் தன்னைக் காண்பிக்கும் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களும் இதே கைங்கரியத்தையே மிகவும் கனக்கச்சிதமாக அரங்கேற்றி வருகிறார்.

2005ஆம் ஆண்டு தென்னிலங்கையில் அதிபர் தேர்தலுக்கான களம் சூடுபிடித்த பொழுது இப்படித் தான் எம்மவர்களில் சிலர் தமிழர்களைச் சுற்றி மாயக் கோட்டை ஒன்றை கட்டியயழுப்ப முற்பட்டார்கள்.

அச்சந்தர்ப்பத்தில் எழுதிய கவிதை ஒன்றில் சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தல் பற்றி இவ்வாறு புதுவை இரத்தினதுரை அவர்கள் குறிப்பிட்டார்:

‘தெற்கில் மீண்டும்
திருவிழா தொடங்கியது.
கொடியேற்ற உபயம் மகிந்தாவுக்கு,
பூங்காவன உபயம் ரணிலுக்காம்.
எங்களையும்
சாமி தூக்க அழைக்கின்றனர்.
தமிழரை வெட்டித் தள்ள ஒருவன்,
சுட்டுச் சரிக்க மற்றொருவன்.
ஐம்பது வருட அனுபவத்தின் பின்னும்
பூசைக்கு ஆசைப்படலாமா?’

இந்தக் கவிதை வெளிவந்து பதினான்கு ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனாலும் பதினான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஈழத்தீவின் அரசியல் களத்தில் கட்டவிழ்ந்த நிகழ்வுகள் மீண்டும் கட்டவிழப் போவதையே இக்கவிதை வரிகளில் பொதிந்திருக்கும் கருத்துக்கள் எதிர்வுகூறுகின்றன.

2005ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் முற்றுமுழுதான தேர்தல் புறக்கணிப்பைத் தமிழர்கள் மேற்கொண்டார்கள். அன்று தேர்தல் புறக்கணிப்பு என்ற ஆயுதத்தைக் கையிலெடுத்துத் தமது அரசியல் அபிலாசைகள் என்ன என்பதை சிங்கள தேசத்திற்கும், உலக சமூகத்திற்கும் தமிழர்கள் இடித்துரைத்தார்கள்.

இதுபற்றித் பின்நாட்களில் எழுதிய கட்டுரையயான்றில் இவ்வாறு க.வே.பாலகுமாரன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்: ‘ரணிலுக்கு மட்டுமல்ல, மகிந்தருக்கும் தோல்வியையே எம் மக்கள் தம் வாக்குகளால் வாக்களியாது வாக்களித்து விட்டார்கள். எனவே வென்றவரும் எம் மக்கள் முன் தோற்றவராகி விட்டார்.’
இது பற்றித் தேர்தல் முடிந்த பின்னர் வெளியிடப்பட்ட தனது மாவீரர் நாள் உரையில் பின்வருமாறு தேசியத் தலைவர் அவர்கள் விளக்கமளித்தார்:

‘தமிழரின் தேசியத் தனித்துவத்தை அங்கீகரித்து, அவர்களுக்கு ஆட்சியதிகாரத்தைப் பகிர்ந்தளித்து, அவர்களை அரவணைத்து வாழச் சிங்களத் தேசம் மறுத்து வருகிறது. இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு, கடந்த 57 ஆண்டுகளாக இந்த அரசியற் புறக்கணிப்புத் தொடர்கிறது. வேண்டப்படாத இனத்தவராக ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு, புறந்தள்ளி வைக்கப்பட்ட மக்களாக வாழ்ந்து சலித்துப் போன தமிழர், சிங்கள ஆட்சியமைப்பையும்,

அதன் அதிகாரபீடத்தையும் ஒதுக்கிப் புறக்கணிக்கத் தீர்மானித்து விட்டனர். சிறீலங்காவின் அரச அதிபர் தேர்தலில், பெரும்பான்மையான தமிழ் மக்கள் வாக்களிக்காமை இந்தப் புறக்கணிப்பின் காத்திரமான வெளிப்பாடாகும்.

