சிங்களப் படைகளின் தாக்குதலில் கை இழந்தோருக்கு செயற்கைக் கை உருவாக்கிய முல்லைத்தீவு  மாணவன்

செவ்வாய் செப்டம்பர் 17, 2019

வன்னியில் சிறிலங்கா படையினரின் தாக்குதலில் கை இழந்த தந்தையின் கஷ்ட நிலையை அவதானித்த அவரது மகனான யாழ். பல்கலைக்கழக மாணவன் செயற்கைக் கை ஒன்றை உருவாக்கி வெற்றி கண்டிருக்கின்றார். 

போரில் கைகளை இழந்தவர்களுக்கு பொருத்தக்கூடிய வகையில் இவர் செயற்கைக் கையை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இவரது இந்தக் கண்டுபிடிப்பு கை இழந்த பலருக்கு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

2009 மே 16 வரை முள்ளிவாய்க்காலில் வாழ்ந்து அவலக் காட்சிகளை நேரில் கண்டவர்...

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவியினை சேர்ந்த கணபதிப்பிள்ளை பத்மநாதன் அவர்களின் மகனான துசாபன் என்ற பல்கலைக்கழக மாணவனே இம் முயற்சியில் வெற்றிகண்டிருக்கின்றார். 

2009 சனவரி 20 ஆம் திகதி சுதந்திரபுரம் சந்தியில் அமைந்துள்ள பிள்ளையார்கோயிலுக்கு  அருகாமையில் இடம்பெற்ற சிறிலங்கா படையினரின் எறிகணைத்தாக்குதலில் துசாபனின் தந்தையார் பத்மநாதன் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர். இதில் இருவர் கொல்லப்பட்டனர். 

அன்றைய நாள் இவரின் தந்தை மற்றும் ஏனையோரை உடையார்கட்டு மருந்தகத்தில் இயங்கி வந்த நட்டாங்கண்டல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.  

போரின் போது கண் முன்னே கண்ட அவல காட்சிகள் அப்போது சிறுவனாக இருந்த துசாபனின் மனதைப் பாதித்தது. 2009 மே மாதம் 16 ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் பகுதியில் வசித்து அதன் பின்னரே இவரது குடும்பம் வெளியேறியது. 

2009 மே 16 வரை முள்ளிவாய்க்காலில் வாழ்ந்து அவலக் காட்சிகளை நேரில் கண்டவர்...

துசாபன், போர்க்காலப்பகுதியில் கைகளை இழந்தவர்களுக்காக செயற்கை கைகளை உருவாக்கும் முயற்சியில் பல வருடங்களாக ஈடுபட்டிருந்தார். சில மாதங்களுக்கு முன்னர் அதில் வெற்றியும் கண்டுள்ளார். 

தனது கல்வி முறுவுறும் நேரத்தில் கைகளை இழந்தவர்களுக்கு சென்றடையும் வகையில் செய்து கொடுக்க இருப்பதாகவும் மிகக்குறைந்த விலையில் எவ்வாறு செய்ய முடியும் என்று தற்பொழுது ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

துசாபனின் தந்தையும் மற்றும் சிலரும் 2009 சனவரி 20 ஆம் திகதி சுதந்திரபுரத்தில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் உழவியந்திரத்தில் ஏற்றப்பட்ட உடையார்கட்டு மருந்தகத்தில் இயங்கி வந்த நட்டாங்கண்டல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, அவ்விடத்தில் நின்ற சுரேன் என்பவர் எடுத்த புகைப்படம் ஒன்றும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.