சிறீலங்கா ஜனாதிபதி தேர்தலும் தமிழர்களுக்கு தேவையான இராஜதந்திர அரசியலும்!

புதன் நவம்பர் 13, 2019

எந்தவொரு நாட்டிலும் வாழ்கின்ற மக்களுக்கு அந்த நாட்டின் ஆட்சியாளர்களைத் தீர்மானிக்கும் தினம் முக்
கியமானது. அது ஒரு தேசியத் திருவிழா. அந்த மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் வரலாற்றுச் சந்தர்ப்பம். உள்ளக - வெளியகத் தொடர்புகளைப் பேணி நாட்டை வளம்படுத்தி, மக்களை வழிநடத்தக்கூடிய தலைவரைத் தேர்வு செய்வது என்பது சாதாரண விடயமல்ல.

அது ஒரு ஒன்றுபட்ட எழுச்சி. தங்களை ஆள்வதற்கான ஆட்சியாளரை அரியணை ஏற்றுவது ஆனந்தத்தை ஏற்படுத்தவல்லது.

ஆனால், தமிழர்களைப் பொறுத்தவரை அது எட்டாக்கனியாகவே உள்ளது. தாயகத்தில் மட்டுமன்றி, உலகின் எந்த மூலையில் வாழ்கின்ற தமிழ் மக்களும் தமக்கான ஆட்சியாளரைத் தீர்மானிக்க முடியாத துர்ப்பாக்கியம் மிக்கவர்களாக வாழ்ந்து வருகின்றனர். இது வேதனையானது.

உலகில் முதன் முதலாக அரசுகளைத் தாபித்து, ஏனைய இனங்களுக்கு வழிகாட்டியாக வாழ்ந்த தமிழர்கள் இன்று அந்த உரிமையை இழந்து நிற்கின்றமை கொடுமையானது. கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தில் முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க் குடி என்பது வரலாற்று ஆய்வாளர் காலத்து கருத்து.

இது புனைவு அன்று. தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையை எடுத்துரைக்கும் பாயிரம்.  உலகின் முதல் சாம்ராச்சியங்களை உருவாக்கி, உலகுக்கே அரசியல் கட்டமைப்பை எடுத்துரைத்து, அதற்கேற்ப வாழ்ந்து காட்டிய சேர, சோழ, பாண்டியர் பரம்பரையினர் இன்று அநாதைகளாக அலைகின்றனர்.

மூவேந்தர்களுக்கு பின்னர், பண்டாரவன்னியன், சங்கிலியன், எல்லாளன் போன்ற பல தமிழ் மன்னர்கள் ஈழத்தமிழர்களின் இறையாக விளங்கினார்கள். ஐரோப்பிய வல்லாதிக்கத்திற்கும் சிங்கள பேரினவாதத்திற்கும் அடிபணியாது அன்று அவர்கள் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஆட்சியை நடத்தினர். வீரம் வழுவாது ஆட்சி செய்து தமிழ் மக்களை இவர்கள் பாதுகாத்தனர்.

இவர்களின் வழியே தமிழர்களின் இறுதி மன்னனாக உருவெடுத்தவர்தான் தேசியத் தலைவர் பிரபாகரன்.

முன்னே உலக சாம்ராச்சியங்களை உருவாக்கிய, ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களைக் காட்டிலும் ஒருபடி மேலே சென்று, முப்படையுடன் கூடிய தமிழர் அரசை உருவாக்கியவர் பிரபாகரன்.

இராவணன் என்ற தமிழ் மன்னன் புட்பக விமானத்தைப் பயன்படுத்தினான் என வரலாற்றாய்வாளர்கள் கூறுவது உறுதிப்படுத்தப்படாத நிலையில், முதன் முதலில் விமானப் படையைக் கட்டியயழுப்பி தமிழர்களுக்கு பெருமை தேடித்தந்த தமிழ் மன்னன் பிரபாகரன். இன்று அவரது காலத்தில் நாம் வாழ்கின்றமை எங்களுக்கு பெருமையான விடயம்.

