சிறீலங்காவிடம் இருந்து தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா?

செவ்வாய் அக்டோபர் 01, 2019

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகம் உலகிற்கு சொல்லி நிற்கிறது ஒரு செய்தி

இலங்கை பெளத்த, சிங்கள நாடு என சிங்களம் மீண்டும் எக்காளமிடத் தொடங்கியுள்ளது. இது சிங்களவர்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு எனவும் இதை ஏற்றுக்கொண்டால் ஏனைய இனத்தவர்கள் இங்கு வாழமுடியும் இல்லாவிட்டால் வெளியேறி வேடு நாடுகளுக்குச் சென்றுவிடுங்கள் எனவும் தமிழர்களைச் சிங்களம் அச்சுறுத்துகின்றது.

பெளத்த சிங்களப் பேரினவாதக் கோட்பாட்டுக் குரல்கள் தொடர்ந்தும் சிங்கள தேசத்தில் ஒலித்தே வருகின்றது.

அது தற்போது தமிழர் தேசத்தை நோக்கி விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தெற்கில் நின்று பெளத்த சிங்கள இனவாதத்தைக் கக்கிய பிக்குகளும் சிங்களப் பேரினவாதிகளும் தற்போது வடக்கில், அதுவும் தமிழர் தாயகத்தில் வந்து நின்று இது பெளத்த சிங்கள நாடு என கூக்குரல் இடத் தொடங்கியிருக்கின்றனர்.

இது ஆபத்தானது. அபாயகரமானது. இதன் பாதகத் தன்மையை தமிழ் மக்கள் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்து சமுத்திரத்தின் நித்திலம் எனப் போற்றப்படும் இலங்கைத் தீவு சிங்கள தேசத்தால் இன்றும் சிறீலங்கா என்றே அழைக்கப்பட்டு வருகின்றது. சிறீலங்கா என்பது சிங்கள மமதையின் வெளிப்பாடு. இது பெளத்த சிங்கள நாடு என்பதன் அடையாளமே சிறீலங்கா என்பதன் அர்த்தம். ஈழத் தமிழர்கள் பன்னாடுகளுக்குச் செல்லும் போது சிறீலங்கா என உச்சரிப்பதைத் தவிர்த்து வருகின்றனர். தமிழ்த் தேசியவாதிகள் சிலோன் என அடையாளப்படுத்துகின்றனர்.

சிறீலங்கா என்ற சிங்கள இனவெறி வார்த்தையை அவர்கள் உச்சரிப்பதற்கு தயங்குகின்றனர்.

அண்மையில் இந்தியாவுக்குச் சென்ற ஈழத்தமிழ்த் தேசியப் பற்றாளர் ஒருவர் இந்திய விமான நிலையத்தில் நீங்கள் எங்கிருந்து வருகின்றீர்கள் என ஆங்கிலத்தில் கேட்டபோது சிலோன் எனக் கூறினார். காரணம் கேட்டபோது, சிறீலங்கா சிங்களத்தின் அடையாளம் என்றார். இவ்வாறான தமிழ்த் தேசப்பற்றாளர்கள், தேசியப் பற்றாளர்களுக்கு முன்பாகத்தான் சிங்கள தேசம் தனது சிங்கள வெறியை நடைமுறைப்படுத்தத்துடிக்கின்றது.

தமிழர்களின் இதய பூமியான முல்லைத்தீவில் அண்மையில் பெளத்த பேரினவாதம் தலைவிரித்து ஆடியிருக்கின்றது. சிங்கள நீதிமன்றின் தீர்ப்பு பெளத்த வெறியர்களால் நிராகரிக்கப்பட்டிருக்
கின்றது. அன்பை போதிக்கவேண்டிய காவி உடை தரித்த பிக்குகள் அதிகாரத்தையும் இன வெறியையும் வெளிக்காட்டினர்.

தன்வினையால் இறந்துபோன பிக்குவின் உடலை எரிப்பதில் சிங்கள தேசம் புத்தரின் நீதியைக் காலில் போட்டு மிதித்தது. அதுவும் புரட்டாதி மாதத்தில் தமிழீழத் தாய்த்திருநாட்டில் இந்த அவலம் அரங்கேறியது.

