சிறீலங்காவில் என்னதான் நடக்கிறது?

திங்கள் ஜூன் 03, 2019

சிறீலங்காவில் ஆட்சி அதிகாரம் யார் கையில்? பொதுமக்களின் பாதுகாப்பிற்கு யார் பொறுப்பு?. மகிந்த-மைத்திரி கூட்டணியில் பாதி அரசு?,ரணில் கூட்டணியில் பாதி அரசு? இருவரும் எதிரெதிர் நிலையில் செயற்படுகின்றார்கள். நடுவில் நசிபடுவது மக்கள்தான்.

போரின் பின்னர்:-

2009 மே வரையில் நடந்த போரில் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நடந்தது. இதில் மதவேறுபாடின்றிப் பெரும்பாலான சிங்கள மக்களும் பெரும்பாலான முஸ்லீம் மக்களும் அரச படையினருக்கு ஆதரவாக இருந்தனர். பெரும்பாலான தமிழ்மக்கள் மாத்திரமே விடுதலைப் புலிகள் பக்கம் நின்றனர். புலிகளுக்கு எதிரான தமிழ் ஆயுத இயக்கங்களை மட்டும் அல்லாது ஜிஹாத் எனப்படும் முஸ்லீம் தீவிரவாதிகளையும் மகிந்த அரசு  நிதி வழங்கி நிறுவனப்படுத்தி வளர்த்துப் போசித்து ஆயுதம் வழங்கிப் போரில் பயன்படுத்தியது. போரின் பின்னர் அந்த இயக்கங்களுக்கான நிதி உதவிகளை அரசு நிறுத்தியதோடு ஆயுதங்களையும் தெரிந்தவரை திரும்பப் பெற்றுக்கொண்டது. அதனால் அந்தத் தமிழ் ஆயுத இயக்கங்கள் வேறு வழியின்றி ஜநாயக நீரோட்டத்தில் கலந்துகொண்டன. ஆனால் அந்தத் தீவிர வாத முஸ்லீம் இயக்கங்கள் தொடர்ந்து உலக முஸ்லீம் தீவிர வாத அமைப்புகளின் உதவியோடு பலம்பெற்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்வரை வந்துவிட்டார்கள். அத்தோடு முஸ்லீம் நாடுகளின் உதவியோடும் இலங்கை அரச அதிகார செல்வாக்கின் காரணமாகவும் முஸ்லிம் மக்கள் நிதிவளத்தோடு கல்வியிலும் முன்னேறி சனத்தொகையிலும் அதிகரித்து (மதம் மாற்றப்பட்டோர் உட்பட) ஒரு பலமான சமூகமாக வேகமாக வளர்ந்து விட்டார்கள். தமிழிலேயே பேசி தமிழ் மக்களோடு கலந்து வாழ்ந்துவந்த முஸ்லிம்கள் இப்போது தமிழ் மக்களை விட தாம் அடைந்த தமது வளர்ச்சிக்கும் பலத்திற்கும் ஏற்ப தம்மை வேறான ஒரு சமூகமாக, பேரீச்சமரத்தோடு கூடிய அராபியக் கலாச்சாரத்துடனான ஒரு சமூகமாகக் கட்டமைத்துக் கொண்டுள்ளார்கள்.  
      