சிங்களத்தின் அரச அதிபரைத் தீர்மானிக்கும் வாக்குப் பலம் இருந்த போதும், அந்த வாய்ப்பினைப் பயன்படுத்த எமது மக்கள் விரும்பவில்லை. வேட்பாளர்கள் மீதான தனிப்பட்ட விருப்பு, வெறுப்பாகவோ, அவர்களது கட்சிகள், கொள்கைகள் மீதான தீர்ப்பாகவோ இதனைக் கருதுவது தவறு. ஒட்டுமொத்தமாகச் சிங்கள ஆட்சியமைப்பில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆழமான விரக்தியினதும், நம்பிக்கையீனத்தினதும் வெளிப்பாடாகவே இத் தேர்தற் புறக்கணிப்பு நிகழ்ந்துள்ளது.

தமிழரின் அரசியற் போராட்ட வரலாற்றில் இதுவொரு பாரதூரமான திருப்பத்தைச் சுட்டிக் காட்டுகிறது. சிங்கள அரசியல் ஆட்சிமுறையில் நம்பிக்கையிழந்த தமிழ் மக்கள், தனிவழி சென்று தமது அரசியல் தலை
விதியைத் தாமே நிர்ணயிக்கத் துணிந்து விட்டனர் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.’

அன்று தமிழர் தேசமும், அவர்களை வழிநடத்திய தலைமையும் எடுத்த முடிவைக் கண்டு ‘குய்யோ, முறையோ’ என்று சிங்கள தேசத்தின் ஒரு தரப்பு கூச்சலிட்டது. இதற்கான விளைவுகளைத் தமிழர் தலைமை சந்தித்தே ஆக வேண்டும் என்று அமெரிக்கா எகிறிக் குதித்தது. கூடவே இந்தியாவும், ஐரோப்பிய ஒன்றியமும், தமது ஆற்றாமையை பதிவாக்கின.

இங்கு நாம் ஒரு விடயத்தைப் புரிந்தாக வேண்டும். ஈழத்தீவை விட்டு பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சி அகன்ற 04.02.1948 முதல் அங்கு நடைபெற்ற ஒவ்வொரு தேர்தல்களையும் தென்னாசியப் பிராந்திய வல்லரசான இந்தியாவும், உலக வல்லரசான அமெரிக்காவும், உலகளாவிய ரீதியில் திறந்தவெளி முதலாளித்துவப் பொருண்மியத்தை தக்க வைத்து வலுப்படுத்துவதைத் தமது தலையாய கடமையாகக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா உள்ளடங்கலான ஏனைய மேற்குலக நாடுகளும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.

111

இந்திய வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்களைப் பொறுத்த வரை பாரதம் என்பது வெறுமனவே இன்றைய இந்தியா என்ற நாட்டை மட்டும் குறிக்கும் சொற்பதம் அன்று. அவர்களைப் பொறுத்தவரை பாரதம் என்பது இந்திய உபகண்டத்தைக் குறிக்கும் சொற்பதம். இதன் வெளிப்பாடாகத் தான் 26.10.1947 அன்று காஷ்மீர் என்ற இராச்சியத்தை தனது இறையாட்சிக்கு உட்பட்ட மாநிலமாக இந்தியா கையகப்படுத்திக் கொண்டது.

இதே நிகழ்ச்சித் திட்டத்தின் வெளிப்பாடாகவே சீக்கிம் எனப்படும் இராச்சியத்தையும் 09.04.1975 அன்று தனது இறையாட்சிக்கு உட்பட்ட இன்னுமொரு மாநிலமாக இந்தியா கபளீகரம் செய்து கொண்டது.

16.12.1971 அன்று வங்கதேசத்திற்கு தனது ஆயுதப் படைகளை அனுப்பி வைத்து அங்கிருந்து பாகிஸ்தான் படைகளைப் புறமுதுகிட வைத்த பொழுதும் கூட இப்படியான நிகழ்ச்சித் திட்டத்துடன் தான் வங்கதேசத்திற்குள் இந்தியா களமிறங்கியது.

ஆனாலும் வங்காளிகளின் எதிர்ப்பையும், அனைத்துலக அரங்கில் எழக்கூடிய நெருக்கடிகளையும் கருத்திற் கொண்டு அன்றைய காலகட்டத்தில் அவ்வாறு செய்யாது இந்திரா காந்தி அம்மையார் அமைதி காத்தார். ஆனால் அதற்கான சந்தர்ப்பம் எதிர்காலத்தில் கிடைத்தால், அதனை செயற்படுத்துவதற்கு இந்தியா தயங்கப் போவதில்லை.