வருடத்தில் புரட்டாதி மற்றும் கார்த்திகை மாதங்கள் தமிழர்களுக்கு முக்கியமானவை. இந்த மாதங்களில் தமிழ் மக்கள் புனிதத்தைக் கடைப்பிடிப்பர். ஈழ விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை ஈந்த தெய்வப் பிறவிகளுக்காக தமிழர்கள் நோன்பிருந்து, அவர்களை வழிபடும் காலம் இது. இதில், புரட்டாதி தியாகத்தின் மாதம்.

தமிழர்கள் வாழும் நாடுகளெங்கும் புரட்டாதி மாதம் புதுப்பொலிவோடு நோக்கப்படும். இந்திய - சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக நல்லூரில் தியாகி திலீபன் உணவை ஒறுத்துப் பட்டினிப் போர் புரிந்த மாதம்.
தமிழர் தாயகத்தில் சிங்களவர்களின் ஆக்கிரமிப்பு நிறுத்தப்படவேண்டும் என்ற கோசத்தை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த அந்த உத்தமனின் நினைவு நாள்களில் முல்லை. மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்பு அரங்கேற்றப்பட்டது.

தெற்கில் இறந்துபோன பெளத்த சிங்களப் பிக்கு முல்லைத்தீவு செம்மலைக்குக் கொண்டுவரப்பட்டு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் எரியூட்டப்பட்டார். அந்தப் பிராந்தியத்தை ஆக்கிரமிப்பதில் அதீத ஆர்வம் காட்டிய அவரது உடலை அந்த இடத்தில் எரித்ததன் மூலம், எதிர்காலத்தில் அது சிங்களப் பிராந்தியம் என்பதை அடையாளப்படுத்த சிங்களத் தரப்பு முற்பட்டது.

அதற்காக, முல்லைத்தீவு நீதிமன்று வழங்கிய தடை உத்தரவையும் மீறி நீராவியடிப் பிள்ளையார் ஆலய தீர்த்தக் குளத்திற்கு அருகில் பெளத்த பிக்குவின் உடல் எரிக்கப்பட்டது.

தமிழ் நில ஆக்கிரமிப்பிற்கு எதிராக உயிர்நீத்த தியாகியின் நினைவுகளில் தமிழ் மக்கள் மூழ்கியிருக்க, புத்தரின் வாரிசுகள் காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபட்டனர்.

அந்த இடத்தில் களமிறக்கப்பட்டிருந்த சிங்களக் காடையர்கள் தமிழர்களைத் தாக்கினர். காவல்துறை
யினர், படையினரின் ஆதரவுடன் தமிழ் சட்டத்தரணி மற்றும் தமிழ் இளைஞர்கள் மீது அங்கு தாக்குதல் இடம்பெற்றது.சிங்கள நீதி சின்னாபின்னமாக்கப்பட்டது.

இங்கேதான் முக்கியமான கேள்வி ஒன்று எழுகின்றது. தமிழர் தாயகத்தில் சிங்களப் படைகளால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களை விசாரிப்பதற்கு பன்னாட்டு விசாரணை அவசியம் என தமிழர்கள் தொடர்ந்து கோரிக்கை முன்வைத்து வருகின்றனர்.

ஆனால், சிங்கள தேசமோ அப்படி அல்ல, உள்ளக விசாரணையே போதுமானது எனக் கூறி வருகின்றது. உள்நாட்டில் எமது பிரச்சினைகளை எமது நீதிமன்றில் நாம் விசாரணை செய்வோம் என சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் கூறி வருகின்றனர்.

பூர்வீகமாக இந்துக்களுக்குச் சொந்தமான நீராவியடியில், அதுவும் பன்னெடுங்காலமாக பிள்ளையார் ஆலயம் இருக்கும் இடத்தில் எங்கிருந்தோ கொண்டுவரப்பட்ட பெளத்த பிக்குவின் உடலை எரிக்க முற்பட்டபோ, அவ்வாறு செய்யவேண்டாம் என நீதிமன்று வழங்கிய தீர்ப்பையே சிங்கள தேசம் உதாசீனம் செய்திருக்கின்றது. காலில் போட்டு மிதித்திருக்கின்றது. சிங்கள தேசத்தால் - சிங்கள நீதித்துறையால்  ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டத்தரணிகள் தாக்கப்பட்டிருக்கின்றனர்.