நடைபெற்ற தாக்குதலில் பெரும்பாலும் வெளிநாட்டவர் தங்கும் 3 கோட்டல்களும் கிறிஸ்த்தவர்களின் வழிபாட்டு நேரத்தில் 3 சேச்சுகளும் தாக்கப்பட்டன. அதை அவதானிக்கும் போது  இத்தாக்குதல் வெளிநாட்டு முஸ்லீம் தீவிர வாதிகளின் தேவைக்கேற்ப நடத்தப்பட்டுள்ளதையே காணலாம். சிரியாவில் தமக்கு ஏற்பட்ட தோல்விக்காக உலகில் எங்காவது ஒரு அதிர்ச்சியான தாக்குதலைச் செய்ய வேண்டிய அவசரம் அவர்களுக்கு இருந்தது. அதற்கு வாய்ப்பாக இலங்கையில் இருந்த ஆதரவான சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்தினார்கள். அதனால் தாக்குதல் வெளிநாட்டவர் மற்றும் கிறிஸ்த்தவர்களுக்கு எதிராக அமைக்கப்பட்டது.  ஆனாலும் இலங்கையில் அதை முன்னெடுத்தவர்கள் தம்மை உருவாக்கி வளர்த்த சிங்கள தரப்புக்கு சற்று ஆதரவாகவும் தமிழரின் பாதிப்பை கணக்கெடுக்காமலும் தாக்குதலை அமைத்துக் கொண்டார்கள்.  அதை முன்னெடுத்த இலங்கை முஸ்லீம் தீவிரவாதிகள் இலங்கை மக்களுக்கு குறிப்பாகத் தமிழருக்குக் தமது பலத்தைக் காட்டி பயமுறுத்தி அடக்கிவைக்க முயற்சித் துள்ளதையும் உணரலாம்.

தாக்குதலில் அரசியல்:-

உள்நாட்டில் மட்டுமன்றி இந்தியா உட்பட்ட வெளிநாட்டு எச்சரிக்கைகளை உயர் மட்ட பாதுகாப்புத் தரப்பினரும் உயர் அரசியல் வாதிகளும் அசட்டை  செய்தது; அது சிங்கள மக்களைப் பாதிக்காதென்றும் வெளிநாட்டவரைப் பாதிக்காதென்றும் இவ்வளவு பெரிய சேதங்கள் ஏற்படாதென்றும் நினைத்து ஏமாந்து விட்டதையே வெளிப்படுத்துகின்றது. மோட்டார்ச் சயிக்கிளை வெடிக்க வைத்து வெடிகுண்டுப் பரிசோதனை நடைபெற்றதையே பெரிது படுத்தாமல் இருந்து விட்டார்கள்.  வளர்த்த கடா மார்பில் பயந்தது போல நடந்துவிட்டது. கவனமெடுக்க வேண்டிய புலனாய்வுப் பிரிவினர் அரசஎதிர்ப்பு மனோபாவத்தில் அப்படி இருந்தார்களா?என்பதையும் ஆழமாகச் சிந்திக்க வேண்டும். ஆயுதப்படையினர், புலனாய்வுப் பிரிவினர் (மகிந்தகால படையணிகள்) எவ்வளவு தூரம் இன்றய அரசுக்கு விசுவாசமாக உள்ளார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.  
 
ஏப்ரல் 21 நடந்த தாக்குதலுக்கு சிங்களவரின் இயல்பான கோபத்தாலான எதிர்த் தாக்குதலாயின் அடுத்தடுத்த நாட்களில் ஆங்காங்கே இயல்பாக நடைபெற்றிருக்கும். மே 13 வரை காலமெடுத்து ஒரே நாளில் ஒரே நேரத்தில் பல இடங்களில் தாக்குதல் நடந்ததென்றால் நிட்சயமாக அது ஒரு பலமான அரசியற் சக்தியின் அவ்வளவு நாள் தயார்ப்படுத்தலில் அரசியல் நோக்கத்திற்காக செய்யப்பட்டிருப்பதைக் காணலாம். இப்படியான மக்களின் அவலத்திலும் நாட்டின் பொருளாதார அழிவிலும் அரசியல் லாபம் பெற விரும்புவது யார்?. நாடு எக்கேடு கெட்டால்  என்ன மக்கள் எப்படி அழிந்தால் என்ன தாம் அதிகாரத்திற்கு வந்துவிட எதையும் செய்யத் தயார் என்பதை நிரூபித்து ஒக்ரோபர் கவிழ்ப்புக்குப் பின் மீண்டும் ஒருமுறை முயற்சித்துள்ளார்கள். இனியும் முயற்சிப்பார்கள்.  மக்கள் அதை புரிந்து கொள்வார்களா?. ஆனால் அதே கவிழ்ப்பாரை மீண்டும் பதவிக்கு கொண்டுவர சில தமிழர் (மகிந்தவின் கட்சிகள்) நேரடியாகவும் சிலர் (மாற்றுத் தலைமை) மறைமுகமாகவும் படாத பாடு படுகிறார்கள் என்பதை நாம் புரிந்துகொண்டோமா?.