இது நேப்பாளம், பூட்டான், பாகிஸ்தான், சிறீலங்கா, மாலைதீவு ஆகிய நாடுகளின் விடயத்திலும் பொருந்தும்.
இது பற்றி 15.12.1954 அன்று கொழும்பில் இடம்பெற்ற அனைத்துலக சட்ட ஒன்றியத்தின் இலங்கைக் கிளையின் மாநாட்டில் உரையாற்றும் பொழுது நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் என்ற கோதாவில் பின்வருமாறு ஜூனியஸ் றிச்சார்ட் ஜெயவர்த்தனா அவர்கள் குறிப்பிட்டிருந்தார்:

‘உலகின் பெரிய நாடுகளில் ஒன்றாக இந்தியாவை நாம் கருதினாலும், தமக்கு உரிமை இல்லாத இடங்களில் உரிமையை நிலைநாட்ட முற்படும் பாத்திரத்தையோ அல்லது சலுகைகள் இல்லாத இடங்களில் சலுகைகளை நிலைநாட்ட முற்படுவதையோ, அல்லது ஏனைய நாடுகளின் உரிமைகளைப் பறிப்பதற்கு இந்தியா முயல்வதையோ நாம் ஏற்கப் போவதில்லை.’

111

ஆனாலும் அன்று தொட்டு இன்று வரை தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் அகன்ற பாரதக் கனவிற்கு தடையாக இருப்பது பாகிஸ்தானும், சிறீலங்காவும் தான். பொருளாதார ரீதியிலும் சரி, இராணுவ ரீதியிலும் சரி, இந்தியாவை விடப் பலம்வாய்ந்த நாடுகளின் அரவணைப்பைப் பெற்றதன் மூலம் இந்தியாவின் அகன்ற பாரதக் கனவிற்கு இந்த இரு நாடுகளும் இடையூறாகவே இருந்து வந்துள்ளன.

பனிப்போர்க் காலத்தில் அமெரிக்காவின் தலைமையிலான மேற்குலகின் அரவணைப்பைப் பெற்றதன் மூலம் இந்தியாவிற்கு ஒரு பெரும் சவாலாக பாகிஸ்தான் விளங்கியது.

இதே போன்று அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகளின் அரவணைப்பைப் பெற்றதன் மூலம் பனிப்போர் காலத்தில் இந்தியாவின் தென்கோடியில் அதற்கு ஒரு தலையிடியாக இலங்கை (சிறீலங்காவாக பெயர் மாற்றப்படுவதற்கு முன்னர்) விளங்கியது. அதிலும் குறிப்பாக டொன் ஸ்ரீபன் சேனநாயக்கா, டட்லி சேனநாயக்கா, சேர் ஜோன் கொத்தலாவெல, ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் ஏறத்தாழ அமெரிக்காவின் கைப்பொம்மையாக செயற்பட்டதன் மூலம் இந்தியாவிற்குத் தலையிடியாக இலங்கை (சிறீலங்கா) விளங்கியது.

மறுபுறத்தில் ஈழத்தீவை விட்டு பிரித்தானிய ஏகாதியபத்திய ஆட்சி நீங்கிய பின்னரும், அங்கு தமது கேந்திர நலன்களுக்கும், திறந்தவெளிப் பொருண்மியக் கொள்கைகளுக்கும் இசைவான அரசாங்கங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதில் அமெரிக்காவும், ஏனைய மேற்குலக நாடுகளும் அதீத கவனம் செலுத்து வந்துள்ளன.

சொலமன் வெஸ்ற் றிஜ்வே டயஸ் பண்டாரநாயக்கா, சிறீமாவோ பண்டாரநாயக்கா ஆகிய இடதுசாரி முலாம் பூசிப்பட்ட மேலைத்தேய எதிர்ப்புவாதிகளின் ஆட்சிக்காலத்தில் தமது கண்காணிப்பு வலையத்தில் இருந்து விலகி, சோவியத் ஒன்றியத்தின் உப நாடாக இலங்கை மாறிவிடக் கூடும் என்று மேற்குலகம், அதிலும் குறிப்பாக அமெரிக்கா, அங்கலாய்ப்பிற்கு ஆளாகினாலும், சுதந்திரத்திற்குப் பின்னரும் இலங்கையின் அரசுத் தலைவராக பிரித்தானியாவின் எலிசபெத் மகாராணியார் (முதலில் ஆறாவது ஜோர்ஜ் மன்னர்) திகழ்ந்தது மேற்குலகைப் பொறுத்தவரை ஆசுவாசமளிக்கும் ஒன்றாகவே இருந்தது.  

