சிங்கள அதிபர் தேர்தலும்,தேசியத் தலைவரின் சிந்தனையும்-03

செவ்வாய் அக்டோபர் 01, 2019

தமிழர்கள் என்ன ஏமாந்த சோணகிரிகளா?-‘கலாநிதி’ சேரமான்

20.10.1982 அன்று நடைபெற்ற சிறீலங்காவின் முதலாவது அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகளை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா முன்னெடுத்த விதத்திற்கும், வரும் 16.11.2019 அன்று நடைபெறப் போகும் அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகளை அவரது மருமகனான ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மேற்கொள்வதற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் கிடையாது.

இரண்டு தேர்தல்களுக்கும் இடையில் அப்படி ஒரு பாரிய வேறுபாடு உண்டென்றால், இம்முறை நடைபெறும் அதிபர் தேர்தலில் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க அவர்கள் களமிறங்கவில்லை என்பது தான் அது.

20.10.1982 அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகளை வடதமிழீழத்தில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தொடங்குவதற்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் அவரது அமைச்சர்களான சிறில் மத்தியூ, காமினி திசநாயக்கா ஆகியோரின் வழிநடத்தலில் யாழ்ப்பாண நூலகம் எரியூட்டப்பட்டது. யாழ்ப்பாண நகருக்குத் தீவைக்கப்பட்டது.

அது நடந்து மூன்று மாதங்களுக்குள் ஈழத்தீவு தழுவிய ரீதியில் இனக்கலவரம் என்ற போர்வையில் திட்டமிட்ட தமிழின அழிப்பு ஜே.ஆரால் அரங்கேற்றப்பட்டது.இதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் பலியானார்கள். ஆயிரக்கணக்கான தமிழர்கள் காயமடைந்தார்கள். கோடிக்கணக்கான தமிழ்ச் சொத்துக்கள் அழிக்கப்பட்டும், உடமைகள் சூறையாடப்பட்டும் தமிழர்களின் பொருளாதார வாழ்வு சிதைக்கப்பட்டது.

1981 ஆவணி இனவழிப்பின் தாக்கம் ஈழத்தீவு ரீதியில் தமிழர்களால் உணரப்பட்டாலும், அதனால் அதிக அளவில் பாதிக்கப்பட்டது மலையகத் தமிழர்கள் தான். அதிலும் இரத்தினபுரி, காகவத்தை, பலாங்கொடை ஆகிய பகுதிகளில் வாழ்ந்த இந்திய வம்சாவழித் தமிழர்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டார்கள்.

இவ்வாறான சூழமைவில் தான் 20.10.1982 அன்று நடைபெறவிருந்த அதிபர் தேர்தலுக்கான பரப்புரைகளை முன்னெடுப்பதற்கு என்று 29.09.1982 அன்று யாழ்ப்பாணத்தை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா சென்றடைந்தார்.

1111

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாண நூலகத்தையும், யாழ்ப்பாண நகரத்தையும் தீவைத்துக் கொளுத்தி விட்டு, அது நடந்து மூன்று மாதங்களுக்குள் ஈழத்தீவு தழுவிய ரீதியில் இனவழிப்பை அரங்கேற்றிய பின்னரும் யாழ்ப்பாணம் சென்று தமிழர்களிடம் வாக்குப் பிச்சை பெறலாம் என்று ஜே.ஆர் நம்பியிருந்தார் என்றால் அதற்கு காரணம் அன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் தான்.

அன்றைய காலகட்டத்தில் தேர்தலைப் புறக்கணிப்பதாக அமிர்தலிங்கமும், அவரது பரிவாரங்களான தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏனைய தலைவர்களும் அறிவித்திருந்தாலும், தேர்தல் புறக்கணிப்பை நடைமுறைப்படுத்துவதற்கான பரப்புரைகள் எதனையும் அவர்கள் மேற்கொள்ளவில்லை. இது ஜே.ஆருக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

ஏனென்றால் அன்று ஒரு குழப்பமான அரசியல் - பொருளாதார சூழமைவில் தான் தமிழர்கள் இருந்தார்கள். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சிறீமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாடு, ‘பாண் இல்லை என்றால் கேக்கை சாப்பிடுங்கள்’ என்று திமிர்த்தனமாக அவர் பேசிய பேச்சுக்கள் எல்லாம் சிறீமாவோ பண்டாநாயக்காவின் சிறீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் ஈழத்தீவின் ஆட்சியதிகாரத்தில் அமர்த்தக்கூடாது என்ற மனோநிலைக்குத் தமிழர்களை இட்டுச் சென்றிருந்தது.