அந்த ஒப்பற்ற தலைவரின் தலைமையிலான ஆயுதப் போராட்டம் தற்போது மெளனிக்கப்பட்டுள்ள நிலையில், உலகத் தமிழர்களுக்கு நல்லதொரு தலைமை இல்லாத வெற்றிடம் ஏற்பட்டிருக்கின்றது. இதனால், தமிழர்களின் தலையில் துரோக அரசியல் கட்டியயழுப்பப்பட்டு வருகின்றது.

இது சரியோ, பிழையோ என்பதை ஆராய முடியாத நிலையில் தமிழ் மக்களும் இந்த துரோகிகளுக்கு பின்னால் அணி வகுக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

உறுதியாக நின்ற வேம்புகள் சரிந்து வீழ்ந்துள்ள நிலையில், நாணல் புற்களாக இருந்த தமிழ் மக்கள் காற்று சுழன்றடிக்கும் திசைக்கு தங்கள் தலைகளைத் திருப்பவேண்டிய துர்ப்பாக்கியமான நிலை ஏற்பட்டிருக்கின்றது.

தூய தமிழ்த் தேசியம் பேசுவோம் எனக் கூறுவோரும் விடுதலை அரசியல் பேசுவோரும் பலமற்று வீதிகளில் அலையவேண்டிய நிலையில் தமிழினம் இன்று ஒரு மாய உலகில் வாழத் தலைப்பட்டுள்ளது.

இந்த நிலையில்தான், ஈழத் தமிழர்களை நோக்கி மீண்டும் ஒரு தேர்தல் வியாபாரம் ஆரம்பமாகியிருக்கின்றது. சரியோ, பிழையோ தங்களுக்கு விருப்பமில்லாத ஒரு தலைவனைத் தெரிவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.

தங்கள் தலைகளில் சுமைகளைச் சுமக்க தமிழினம் தயார்படுத்தப்படுகின்றது. சிங்கள இனத்திற்கு தங்கள் கைகளாலேயே அடிமைச் சாசனம் எழுதிக்கொடுக்குமாறு தமிழர்கள் தூண்டப்படுகின்றனர்.

111 

ஆம், நவம்பர் 16 அன்று தமிழர்கள் தாம் சிங்களவர்களுக்கு அடிமை எனக் கையயாப்பம் இடுமாறு கட்டளையிடப்படுகின்றனர். இதற்கான வேலைகளை, தமிழர்களின் காவலர்கள் எனத் தங்களைத் தாங்களே சொல்லிக்கொள்ளும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செய்துகொண்டிருக்கின்றனர்.

தமிழ் இனத்திற்காக அப்பளுக்கற்ற தியாகங்களைச் செய்து, தாயகக் கனவுடன் விழிமூடித் தூங்கும்  தமிழீழத் தேசிய மாவீரர்கள், தமது உறக்கம் கலைத்து, விழி திறந்து தாம் நேசித்த மக்களையும் தேசத்தையும் ஒருகணம் பார்வையிடும் கார்த்திகை மாதத்தில் இந்த துரோக அர சியல் அரங்கேற்றப்படவிருக்கின்றது.

தமிழ்த் தேசிய ஆன்மாவை ஆட்டம் காணச் செய்யும் இந்த அராஜக வேலைத் திட்டத்தை தட்டிக்கேட்க முடியாதவர் களாக தமிழினம் கூனிக்குறுகி நிற்கின்றது.

எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டாலும் வெல்லப்போவது ஒருவர் மட்டுமே. சஜித் பிரேமதாசா அல்லது கோத்தபாய ராஜபக்ச. இவர்கள் இருவரும் உருவத்தில் மட்டுமே வேறானவர்கள். உள்ளத்தால் ஒன்றுபட்டவர்கள். சிங்கள இனவாத வெறி அவர்களிடம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கின்றது.

தமிழர்கள் சிறுபான்மையினர், இரண்டாந்தரப் பிரஜைகள் என்பதில் இவர்களில் இருவரும் உறுதியாக உள்ளனர்.  
தமிழர்கள் இந்த நாட்டின் பூர்வீகக்குடிகள், அவர்களுக்குத் தனியான மொழி, கலை, கலாசாரம், பண்பாடு என்பன உள்ளன.