சட்டத்தையும் ஒழுங்கு பரிபாலனத்தையும் நடைமுறைப்படுத்தவேண்டிய சிறீலங்கா காவல்துறை முன்பாகவே இந்தச் செயற்பாடு இடம்பெற்றிருக்கின்றது.

ஆக, ஒரு சடலத்தை எரிப்பதில் ஒழுங்கான நெறிமுறையைப் நடைமுறைப்படுத்த முடியாத சிங்கள நீதிமன்று, ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொத்துக் கொத்தாகப் படுகொலை செய்யப்பட்ட போர்க்குற்றத்தை எவ்வாறு விசாரணை செய்து தமிழருக்கு நீதி வழங்கும்?

இந்தியா மற்றும் பன்னாட்டு அரசுகளை நோக்கியும் ஈழத்தமிழர்கள் இதே கேள்வியைத்தான் முன்வைக்கின்றனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறீலங்காவிற்கு எதிரான போர்க்
குற்றப் பிரேரணைகள் முன்வைக்கப்படும்போதெல்லாம் அதில் தலையிட்டு, அதை தீர்மானமாக நிறைவேற்றவிடாமல் தடுத்ததிலும் அந்தப் பிரேரணைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்ததிலும் இந்தியாவிற்கு அதிக பங்கிருக்கின்றது.

இதே இந்தியா தற்போது தமிழர் தாயகத்தில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெறும் அநீதிகளைக் கண்டும் காணாமலும் இருப்பது ஏன்?

இதே இந்தியாதான் 1987 ஆம் ஆண்டு இலங்கை - இந்திய ஒப்பந்தத்தையும் ஏற்படுத்தியது. போராட்டத்தில் ஈடுபட்ட தமிழீழ விடுதலைப் புலிகளைச் சமாதானப்படுத்துவதற்காக தமிழர்களில் அக்கறை உள்ளது போலக் காட்டிக் கொள்வதற்காகவும் இந்தியா கொண்டுவந்த மாகாண சபைகள் ஆட்சிமுறை இன்று சிங்கள தேசத்திற்கே நன்மைகளைப் பெற்றுக்கொடுத்துள்ளது.

இதனால் தமிழர்களுக்கு எந்தவித நன்மைகளும் இல்லை. இது இந்தியாவுக்கும் தெரியாதது அல்ல. தமிழீழ தேசியத் தலைவர் இதை தீர்க்கதரிசனமாக அன்றே உணர்ந்திருந்தார். அதனால்தான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வாகாது என அன்றே அதை எதிர்த்தார்.

அயல் நாடு என்ற ரீதியிலும், தொப்புள்கொடி உறவு என்ற ரீதியிலும் சிறீலங்காவோடு தொடர்புடைய இந்தியா, தமிழரின் இனப்பிரச்சினை விடயத்தில் முடிவெடுக்கக்கூடிய அதிகாரமும் உரிமையும் உள்ள இந்தியா தற்போது வரை தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் எதிர்நோக்கியிருக்கும் நெருக்கடிகளைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருப்பது ஏன்?

ஈழத்தமிழர்கள் விடயத்தில் தமிழக மக்களும் தற்போது அமைதிப்போக்கையே கடைப்பிடிப்பதாகத் தெரிகின்றது. கடந்த காலங்களில் ஈழத்தமிழர்களுக்காக பொங்கி எழுந்த தமிழக மக்களும் மாணவர்களும் அரசியல்வாதிகளும் யுத்தம் முடிவடைந்ததற்கு பின்னர் தமிழர்களைக் கைவிட்டுள்ளனரா என்ற கவலை ஏற்பட்டிருக்கின்றது.