சிறீமாவோவின் குடியுரிமையை ஜே.ஆர் பறித்திருந்ததால், 1982 அதிபர் தேர்தலில் அவரால் போட்டியிட முடியவில்லை என்றாலும், அவரது சார்பில் யஹக்டர் கொப்பேக்கடுவ என்பவரே களமிறங்கினார்.

எது எப்படியோ, பழைய மொந்தையில் புதிய கள் என்ற கதையாகவே யஹக்டர் கொப்பேக்கடுவ அவர்களைத் தமிழ் மக்கள் பார்த்தார்கள்.

ஜே.ஆர் ஒரு இனவெறியன் என்பதை அவர் அரங்கேற்றிய இனவழிப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் உணர்ந்திருந்தார்கள். ஆனாலும் இதே கண்ணோட்டத்துடன் எல்லாத் தமிழர்களும் ஜே.ஆரை அணுகவில்லை. அதிலும் கொழும்பு மேட்டுக்குடி தமிழர்களும், யாழ்ப்பாணத்துக் கனவான்களும் ஜே.ஆரின் இனவழிப்பு நடவடிக்கைகளுக்கு புதிய கற்பிதங்களை வழங்கிக் கொண்டிருந்தார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை ஜே.ஆர் நல்லவர். ஐக்கிய தேசியக் கட்சியில் அவரைச் சூழ்ந்திருந்த சிறில்மத்தியூ, காமினி திசநாயக்கா போன்றவர்கள் தான் இனவாதிகள். ஜே.ஆரின் ஆட்சியில் கலவரங்கள் என்ற போர்வையில் தமிழ் மக்களுக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகள் எல்லாம் ஜே.ஆரின் கையை மீறி நடந்த செயல்கள் என்று தான் அவர்கள் வியாக்கியானம் அளித்தார்கள்.

அவர்களைப் பொறுத்தவரை ஜே.ஆரா? சிறீமாவோவா? என்ற தெரிவில் ஜே.ஆரே சிறந்தவராகத் தென்பட்டார். அதைவிட சிறீமாவோவின் மறுமுகமான யஹக்டர் கொப்பேக்கடுவ ஆட்சிக்கு வந்தால் நாட்டில் பசியும், பட்டினியும் தாண்டவமாடும் என்ற கருத்தையும் தமிழ் மக்களிடையே அவர்கள் விதைக்க முற்பட்டார்கள்.

ஏறத்தாழ இதே நிலைப்பாட்டைத் தான் அன்று அமிர்தலிங்கமும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஏனைய தலைவர்களும் கொண்டிருந்தார்கள். அவர்களைப் பொறுத்தவரை சிறீமாவோவா? ஜே.ஆரா? என்ற தெரிவில் ஜே.ஆரே சிறந்தவராகத் தென்பட்டார்.

1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழீழத் தனியரசை அமைப்பதற்கு மக்களாணை கேட்டுத் தாம் வெற்றிபெற்றிருந்தாலும், ஜே.ஆருடன் பேசுவதன் மூலம் குறைந்த பட்சம் மாவட்ட சபைகளுக்கான தீர்வையாவது தாம் பெற்றுக் கொள்ளலாம் என்ற கருத்து அமிர்தலிங்கத்திற்கும், கூட்டணித் தலைவர்களுக்கும் இருந்தது.

அதைவிட ஜே.ஆரின் ஆட்சியில் தனக்குக் கிடைத்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இழப்பதற்கும் அமிர்தலிங்கம் விரும்பவில்லை.

அதே போன்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற கோதாவில் தாம் அனுபவித்துக் கொண்டிருந்த சலுகைகளை இழப்பதற்குக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்கும் அறவே விருப்பம் இல்லை.

