சிங்கள மக்களை குடியேற்றுவதற்கான பாரிய திட்டம்!!!!

சனி அக்டோபர் 10, 2020

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு,மாதவனை பகுதியில் உள்ள மேய்ச்சல்தரை காணிகளை பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அபகரிப்பதனால் அப்பிரதேச கால்நடை வளர்ப்போரின் ஜீபனோபாயத் தொழிலான பால்பண்ணைத்தொழில் பாதிப்படைந்துள்ளது.

மாவட்டத்தின் எல்லை கால்நடைகளின் மேய்ச்சல் தரைக்கென ஒதுக்கப்பட்ட காணியில் அம்பாறை, பொலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பான்மை மக்களை குடியேற்றி விவசாயம் செய்வதற்கான காணி வழங்க ஆட்சியிலுள்ள அமைச்சர்கள் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர்,மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியோரின் உதவியுடன் பௌத்த தேரர் தலைமையில் குடியேற்றம் இடம்பெறுகிறது.

இவ்விரு மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மக்களுக்கு சோளம் பயிர் செய்கை செய்வதற்கு என சுமார் மூவாயிரம் ஏக்கர் காணி கிழக்கு மாகாண ஆளுநர் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையில் கோரியுள்ளார்.

இதில் ஆயிரத்து ஐந்து நூறு ஏக்கர் காணி அம்பாறை மாவட்டத்திற்கும் ஏனைய ஆயிரத்து ஐந்து நூறு ஏக்கரும் பொலநறுவை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையினர் இணக்கம் தெரிவித்துள்ளது.

2010ஆம் ஆண்டு தொடக்கம் இப்பகுதிக்கு வந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் இப்பகுதிகளில் காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கை முன்னெடுத்துவந்த நிலையில் 2015ஆம் ஆண்டு முன்னாள் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் ஆகியோர் எடுத்து நீதிமன்ற நடவடிக்கையின் போது அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்பட்டது.

எனினும், கடந்த ஜனவரி மாதம் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபாய ராஜபக்ஷ வெற்றிபெற்றதன் பின்னர் இரு மாவட்டங்களையும் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்கள் மேச்சல்தரை காணியை நோக்கி அத்துமீறிய படையெடுப்பi மேற்கொள்ளத் ஆரம்பித்தனர்.

அம்பாறை மாவட்டத்தின் தெஹித்தகண்டிய பிரதேசத்தில் இருந்து வந்த பௌத்த பிக்குவான மகாவன்வெலா ஆரியவன்ச தலைமையிலான குழுவில் 106 குடும்பங்களுக்கு 5 ஏக்கர் காணி வீதம் விவசாய செய்கைக்கு தர வேண்டும் என கூறுகின்றார்.

இவர்கள் அம்பாறை மாவட்டத்தின் தெஹித்தகண்டி பிரதேச செயலாளர் பிரிவிலிருந்துவந்து மட்டக்களப்பு மாவட்டக்களப்பு மாவட்டத்தின் நிர்வாகப்பிரிவுக்குள் அத்துமீறி குடியேற முற்படுவதனால், மாவட்டத்தின் நிர்வாக நடவடிக்கையும் பாதிப்படைகிறது.

இப்பகுதி தங்களின் நிலம் என்றும் மாடுகளை இப்பகுதியில் மேயவிடவேண்டாம் எனவும் மாடுகளை அங்கிருந்து கொண்டுசெல்லுமாறும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் அச்சுறுத்தல் விடுக்கின்றனர்.

அதுமாத்திரமல்ல, கிழக்கு மாகாண ஆளுநர் தனக்குள்ள அதிகாரத்தைப்பயன்படுத்தி இரு மாவட்டங்களையும் சேர்ந்த பெரும்பான்மை மக்களை குடியேற்ற முழுமையான நடவடிக்கை எடுத்துள்ளார்.

காணிகளை விவசாயத்திற்கு வழங்கினால் பண்ணையாளர்கள் முழுமையாக பாதிக்கப்படுவதுடன், மாவட்டத்தின் பால் உற்பத்தி இல்லாமல் போவதுடன் அது அரசாங்கத்தின் சுயதொழில் திட்டங்களை வெகுவாக பாதித்து, மொத்தத் தேசிய வருமானத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

எனவே உடனடியாக மேய்ச்சல் தரை காணிகளை விவசாயத்திற்கு வழங்குவதை தடுத்து நிறுத்தவேண்டும்.

500 இற்கும் மேற்பட்ட பண்ணையாளர்களின் சுமார் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகளை வளர்த்துவரும் நிலையில், குடிநீர், போக்குவரது, காட்டுயானை தாக்கம் மற்றும் முறையான சந்தைவாய்ப்புயில்லை போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவரும் நிலையில் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்களும் நிலங்களை அபகரிக்கும் போது பண்ணையாளர்களின் வாழ்வாதாரத் தொழில் முற்றுமுழுதாக பாதிக்கப்படுகிறது.

கடந்த 07.09.2020 அன்று மாவட்டச் செயலகத்தில் மகாவலி அதிகாரிகள் பண்ணையார்களையும், அரசாங்க அதிபரையும் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன்போது, 3025 ஹெக்டர் நிலப்பரப்பு மாத்திரம் பண்ணையார்களுக்கு வழங்கப்படும் என அறிவித்தனர்.

இதனை பண்ணையார்கள் நிராகரித்தனர்.எம்மிடம் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளதால் சுமார் பத்தாயிரம் ஹெக்டர் நிலப்பரப்பு வேண்டும் என அரசாங்க அதிபார் திருமதி பத்மராஜா ஊடாக கோரிக்கைவிடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லையை நிர்ணயம் செய்து வெளிமாவட்டங்களில் இருந்துவருகைதருபவர்களை தடுக்கும் நோக்கில் கடந்த 14.09.2020 அன்று எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு அம்பாறை மற்றும் பொலநறுவை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வரக்கூடாது என அறிவிக்கப்பட்ட போதிலும் கடந்த வாரம் கிழக்கு மாகாண ஆளுநர் அம்மணி அனுராதா யகம்பத் திடீரென சோளம் செய்கைத் திட்டத்தை அறிவித்து அதனுடாக சிங்கள மக்களை குடியேற்றுவதற்கான பாரிய திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார்.

எல்லைப்பகுதியில் அப்பாவி தமிழ் சிங்கள மக்களை மோதவிடும் நடவடிக்கையில் அரசியல் சக்திகள் செயற்படுவதை தடுத்து நிறுத்த அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதுடன்,மாவட்டத்தில் இடம்பெறும் காணி அபகரிப்புத் தொடர்பாக அரசியல்வாதிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.