தமிழர் தாயகத்தில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்பு உள்ளிட்ட தமிழின அடையாளங்கள் அழிப்பு நடவடிக்கைள் தொடர்பாக இதுவரை அவர்கள் குரல் எழுப்பாமல் இருக்கின்றமை ஈழத்தமிழர்களை ஏமாற்றமடையச் செய்திருக்கின்றது.

யுத்த காலத்திலும், அதற்கு பிந்திய போர்க்குற்ற விசாரணைக் கோரிக்கை மேலெழுந்தபோதும் சமாளிப்புக்களை மேற்கொண்டு சிறிலங்காவிற்கு கால அவகாசம் வழங்குவதில் அதீத கரிசனையை வெளிப்படுத்திய ஐரோப்பிய நாடுகளும் தற்போது தமிழர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பாக எந்தவித அக்கறையும் செலுத்தவில்லை.

தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் பெளத்த சிங்கள மேலாதிக்கம் குறித்து இதுவரை கருத்தியல் ரீதியாகக்கூட வெளிப்படுத்தலைச் செய்யவில்லை. இது ஐரோப்பிய நாடுகளில் தமிழ் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையையும் நீத்துப்போகச் செய்திருக்கின்றது.

சிறிலங்காவில் அமைதி திரும்பிவிட்டது, தமிழர்களை நாம் அன்புக்கரம் கூப்பி அழைக்கின்றோம், இங்கு வாருங்கள் நிம்மதியாக வாழமுடியும் என்ற சிங்கள ஆட்சியாளர்களின் அறிவிப்பை நம்பி புகலிடக் கோரிக்கையாளர்களான தமிழர்களை மேற்கு நாடுகள் திருப்பி அனுப்புகின்றன. இன்னும் பல நாடுகளில் தமிழ்ப் புகலிடக் கோரிக்கையாளர்கள் தடுத்துவைக்கப்பட்டிருக்கின்றனர்.

முன்னர் தமிழர்களுக்கு சொந்தமாக இருந்து தற்போது சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தும் சிறிலங்காவில், அதிலும் தமிழர் தாயகத்தில்கூட தமிழர்கள் வாழ முடியாத சூழல் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை மேற்கு நாடுகள் ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றன?

வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் என்பதை ஏற்றுக்கொண்டு, சுயநிர்ணய உரிமையுடன் தமிழர்கள் வாழக்கூடிய நிலையை ஏற்படுத்திக்கொடுப்பதில் இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் என்ன தடை இருக்கின்றது?

சொந்த நிலத்தில், சுதந்திரமாக வாழ விரும்பும் தமிழர்களுக்கு அந்த நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதில் என்ன பிழை இருக்கின்றது?

இந்து சமுத்திரத்தின் முத்தான இலங்கையின் ஆதிக்குடிகளான தமிழர்களுக்கு இன்று இந்த நாட்டில் வாழ உரிமை இல்லை எனக் கூறுவதற்கு இந்தியாவும் மேற்கு நாடுகளுமே சிங்களப் பிக்குகளுக்கு அதிகாரத்தைக் கொடுத்திருக்கின்றன.

ஆகவேதான் தமிழரின் போராட்டம் இனிமேல் இந்தியாவையும் மேற்கு நாடுகளையும் நோக்கித் திருப்பப்படவேண்டும்.

தமிழக உறவுகள் இந்த விடயத்தில் அதிக கரிசனை காட்டவேண்டும். தாய்த்தமிழ் உறவுகளுக்கான உங்கள் உரிமைக் குரலை உயர்த்த நீங்கள் தயாராகவேண்டும். தாயகத்தில் சிங்களவர்களுக்கு எதிராக தமிழர்கள் போராடிக்கொண்டிருக்கின்ற அதேவேளை, சிங்களவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்த இந்தியா மற்றும் மேற்கு நாடுகளுக்கு எதிராக அந்ததந்த நாடுகளில் மக்கள் புரட்சி வெடிக்கவேண்டும். அந்தப் புரட்சியே தமிழீழ மக்களுக்கு விடிவைப் பெற்றுத்தரும்.

‘தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

நன்றி: ஈழமுரசு