அவர்கள் சுய நிர்ணய உரிமையுடன் வாழக்கூடியவர்கள் என் பதை இந்த இருவரும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

ஆகக்குறைந்தது, இணைப்பு (சமஷ்டி) ஆட்சியைக்கூட ஏற்படுத்த முடியாது என்பதில் உறுதியாக உள்ளனர்.

தமிழர்கள் இந்த நாட்டின் தேசிய இனம் என்பதை இவர்கள் எப்போதும் ஏற்றுக்கொண்டது இல்லை. தமிழர்கள் சிறுபான்மை இனம் என்பதையே இவர்கள் இப்போதும் கூறிவருகின்றனர்.

ஒரு நாட்டில் பூர்வீகமாக வாழ்ந்து, தமக்கென தனியான நிலம், தனியான மொழி, தனியான, கலாசாரம், பண்பாடு போன்ற இனத்துவ அடையாளங்களுடன் வாழும் மக்கள் கூட்டம் ஒருபோதும் அந்த நாட்டின் சிறுபான்மை இனமாக முடியாது. அது தேசிய இனம். ஆகவே, தமிழர்கள் இலங்கையின் தேசிய இனம்.

இந்த உண்மை தமிழர்களுக்கு தலைமைதாங்கும் அரசியல்வாதிகளுக்குகூட புரியாமல் இருக்கின்றதே என்பதை நினைக்கும்போது வெட்கப்படவேண்டி உள்ளது.

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான இரு வேட்பாளர்களில் எவர் ஆட்சிக்கு வந்தாலும் தமிழர்களுக்கு எந்த நன்மையும் இல்லை. சஜித் பிரேமதாசா இருக்கிற பறவையை அமைதியாகச் சென்று பிடிக்கும் குணமுடையவர். ஆனால், கோத்தபாய ராஜபக்சவோ பறக்கிற பறவையை அடுத்த நொடியில் பிடிக்கும் குணமுடையவர்.

பறவை தனது அதிகாரத்தை மீறி பறக்க முற்பட்டால் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தேனும் அதைப் பிடிப்பார். இருவரின் தேவையும் பறவையைப் பிடிக்கவேண்டியது.அவ்வளவே.

இந்தத் தேர்தலில் தமிழர்கள் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிக்கத் தூண்டப்படுகின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாயகத்தின் 8 மாவட்டங்களிலும் பிரமாண்டமான பிரச்சாரக் கூட்டங்களை நடத்த
விருக்கின்றது.

ஆக, தமிழ் மக்கள் வேறு எந்த மார்க்கமும் இன்றி வாக்களிக்கத்தான் போகின்றார்கள். பெரும்பாலான தமிழர்களின் விரும்பியோ விரும்பாமலோ சஜித் பிரேமதாசவிற்கு வாக்களிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தி மிக்கவர்கள் என்ற அடிப்படையில், தமிழர்களின் வாக்குகள் மூலம் சஜித் பிரேமதாச வெல்வதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.

அவர் வென்றால், சிறிலங்காவின் அரசியல் எவ்வாறு நகரும் என்பதை நாம் இப்போதே அனுமானிக்க முடியும். சமஷ்டி என்பதற்கு தன்னிடம் அறவே இடமில்லை என அவர் தேர்தல் பிரச்சாரங்களில் வெளிப்படையாகக் கூறிவருகின்றார். ஆக, நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒற்றையாட்சி அரசியல் அமைப்பின் அடிப்படையில் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கத்திற்கான வேலைகள் தீவிரமாக முன்னெடுக்கப்படும்.

இந்த அரசியல் அமைப்பை தயாரிப்பதில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் முன்னின்று செயற்பட்டவர் என்ற ரீதியில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த அரசியல் அமைப்புக்கு ஆதரவளித்துள்ளது என்ற ரீதியில் அந்த அரசியல் அமைப்பை செயற்படுத்துவதற்கு கூட்டமைப்பும் கடுமையாக உழைக்கும்.

ஓற்றையாட்சி என்பதற்கு ஒருமித்த ஆட்சி என வியாக்கியானம் செய்து ஒற்றையாட்சி வேறு ஒருமித்த ஆட்சி வேறு என தமிழ் மக்கள் தலையில் மிளகாய் அரைத்த சுமந்திரனின் கை மீண்டும் ஓங்கும். தமிழ் மக்கள் மீண்டும் மூளைச் சலவை செய்யப்படுவர்.

