சிறீலங்லகா ராணுவத்துக்கு அஞ்சாத மக்கள்!!

வியாழன் ஜூலை 14, 2022

எங்கள் தலைமுறை எப்படியோ போகட்டும் இனிவரக்கூடிய தலைமுறையாவது நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் உயிரைக் கூடப் பொருட்படுத்தாமல் ராணுவத்தை எதிர்த்தபடி முன்களத்தில் நின்று போராடுகிறோம்' என்கிறார் இலங்கை பிரதமரின் அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்.

'படிப்பதற்கு வழியில்லை. படித்தாலும் இந்த நாட்டில் வேலையில்லை' என்று உணர்ச்சிவயப்பட்டு பேசுகிறார் கொழும்பு நகரில் இருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து போராட்டங்களுக்கு ஆதரவளிப்பதற்காக வந்திருக்கும் பானு.

கொழும்பு நகரில் ஆங்காங்கே நடக்கும் போாராட்டங்களில் எங்கு சென்றாலும் இப்படிப்பட்ட குரல்களைத்தான் கேட்க முடியும்.

இவர்கள் அனைவரிடமும் பொதுவான ஒன்றைப் பார்த்தோம். அது ஆட்சியாளர்கள் மீதான கோபம்.

போராட்டக்காரர்கள் கண்ணீர் புகைக் குண்டுகளுக்கு மத்தியில் ஓடுகிறார்கள். துப்பாக்கி ஏந்தியிருக்கும் ராணுவ வீரர்களுடன் வெறுங்கைகளுடன் மோதுகிறார்கள். போராட்டத்தில் பெரும்பாலான நேரங்களில் மக்கள் சிதறி ஓடுவதைக் காண முடியவில்லை.

காயமடைந்தவர்களையும், கண்ணீர் புகைக் குண்டுகளால் பாதிக்கப்பட்டவர்களையும் சிகிச்சைக்கு அனுப்பிவிட்டு மற்றவர்கள் பிடிவாதமாக முன்களத்திலேயே இருக்கிறார்கள்.

'கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும், தடியடிகளையும் தாங்கும் வகையில் நாங்கள் போராட்ட உத்திகளை வகுத்திருக்கிறோம்' என்றார் பிரதமர் அலுவலகத்தில் முதல் வரிசையில் நுழைந்த போராட்டக்காரர் ஒருவர்.
 
போராட்டம்!!

இதுபோன்ற துணிச்சலால் புதன்கிழமையன்று மீண்டும் ஒருமுறை குலுங்கியிருக்கியது கொழும்பு. அந்த நாள், இலங்கையின் அதிபர், பிரதமர் ஆகியோருக்கு எதிரான மக்களின் கோபத்தை மிகத் தீவிரமாக வெளிப்படுத்தும் நாளாக அமைந்தது.

இலங்கை அரசியலில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்த ராஜபக்ஷ குடும்பத்தின் கடைசி அதிகார மையமாக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டதுமே காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் அதிகமாகக் குரல் எழுப்பியதைக் கேட்டோம்.

விடுமுறை நாள் என்பதாலும், கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகப்போவதாக அறிவித்த நாள் என்பதாலும் ஜூலை 13ஆம் தேதி அதிகாலையில் இருந்தே காலி முகத்திடலுக்கு கூட்டம் வரத் தொடங்கியது.
 
பிரதமர் அலுவலகம் முன்னே திரண்ட மக்கள்; கண்ணீர் புகைகுண்டு வீச்சு - விளக்கும் புகைப்படங்கள்
இலங்கையில் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற மக்கள் மீது நூற்றுக்கணக்கான கண்ணீர் புகைகுண்டு வீச்சு
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவுக்கு தப்பிச் சென்றது ஏன்?

கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்பதை 'அவரை நாட்டை விட்டு துரத்திவிட்டோம்' என்று முழங்கங்களில் வெளிப்படுத்தினார்கள்.

சுமார் 11 மணிக்கு காலி முகத்திடலில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அனைவரும் பிரதமர் அலுவலகத்துக்குச் செல்லுங்கள் என்று. அந்தக் குரல் கேட்ட மாத்திரத்திலேயே ஆயிரக்கணக்கானோர் காலி முகத்திடல் பகுதியில் இருந்து பேரணி போல பிரதமர் அலுவலகத்தை நோக்கிச் செல்லத் தொடங்கினார்கள்.

பிரதமர் அலுவலகம் காலி முகத்திடலில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. ஏற்கனவே எரிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்கவின் சொந்த வீடும் இதற்கு அருகிலேயே உள்ளது.
 
கண்ணீர்ப்புகைக் குண்டு!!

பிரதமர் இல்லம் நோக்கி நகர்ந்த கூட்டத்துடனேயே நாமும் சென்றோம். பிரதமர் அலுவலகத்தில் ஏற்கெனவே ஒரு பெருங்கூட்டம் இருந்தது. வேறு சில பகுதிகளில் இருந்தும் கூட்டம் வரத் தொடங்கியிருந்தது.