தாக்குதலின் பின் விளைவுகள்:-  

இன்றய நிலையில் முஸ்லீம் தீவிரவாதிகளின் பலம் கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. அத்தீவிர வாதிகளின் தயவில் அல்லது அவர்களைப் பயன்படுத்தி தீவிரவாத அரசியல் நடத்தியோரும் தமது ஆட்டங்கள் மட்டுப் படுத்தப் பட்டுள்ளதை உணருகின்றார்கள். சோதனைகள் என்ற பெயரில் முன்பு நீண்ட காலம் தமிழர் அனுபவித்த தொல்லைகளை இப்போது முஸ்லிம்களும் உணர்ந்துள்ளனர். நீண்ட நாட்கள் தமிழரைச்    சல்லடை போடுவதிலிருந்து கட்டுப்படுத்தப் பட்டிருந்த இராணுவத்தினருக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனால் தமிழரும் தொல்லைகளுக்கு ஆளானதோடு சில காகிதப்புலிகளும் அடங்கவேண்டி வந்துள்ளது. சுருக்கமாகச் சொன்னால் முசுலீம் தீவிரத் தன்மையோடு தமிழர் தரப்புத் தீவிரப் பேச்சுக்களும், அதாவது இருதரப்பாரதும் இனவாதத் தன்மை கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. நமக்கு இப்போது எழுகின்ற மிகப்பெரிய கேள்வி என்னவென்றால் சிங்கள பவுத்த இனவாதமும் இப்படிக்  கட்டுப்படுத்தப் படுமா? அப்படித் தெரியவில்லை. அது நடந்தால் இலங்கை சிங்கப்பூராக மாறிவிடும். நாட்டில் அனைத்துத் தரப்பாரினதும் தீவிர இனவாதத்தை கட்டுப்படுத்தி அனைவரும் சரிசம குடிமக்களாக வாழ வழி வகுக்கப்படடால் !!!. அது வெறும் கற்பனை தானா?

ஒக்ரோபர் அரச கவிழ்ப்பால் பின்னடைந்த பொருளாதாரம் இப்போது மீண்டும் அதல பாதாளத்தில் விழுந்துள்ளது. இவ்வருடம் வரவிருக்கும் தேர்தல்களிலும் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது. மகிந்த கையில் அகப்பட்டுள்ள மைத்திரியின் எதிர்ச் செயற்பாடுகளை மேவி ரணில் எவ்வளவு தூரம் செயற்படப்போகின்றார் என்பதிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. கிடைக்க வேண்டிய பாதுகாப்பு    அமைச்சு இன்னும் ரணில் பக்கத்துக்குக் கிடைக்க வில்லை. சிங்களப் பொதுமக்கள் எவ்வளவு தூரம் இந்த உண்மைகளை உணரப்போகிறார்கள், யார் அவர்களுக்கு உணர்த்தப்போகிறார்கள்? என்பதில்தான் முடிவுகள் உள்ளன. மக்கள் உண்மையை உணர்ந்தால் இன்றுள்ள அரசு தேர்தலின்பின் இன்னும் பலமானதாக வரலாம். ஆனால் இந்தத் தீவிரவாதிகளை அடக்க மகிந்த தரப்புத்தான் வேண்டும் என்று மக்களை மகிந்த தரப்பு நம்ப வைத்தால் மீண்டும் மகிந்த யுகம் மலரும். முன்பு உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் மகிந்த யுகத்தில் பல நன்மைகளை, ஆதிக்க அதிகாரசுகத்தை அனுபவித்த சில தமிழர் தரப்புகள் தமிழ் மக்களுக்கு வரக்கூடிய அழிவுகளைப் பற்றி சிறிதேனும் கவலையின்றி தமது தேவைக்காக  மகிந்தவை மீண்டும் சிம்மாசனம் ஏற்ற முடியுமானவரை முயற்சிக்கிறார்கள். அவரது ஆட்சி அமைய நேரடியாகவோ மறைமுகமாகவோ செயற்படுகிறார்கள். தமிழ் மக்கள் தான் விழிப்பாக இருக்க வேண்டும்.