புதிய அரசியல் அமைப்பு நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டால் சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும். அதன்போது தமிழ் மக்களையும் அதற்கு ஆதரவாக வாக்களிக்க வைப்பதற்காக அவர்களுக்கு மீண்டும் சலுகை அரசியல் ஆசை காட்டப்படும். கடந்த சில மாதங்களாக கம்பரெலிய திட்டம் என்பதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவிடம் பெருமளவு நிதியைப் பெற்றுக்கொண்டு தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி ஆசை காட்டிய கூட்டமைப்புக்கு மீண்டும் அப்படி நிதி வழங்கப்படும்.

அதன் மூலம் தமிழ் மக்கள் மனங்களைத் திசை திருப்ப கூட்டமைப்பு பாடுபடும்.

மேலும், சஜித் பிரேமதாசாவும் தமது தந்தையாரைப் போன்று தமிழ் மக்களுக் சில விசேட  சலுகைகளை வழங்கக்கூடும். குடியேற்றத்திட்டங்கள், இலவசத் திட்டங்கள், வறுமை ஒழிப்பு, சமுர்த்தி நிவாரணம் என பலவற்றை இலவசமாக வழங்கி தமிழ் மக்களின் மனங்களை அவர் வெல்லக்கூடும். இதன்மூலம் ஒற்றையாட்சி அரசியல் யாப்பு இலகுவாக நிறைவேற்றப்படும். மீண்டும் தமிழர்கள் தங்களுக்கு தாங்களே அடிமைச் சாசனம் எழுதிக்கொள்வர்.

இது ஒருபுறம் நடைபெற்றுக்கொண்டிருக்க, மறுபுறம் வடக்கு -கிழக்கில் காணி ஆக்கிரமிப்புக்கள், பெளத்த விகாரை அமைத்தல், படை முகாம்கள் விஸ்தரிப்பு, மகாவலி விஸ்தரிப்பு, சிங்களக் குடியேற்றங்கள் என்பன தாராளமாகவே நடைபெறும்.

ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து சில மாதங்களில் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் சஜித் பிரேமதாசா அணி வெற்றிபெற்று ஆட்சியமைத்தால் மாத்திரமே மேற்கூறப்பட்டவை சாத்தியப்படும். மாறாக, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிறேமதாசா வெற்றிபெற்று நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச அணி வெற்றிபெற்றால் மீண்டும் இழுபறி ஆட்சியே நடைபெறும்.

ஜனாதிபதித் தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றிபெற்றால், தற்போது விடுவிக்கப்பட்டு மக்கள் குடியேறாமல் இருக்கும் காணிகள் மீண்டும் ஆக்கிரமிக்கப்படலாம், வடக்கு கிழக்கில் பெளத்த விகாரை அமைப்பு, சிங்களக் குடியேற்றங்கள் வேகமாக இடம்பெறும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாக கதைப்பவர்கள், மாவீரர் தினம் உட்பட புலிகள் சார்பு நிகழ்வுகளை முன்னெடுப்பவர்கள் கைது செய்யப்படுவர் அல்லது கடத்தப்படுவர். குறிப்பாக, நாடு மீண்டும் கொந்தளிப்பான நிலைக்குச் செல்லும்.

கோத்தபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் தமது வெற்றிக்காக எதையும் செய்யத் துணிவர். சிலவேளைகளில் தமிழர் தாயகத்திலும் தென்னிலங்கையிலும் குண்டுத் தாக்குதல்கள், துப்பாக்கிச் சூட்டுப் படுகொலைகள் கூட நிகழ்த்தப்படலாம்.

இந்தத் தேர்தலில் யார் வென்றாலும் தமிழ் மக்களுக்கு நன்மை இல்லை எனக் கூறுவது ஒருபுறம் இருக்க, யார் வென்றாலும் தமிழ் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மை. ஆக, தமிழர்களுக்கு இப்போது தேவையானது இராஜதந்திர அரசியல் மட்டுமே.

அதைச் சரியாகச் செயற்படுத்த உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் முன்வரவேண்டும்.

‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

நன்றி: ஈழமுரசு