சிங்களப் பேரினவாதத்துக்கு தீனி போட்டு விடாதீர்கள்!

வெள்ளி மே 31, 2019

தமிழ் மக்களுக்கு இனப்பிரச்சினை என்று எதுவுமில்லை. அவர்களிடம் சாதிப் பிரச்சினை தான் உள்ளது என்று சிங்கள அரசியல்வாதிகளும் பெளத்த பிக்குகளும் கூறியிருந்ததை நாம் எவரும் மறந்துவிடக்கூடாது.

இனப்பிரச்சினையின் உச்சத்தை மழுங்கடித்து;அதற்குத் தீர்வு காண்பதைத் தவிர்த்து இனப்பிரச்சினை என்ற விடயத்தைத் திசை திருப்புவதற்காக தமிழ் மக்களிடம் சாதிப் பிரச்சினைதான் உள்ளது.

அதுவே அவர்களிடம் இருக்கின்ற மிகப் பெரிய விவகாரம் என்பதாக சர்வதேச சமூகத் துக்கும் நீதியை விரும்புகின்ற சிங்கள மக்களுக்கும் எடுத்துரைப்பதில் சிங்களத் தீவிர வாதம் முனைப்புக்காட்டி வருகிறது.

இவ்வாறு இனப்பிரச்சினை என்ற விவகாரத்தை மழுங்கடிக்கும் கபட நோக்கத்துடன் சாதியப் பிரச்சினையை முன்னெடுத்த சிங்களப் பேரினவாதத்தின் விசமப் பிரசாரத்தை முறியடிக்க தமிழ் மக்கள் கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

தமிழ் மக்களுக்கு உரிமை கிடைக்க வேண்டுமென உளமார நினைக்கின்ற சிங்கள மக்கள்கூட, தமிழ் மக்களிடம் சாதியம் சார் பிரச்சினை மேலோங்கி உள்ளது என்று நினைக்குமளவுக்கு, சாதியம் பற்றிய விவகாரம் சிங்களப் பேரினவாதத்தால் தூக்கிப் பிடிக்கப்படுகிறது.

நிலைமை அதுவல்ல என்பதை நம் தரப்பு எடுத்துரைக்கின்ற போதிலும் நம் மத்தியில் சில இடங்களில் இருக்கக்கூடிய பழைமை வாதம் எங்கள் இனத்துக்குக் கரி பூசத் தலைப்பட்டுள்ளது.

ஆம்,வரணி வடக்கு சிமிழ் கண்ணகி அம்மன் ஆலயத்தில் நிலவி வருகின்ற சாதியம் சார் பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

பிரதேச செயலகம், பிரதேச சபை, இந்து கலாசாரத் திணைக்களம், சைவ சமய அமைப்புகள்,பொது அமைப்புகள் என ஏகப்பட்ட நிறு வனக் கட்டமைப்புகள் இருந்தும் இதுகாறும் சாதியம் சார் பிரச்சினை அங்கு தீர்க்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனை தருவதாகும்.

தமிழ் மக்களிடம் சாதியப் பிரச்சினைதான் உண்டு என்ற பிரசாரத்துக்கு இதுபோன்ற சம்பவங்கள் தீனி போடுவதாகவே இருக்கும்.

எனவே அன்பே சிவம் என்று அன்பை இறைவனாகப் போற்றுகின்ற சைவ சமயத்தில் சாதியம் என்ற பேதமைக்கு இம்மியும் இடம் கொடாதீர்கள்.

ஆலயம் என்பது புனிதமானது.அங்கு மனிதம் போற்றப்படுவது. பிறர் மனதை நோகடிப்பதென்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

சாதியம் என்பதால் சாதிப்போம்.செய்து காட்டுவோம் என்ற சிறுமையுடன் எவரும் செயற்படாமல் ஆண்டவன் சந்நிதியில் அனைவரும் சமன் என்பதை நிலைநாட்ட வேண்டும்.

இதற்காக மனத்தூய்மையான விட்டுக் கொடுப்பும் விதண்டாவாத வேரறுப்பும் தேவையாகிறது. எனவே எல்லோரும் சமன் என்ற உயர்ந்த பண்பாடு வரணி வடக்கில் இருந்து பிறக்கட்டும்.

அதற்காக நாம் தமிழர் என்ற உணர்வோடு ஒன்றாய் எழுவோம்.

-நன்றி வலம்புரி-