தமிழர் நாம் விழிப்படைவோம்:-

உண்மையான உலகை உணர்வோம்,தெளிவடைவோம். நல்ல விடயங்களுக்கு ஆதரவாய் இருக்கும்வரை ஒருவரை நண்பராக கொள்வோம், மாறாக வரும்போது அவர் பகைவர்தான். நிரந்தரமான நண்பரோ பகைவரோ என்று யாரையும் கொள்ளத்தேவையில்லை. உலகில்  நன்மையும் தீமையும், சரியும் பிழையும் சேர்ந்தே இருக்கும். நல்ல நாடு, நல்ல இனம், நல்ல சமூகம் என்று தனியாக எதுவும் இல்லை. கலந்துதான் இருக்கும். நாம் செய்ய வேண்டியது செய்யக்கூடியது நல்லவர்  பக்கத்தோடு  சேர்ந்து, நல்லவர்களை எம்மோடு சேர்த்து முடியுமான வரை சரியானவற்றையே செய்து அநீதியை தீமையை கொடியவர்களை நீதியின் கட்டுப்பாட்டில் தர்மத்தின் ஆட்சியில் வைத்திருக்க வேண்டும். முற்றாக அவற்றை அழிக்க முடியாது. ஒட்டுமொத்த உலகையோ, ஒட்டுமொத்த சிங்களவர்களையோ, ஒட்டுமொத்த முஸ்லிம்களையோ பகைக்கவே கூடாது. ஈழத் தமிழர்களுக்கு இலங்கையில்தான் வாழ்வு. இலங்கையர்களோடுதான் வாழவேண்டும். அப்படியில்லாமல் அனைவரும் இறந்துவிடவோ வேறெங்கேனும் ஓடிவிடவோ முடியாது.  பகை உணர்வோடு  அனைத்து  முஸ்லிம்களுடனும் சிங்களவர்களுடனும் மோதுவதால் துன்பம் அழிவு நமக்குத்தான். எனவே நமக்கு தற்சமயம் நன்மை செய்யக்கூடிய நாடுகளோடு கை கோர்ப்போம், நடுநிலையான சிங்கள மக்களோடு, பாதகம் குறைந்த சிங்கள அரசோடு, ஒத்துவாழக்கூடிய முஸ்லீம் மக்களோடு, இவ்வாறான தெளிந்த சிந்தனையுள்ள தமிழ் மக்களோடு அணிசேர்வோம். அந்த வழியில் பயணிப்போம். அவர்களின் ஆதரவோடு துணையோடு முடியுமானளவு நீதியான தர்மமான நடுநிலையான  அரசமைப்பை எப்படியாவது என்றாவது உருவாக்கி சிறப்பான அமைதியான செழிப்பான வாழ்வை ஈழத்தமிழினமும் அவர்களது எதிர்காலச் சந்ததியும் அனுபவிக்க வழி சமைப்போம்.