அதேநேரத்தில் ஜே.ஆரை ஆதரித்துப் பரப்புரை செய்தால், அதன் விளைவாக ஜே.ஆரின் இனவழிப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் வாக்குகளை அடுத்த தேர்தல்களில் தாம் இழக்க நேரிடும் என்ற அச்சமும் அமிர்தலிங்கத்திற்கும், அவரது பரிவாரங்களுக்கும் இருந்தது.

இவ்வாறான பின்புலத்தில் அதிபர் தேர்தலைப் புறக்கணித்து விட்டு, வாளாவிருப்பது தான் அன்றைய காலகட்டத்தில் தமக்கு உசிதமாக இருக்கும் என்று அமிர்தலிங்கமும் அவரது பரிவாரங்களும் கருதினார்கள்.    

அக் காலகட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மாற்றீடான நிலைப்பாட்டை ஒரு தமிழ் அரசியல்வாதி எடுத்திருந்தார் என்றால், அவர் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் மட்டும் தான். முழு அளவிலான தேர்தல் புறக்கணிப்பிற்கான நடவடிக்கைகள் எவற்றிலும் இறங்காது அமிர்தலிங்கமும், அவரது தமிழர் விடுதலைக் கூட்டணியினரும் வாளாவிருப்பது தமிழர்களின் வாக்குகள் இனவெறியனான ஜே ஆருக்கு விழுவதிலேயே முடியும் என்பது அவருக்கு நன்கு புரிந்திருந்தது.

எனவே இதற்கு மாற்றீடாக அவர் தேர்ந்தெடுத்த வழி சிறீலங்கா அதிபர் தேர்தலில் தானும் ஒரு வேட்பாளாராகக் களமிறங்குவது தான். அவருக்குத் தெரியும், சிறீலங்கா அதிபர் தேர்தலில் களமிறங்குவதால் தான் ஒரு பொழுதும் வெற்றி பெறப் போவதில்லை என்பது.

அதேநேரத்தில் ஜே.ஆருக்கு விழ இருந்த வாக்குகளைத் திசைதிருப்புவதன் மூலம் எல்லாம் இயல்புநிலையில் இருக்கின்றது என்று உலக சமூகத்திற்கு ஜே.ஆர் காட்டி வந்த பிம்பத்தை உடைக்கலாம் என்று அவர் கருதினார்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்த பொழுது 173,934 வாக்குகளை மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்கள் பெற்றிருந்தார். அதில் 87,263 வாக்குகள் யாழ்ப்பாணத் தேர்தல் தொகுதியில் மட்டும் அவருக்குக் கிடைத்திருந்தன.

111

இறுதியில் யஹக்டர் கொப்பேக்கடுவவை தோற்கடித்து தேர்தலில் ஜே.ஆர் வெற்றி பெற்றிருந்தாலும், தான் எதிர்பார்த்த அளவிற்குத் தமிழ் மக்களின் வாக்குகளை அவரால் பெறமுடியவில்லை. அதற்கு தமிழ் மக்கள் தரப்பில் மாமனிதர் குமார் பொன்னம்பலம் களமிறங்கியது ஒரு காரணம் எனலாம்.

அதேநேரத்தில் ஜே.ஆரும் சரி, யஹக்டர் கொப்பேக்கடுவவும் சரி தமிழ் மக்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வாக்குகளைப் பெற முடியாமல் போனதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்த ஒரு இராணுவ நடவடிக்கை காலாக அமைந்தது எனக் கூறின் அது மிகையில்லை.  

29.09.1982 அன்று அதிகாலை. தேர்தல் பரப்புரைக்காக யாழ்ப்பாணத்தை ஜே.ஆர் வந்தடைந்த பொழுது அடுத்தடுத்து எழுந்த வெடியோசைகளால் யாழ்ப்பாணமே அதிர்ந்தது. ஆம், பொன்னாலை பாலத்தில் பயணித்த சிறீலங்கா கடற்படையின் வாகனத் தொடரணிகளை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட நிலக்கண்ணிவெடித் தாக்குதல் ஏற்படுத்திய அதிர்வலைகளே யாழ்ப்பாணத்தையும், ஜே.
ஆரையும் அதிர வைத்தது.