எனினும் முடியாட்சி முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து, இலங்கைக்கு சிறீலங்கா என்று பெயர்மாற்றம் செய்து, அதனைக் குடியரசாக 22.05.1972 அன்று சிறீமாவோ பண்டாரநாயக்கா மாற்றியமைத்த பொழுது, செய்வதறியாது மேற்குலகம் திணறிப் போனது உண்மை தான்.

அதிலும் அணிசேராக் கொள்கை என்ற பெயரில் இந்தியாவினதும், சோவியத் ஒன்றியத்தினதும் பக்கம் சிறீமாவோ பண்டாரநாயக்கா சாய்ந்தது அன்று மேற்குலகைப் பொறுத்தவரை ஒரு சினமூட்டும் செய்கையாக அமைந்தது.

இதன் பின்னர் ஐந்து ஆண்டுகள் கழித்து 21.07.1977 அன்று ஈழத்தீவில் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத் தேர்தல் இந்தியாவிற்கும், மேற்குலகிற்கும் இடையிலான பலப்பரீட்சையாக மாறியதும், அதில் மேற்குலகின் செல்லப்பிள்ளையான ஜே.ஆர்.ஜெயவர்த்தனா வெற்றி பெற்றதும் வரலாறு.

இந்தியாவிற்கும், மேற்குலகிற்கும் இடையில் நிலவிய முரண்பாடுகள் புத்தாயிரம் ஆண்டில் நீங்கி, 2001ஆம் ஆண்டு உலகப் பயங்கரவாதத்திற்கு எதிரான போரை அமெரிக்கா தொடுத்த பொழுது தேனிலவாக முகிழ்த்ததை இங்கு விபரிக்கத் தேவையில்லை.

இன்று இந்தியாவும், மேற்குலகும் நேசத் தரப்புக்கள் ஆகிவிட்டன. தென்னாசியப் பிராந்தியத்தில் முரண்பாடுகளைத் தவிர்த்தே இவை செயற்படுகின்றன.

ஆனால் உலகளாவிய ரீதியில் அமெரிக்கா உள்ளடங்கலான மேற்குலகிற்கும், தென்னாசியப் பிராந்தியத்தில் இந்தியாவிற்கும் ஒரு சவாலாக சீனா மாறி வருகின்றது. ‘உறங்கிக் கிடக்கும் சீனா என்ற பூதத்தைத் தட்டியயழுப்பி விடாதீர்கள்’ என்று இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் நெப்போலியன் கூறியது இப்பொழுது தான் மேற்குலகிற்கும், இந்தியாவிற்கும் உறைக்கத் தொடங்கியுள்ளது.

புத்தாயிரத்தின் முதல் தசாப்தத்தின் கடைக்கூறில் தொடங்கிய சீனாவின் திருப்பள்ளியயழுச்சியின் தொடர்ச்சியாக இன்று சீனாவிற்கும், இந்தியா-மேற்குலகம் என்ற அணிக்கும் இடையிலான பலப்பரீட்சைக் களமாக ஈழத்தீவு மாற்றம் பெற்று வருகிறது.

இதன் பின்புலத்தில் வைத்துத் தான் இன்னும் சில மாதங்களில் நிகழப் போகும் சிங்கள தேசத்தின் அதிபர் தேர்தலையும், அதில் களமிறங்க இருக்கும் வேட்பாளர்களையும் நாம் பார்க்க வேண்டும். ஒருபுறத்தில் இந்தியா-மேற்குலகம் ஆகியவற்றின் கைப்பாவைகளாக திகழும் இரா.சம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரன் போன்றோரும் (ஐக்கிய தேசியக் கட்சிக்கு சாமரம் வீசுவோர்), மறுபுறத்தில் சீனக் கைப்பாவைகளாக விளங்கும் மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச ஆகியோரின் அடிவருடிகளான டக்ளஸ் தேவானந்தா, துரோகி கருணா உள்ளடங்கலானோரும் தமிழர் தேசத்தின் அரசியல் தலைவிதியை அடகு வைப்பதற்கான பூர்வாங்க நடவடிக்
கைகளில் இறங்கியிருக்கும் நிலையில், தேசியத் தலைவரின் சிந்தனையை வழிகாட்டியாகக் கொண்டு தமது அரசியல் வியூகங்களை வகுக்க வேண்டியவர்களாக தமிழர்கள் உள்ளனர்.

(தொடரும்)

நன்றி: ஈழமுரசு