வீணான வெடிவாய்ப் பேச்சுக்கள், வீரப் பிரதாபங்கள், அவசர உணர்ச்சிவசச் செயற்பாடுகள் இனத்தின் அழிவில்தான் முடியும். தமிழர், இதுதான் எமது தமிழ் ஈழம் என்று முன்னொரு காலத்தில் இருந்த புத்தளம் முதல் வடகிழக்காக கதிர்காமம் வரையான நிலப்பரப்பை கடதாசியில் கீறி வெளிநாடுகளில் வீதி வீதியாகத் தூக்கித் திரிய; அங்கே நடைமுறையில் உண்மை நிலையில் கிழக்குமாகாணத்தோடு மன்னார் வவுனியா முல்லைத்தீவு போன்ற பகுதிகளைக்  கூட வேற்றினத்தவர் ஆண்டு அனுபவிக்கின்றார்கள். அவர்களை இனி அங்கிருந்து விரட்டியடிக்க முடுயுமா?. நீதி வேண்டும் நீதி வேண்டும் என்று வெறுமனே கத்திக் கொண்டு நாம் வீதியில் நிற்க,அங்கே எமது மண்ணில் வேலி போட்டு வீடுகட்டி யாரெல்லாமோ வாழ்கின்றார்கள். காரணம் என்ன?. நாம் வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமைப் படுகின்றோம், யதார்த்தைப் பார்ப்பதே இல்லை,நிஜமான நிலைமைகளைப்  பார்த்துச் செயற்படுவதை விடுத்து வெறும் கற்பனையில் மிதக்கின்றோம்.  அவர்கள் அறிவுபூர்வமமாக, அமைதியாக, நடைமுறைச் சாத்தியமான வழியில், யதார்த்தத்தை உணர்ந்து எது சாத்தியம் என்று அறிந்து எந்தவகையில் சாதிக்க முடியுமோ  அந்தவகையில்  சாதிக்கிறார்கள். நாம் சிலுசிலுப்பில் விளையாட அவர்கள் பலகாரத்தைச்  சாப்பிடுகின்றார்கள்.

அவர்கள் தமக்குள் வேற்றுமை இருப்பினும் இனம் சமூகம் என்று வரும்போது உட்பகையை மறந்து ஒற்றுமைப்பட்டு விடுவார்கள். வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறார்கள். தமிழர்தான் காரணமே இல்லாமல் கடைந்தெடுத்த சுயநலத்தாலும் அஹம்பாவத்தாலும் நமக்குள்ளேயே விதண்டாவாதம் பண்ணி  எமக்குள் போராடி அழிந்து போகின்றோம். அதியுச்ச வேடிக்கை அல்லது வேதனை என்ன வென்றால் சிலர் தம்மால் செய்ய முடியாத ஒன்றை,ஒரு நன்மையை தமிழருக்கு வேறு யாரும் செய்துவிடக்கூடாதென்று தமிழருக்குக் கிடைப்பதையும்  தடுப்பதில் தமது அதியுச்ச சக்தியைப் பயன்படுத்துகிறார்கள். அல்லது அதையும் மீறினால் அதைத் தாமே செய்ததாகக் காண்பிக்க ஆலாய்ப் பறக்கிறார்கள். இனியாவது சிந்திப்போம். என்னை விட்டால் வானத்தை வளைத்து ஈழத்தைத் தருவேன் என்று புலம்பும் கோட்டுக்கே போகாத கோமாளி சட்டத்தரணிகளையும் சில வெளிநாட்டு தமிழரின் எடுப்பார் கைப்பிள்ளையாய் செயற்படும் வேடதாரி நீதிபதிகளையும் மக்கள் முறையாக இனம்கண்டு ஒதுக்கிவிட்டு ஒற்றுமையாய்  ஓரணியில் சரியான தலைமையின் கீழ் அணிதிரண்டு, அரசியல் உரிமையோ அபிவிருத்தியோ எது வேண்டுமானாலும்  நமக்கு  வேண்டியவற்றைப் பெற அறிவுபூர்வமாக, சமயோசிதமாக, இராஜதந்திரமாகச் செயற்படும் தலைமையை வலுப்படுத்துவோம். தமிழர் தலைமையில் குறைகள் இருப்பின் அதை உள்வீட்டுப் பிரச்சனையாக உள்ளிருந்தே தீர்த்துக் கொள்வோம். எமது சிந்தனையாளர், வருங்காலச் சந்ததியினரின் தலைவர்களாக வரவிருக்கும் மாணவர் சமூகம் தமது சக்தியை வெறும் உணர்ச்சிவசச் செயற்பாடுகளில் சிதைத்து விடாமல் பயனுள்ளதாக  பொறுமையாக விவேகமாகச் சிந்தித்துச் செயற்பட்டு ஒருவலுவான தமிழர் சமூகத்தைக் கட்டி எழுப்ப வேண்டும். வருங்காலத் தமிழர் சந்ததி அவர்களை வாழ்த்தவேண்டுமே அன்றி சபிக்கக் கூடாது. வாழ்க நம் தமிழினம்.