காவல்துறையின் பலமான பாதுகாப்பு அரண்களையும் ஆயிரக்கணக்கான மக்களின் கூட்டம் கடந்து சென்றது.

பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கூட்டம் குரல் எழுப்பியபடி உள்ளே நுழைவதற்கு முயன்றது. காவல்துறையினர் பல முறை கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி அவர்களைக் கலைக்க முயன்றார்கள்.

இதில் பலருக்குக் காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களில் பெண்களும் அடங்குவார்கள். அவர்களில் சிலருக்கு அங்கேயே முதலுதவி அளிக்கப்பட்டது. அதிக காயம் ஏற்பட்டவர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.

ஒரு சில மணி நேரத்தில் பெருங்கூட்டமாக பிரதமர் அலுவலகத்தின் வாயிலைக் கடந்து சென்றார்கள். அந்த நொடியில் இருந்தே பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர், ராணுவத்தினர் உள்ளிட்டோர் படிப்படியாக வெளியேறத் தொடங்கினார்கள். பிரமரின் அலுவலகம் போராட்டக்காரர்கள் வசமானது.

நாடாளுமன்ற முற்றுகை!!

அத்துடன் நிற்கவில்லை. சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்தை நோக்கி ஒரு கூட்டம் நகரத் தொடங்கியது. கிடைக்கும் பேருந்துகள், ஆட்டோக்கள், சைக்கிள்கள் போன்றவற்றில் அவர்கள் சென்றார்கள். பலர் நடந்தும் போய்க் கொண்டிருந்தார்கள்

நாம் அங்கு சென்றபோது சில ஆயிரம் பேர் அங்கு கூடியிருந்தார்கள். அங்கேயும் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. 50-க்கும் மேற்பட்ட வெடித்துக் காலியான கண்ணீர்ப்புகைக் குண்டுகள் கிடப்பதை அங்கே பார்த்தோம்.

'வழக்கத்தை விட அதிக வீரியமான' கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்.

நாங்கள் கண்ணீர்ப் புகைக் குண்டுகளில் பாதுகாக்கும் வகையிலான கவசங்களுடன்தான் செய்தி சேகரிக்கச் சென்றிருந்தோம். ஆயினும் நாடாளுமன்றத்து அருகே வீசப்பட்ட கண்ணீர்ப்புகைக் குண்டில் இருந்து வெளிவந்த புகையை நானும் சில நொடிகள் சுவாசிக்க நேரிட்டது.

கண்ணில் கடுமையான எரிச்சலும் மூச்சுத் திணறலும் ஏற்படுத்தும் வகையில் அதன் வீரியம் இருந்தது.
 
போராட்டம்!!

தொடர்ச்சியாகக் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டதால் போராட்டக்காரர்களால் அங்கு முன்னேறிச் செல்ல முடியவில்லை. ஆனால் "மேலும் முக்கியக் கட்டடங்கள்" சிலவற்றைக் கைப்பற்றும் திட்டம் இருப்பதாக போராட்டக்காரர் ஒருவர் கூறினார்.

அதிகரிக்கும் மக்களின் கோபம்!!

கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருந்து விலகுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அப்படியெதுவும் நடக்கவில்லை. மாறாக பிரதமர் ரணில் விக்கிரசிங்கவை தற்காலிகமான அதிபராக நியமித்து கோட்டாபய ராஜபக்ஷ பிறப்பித்த கெஜட் உத்தரவு பிரதமர் அலுவலகத்தால் வெளியிடப்பட்டது.

இது போராட்டக்காரர்களிடம் கோபத்தை ஏற்படுத்தியிருப்பதை அவர்களுடன் பேசும்போது புரிந்து கொள்ள முடிந்தது.

இன்னொரு புறம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்ய வேண்டும், போராட்டக்காரர்கள் வசமுள்ள கட்டடங்களை மீட்க வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க அறிவித்திருப்பதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ரணில்!!

ரணில் விக்கிரசிங்க நாடாளுமன்றத்திலும் மக்கள் மத்தியிலும் ஆதரவற்ற தலைவராகவே கருதப்படுகிறார். அதனால் கோட்டாபயவும் ரணிலும் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என்பதே அவர்களின் அடிப்படையான கோரிக்கையாக இருந்தது. ஆனால் அது இரண்டுமே நடக்காததால் நாட்டில் அதிகார வெற்றிடம் ஏற்பட்டு, நிர்வாகம் முற்றிலும் சீர்குலையும் ஆபத்து இருப்பதையும் கணிக்க முடிகிறது.

மற்றொரு நாள் விடிந்துவிட்டது. காலி முகத்திடலில் அரசுக்கு எதிரான குரல்கள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. இன்றைய நாளிலும் தீவிரமான போராட்டங்கள் நடப்பதற்கான தொடக்கப்புள்ளி நேற்றே(ஜூலை 14) வைக்கப்பட்டுவிட்டது.