சிறீலங்கா கடற்படை 12 பேரிற்கு பிணை!

வியாழன் செப்டம்பர் 12, 2019

கொக்கிலாய் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு கடற்படை அதிகாரிகள் மற்றும் 10 சிபாய்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக நேற்று குறித்த கடற்படை வீரர்கள் 12 பேரையும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் திருகோணமலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

கடந்த ஒகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி இரவு கொக்கிலாய் கடற்பரப்பில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திடமான படகு ஒன்றை அவதானித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த படகை நிறுத்துமாறு கடற்படையினர் உத்தரவிட்ட நிலையில் அதனை பொறுற்படுத்தாமல் குறித்த படகில் இருந்தவர்கள் செயற்பட்டுள்ளனர்.

இதனால் கடற்படையினர் அந்த படகை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இந்த நிலையில் படகில் இருந்த மூன்று சந்தேக நபர்களை கடற்படை ஒகஸ்ட் 29 ஆம் திகதியன்று குச்சவெளி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதனையடுத்து திருகோணமலை துறைமுக பொலிஸார் இரண்டு கடற்படை அதிகாரிகள் மற்றும் 10 கடற்படை வீரர்களிடம் விசாரணைகளை நடத்தி அவர்களை விடுவித்தனர்.

மீண்டும் அவர்களை கடந்த ஒகஸ்ட் 30 ஆம் திகதி திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதன் பின்னர் அவர்கள் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

மேலும் திருகோணமலை பொலிஸாருக்கு மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, நேற்று முன்தினம் திருகோணமலை பொலிஸார் குறித்த 12 கடற்படை உத்தியோகத்தர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தியதற்கமைய அவர்களை இந்த மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டப்பட்டது.

இந்நிலையிலேயே அவர்கள் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டள்ளனர்.