இது பற்றிப் பின்நாட்களில் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வ ஆவணம் ஒன்றில் பின்வருமாறு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பதிவு செய்திருந்தார்:

‘தனது ஐந்து ஆண்டுகால ஆட்சியில் பயங்கரவாதத்தையும், ஒடுக்குமுறையையும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட இனவெறியன் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா, ஜனாதிபதி தேர்தலில் தனக்கு வாக்களிக்குமாறு பிரசாரம் மேற்கொள்ள முதற்தடவையாகத் தமிழ்ப் பகுதிகளுக்கு விஜயம் செய்தார்.

சந்தர்ப்பவாதிகளான தமிழர் விடுதலைக் கூட்டணியினர், ஜனாதிபதித் தேர்தலைப் பகிஷ்கரிக்கப் போவதாக அறிவித்திருந்த போதிலும் பகிஷ்கரிப்பினை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யத் தவறியதால், ஒரு வகையில் ஜெயவர்த்தனாவிற்கு மறைமுகமான ஆதரவு நல்கினர். தமிழர் விடுதலைக் கூட்டணி தனது சந்தர்ப்பவாதக் கொள்கையைக் கடைப்பிடித்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவு வழங்கிய போது, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது திட்டவட்டமான எதிர்ப்பைக் காட்டச் செயலில் இறங்கியது.

ஜெயவர்த்தனா யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த அதே தினத்தன்று, 1982 செப்டெம்பர் 29ஆம் திகதி, பொன்னாலை பாலத்திற்கருகில் வரிசையாக வந்து கொண்டிருந்த கடற்படை வாகனங்களைச் சிதைத்து அழிக்க எமது கெரில்லா வீரர்கள் முயற்சி மேற்கொண்டனர். எம் வீரர்கள் வைத்த நிலக்கண்ணி வெடித்து பாலத்திற்குப் பெரும் சேதம் விளைவித்த போதும், கடற்படையினரின் வாகனங்கள் சேதம் ஏற்படாது மயிரிழையில் தப்பிக் கொண்டன.’

அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை சிங்களப் படைகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத பொழுதும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவையும், சிங்கள அரச இயந்திரத்தையும் ஆட்டம் காண வைத்தது. அதுவும் தேர்தல் பரப்புரைகளுக்காக ஜே.ஆர் யாழ்ப்பாணத்தில் நின்ற வேளையில் நடந்த தாக்குதல், ஜே.ஆரின் யாழ்ப்பாண வருகையைத் தமிழர்கள் விரும்பவில்லை என்ற செய்தியை உலகிற்கு இடித்துரைத்தது.

தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரத்திற்கு எந்தச் சிங்கள இனவெறியன் வந்து வாக்குப் பிச்சை கேட்டாலும், அதற்குத் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்ற செய்தி உரைக்கப்பட்டது.

இனி, எதிர்வரும் அதிபர் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காகத் தனது மாமனாரான ஜே.ஆரின் வழியில் எவ்வாறான நகர்வுகளில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட்டுள்ளார் என்பதை பார்ப்போம்.

சிறீலங்காவின் அதிபராகத் தான் கொலுவிருக்க வேண்டும் என்பது ரணில் விக்கிரமசிங்கவின் நீண்ட நாள் கனவு. 09.11.1994, 21.12.1999, 17.11.2005 என மூன்று தடவைகள் அதிபர் தேர்தலில் களமிறங்கித் தோற்றுப் போன ரணில் விக்கிரமசிங்கவிற்கு மீண்டுமொரு தடவையாவது தேர்தலில் களமிறங்கி வெற்றிவாகை சூட வேண்டும் என்று தீராத ஆசை உண்டு.

ஆனாலும் என்ன செய்வது, அவரை அதிபராக்க வேண்டும் என்ற எண்ணம் சாதாரண சிங்கள வாக்காளர்களுக்குக் கிடையாது. அதிபர் தேர்தலில் தான் களமிறங்கினால் தனக்குத் தோல்வி நிச்சயம் என்பதை உணர்ந்து தான் 26.01.2010 அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் தனது கட்சியின் சார்பில் சரத் பொன்சேகாவையும், 08.01.2015 அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறீசேனவையும் ரணில் களமிறக்கினார்.

தான் விரும்பும் வேட்பாளர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றால், குறைந்த பட்சம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற கோதாவில் பிரதமர் பதவியிலாவது தான் நிலைத்திருக்கலாம் என்பது தான் அவரது நம்பிக்கை. அந்த நம்பிக்கையில் தான் இம்முறை நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் பெரும் இழுபறிக்குப் பின்னர் சஜித் பிரேமதாசாவை அதிபர் வேட்பாளாராக நியமிப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க இணங்கினார்.

111

ரணில் விக்கிரமசிங்க மீது அபிமானம் கொண்டிருக்கும் அளவிற்கு சஜித் மீது இந்தியாவிற்கும் சரி, மேற்குலக நாடுகளுக்கும் சரி அபிமானம் இல்லையயன்றாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் ரணில் இருந்தால் பிரச்சினையில்லை என்பதே அவற்றின் நிலைப்பாடாகும்.

இவ்வாறான பின்புலத்தில் வரும் அதிபர் தேர்தலில் எப்படியாவது சஜித்தை வெல்ல வைக்க வேண்டும் என்பது தான் ரணில் விக்கிரமசிங்கவிற்கு இப்பொழுது உள்ள இலக்கு. ஒரு வேளை தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றியீட்டினால் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பிரதமர் பதவியில் இருந்து தான் அகற்றப்படும் நிலை ஏற்படும் என்ற அச்சம் அவருக்கு உண்டு.

அதனால் தான் இரா.சம்பந்தரின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும், சி.வி.விக்னேஸ்வரின் தமிழ் மக்கள் கூட்டணியினதும் உதவியுடன் சஜித் பிரேமதாசாவிற்கு ஆதரவான பரப்புரைகளைத் தமிழீழ தாயகத்தில் மேற்கொள்வதற்கான ஆயத்தங்களில் அவர் இறங்கியிருக்கின்றார்.

அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமல் தொடர்ந்தும் சிறையில் வாடுகின்றனர். பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளது. சிங்களப் படைகளால் கைது செய்யப்பட்டு அல்லது கடத்தப்பட்டுக் காணாமல் போகடிக்கப்பட்ட தமிழர்களில் நிலை என்ன என்பது பற்றி இதுவரை தெளிவான பதிலை ரணில் வழங்கவில்லை.

ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் நிலங்களில் கணிசமானவை தொடர்ந்தும் சிங்களப் படைகளின் பிடியிலேயே உள்ளன. தமிழீழ தாயகத்தில் சிங்களப் படைகளின் பிரசன்னமும் குறைக்கப்படவில்லை. தமிழீழ தாயகம் முழுவதும் திட்டமிட்ட வகையில் தொடர்ந்தும் சிங்களக் குடியேற்றங்களும், பெளத்த விகாரைகளும் நிறுவப்பட்டு வருகின்றன.

இறுதி யுத்தத்தில் நிகழ்ந்த பன்னாட்டுக் குற்றங்களுக்கான நீதிவிசாரணையும், தமிழ் - சிங்கள தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வும் கானல் நீராகி விட்டன.

111

இவையயல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போன்று கடந்த வாரம் முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் கோவில் வளாகத்தில் நீதிமன்ற ஆணையையும் மீறி பெளத்த பிக்குவின் உடல் தகனம் செய்யப்பட்டுள்ளது.

இதற்குக் காரணமாக இருந்த ஞானசார தேரர் உள்ளடங்கலான பெளத்த பிக்குகளும், சிறீலங்கா காவல்துறை அதிகாரிகளும் சுதந்திரமாக நடமாடுகின்றனர். நிலைமை இப்படியிருக்கும் பொழுது தனது மாமனாரான ஜே.ஆரின் வழியில் தமிழீழ தாயகம் சென்று தமிழர்களின் தலையில் மிளகாய் அரைத்து சஜித்திற்கு வாக்குப் பிச்சை பெறலாம் என்று ரணில் கருதுகின்றார் என்றால் தமிழர்களை ஏமாந்த சோணகிரிகள் என்று அவர் கருதுகின்றார் என்பது தானே அர்த்தம்?

(தொடரும்)

நன்றி: ஈழமுரசு

முன்னைய தொடர்கள்:

பாகம் - 01

பாகம் -0 2