சிறிலங்கா அரசாங்கம் தொற்றுநோய் கட்டுப்பாடுகளை அகற்றுகிறது....

சனி ஜூலை 17, 2021

மிகவும் வேகமாக தொற்றக்கூடிய டெல்டா மாறுபாடு தீவு முழுவதும் பரவுகின்ற போதிலும், இலங்கை அரசாங்கம் அதன் மட்டுப்படுத்தப்பட்ட தொற்றுநோய் பரவல் கட்டுப்பாடுகளைக் கூட கைவிடத் தயாராகி வருகிறது.

ஜூலை 5 அன்று, ஜனாதிபதி கோட்டாபய இராஜபக்ஷ, செப்டெம்பருக்குள் 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என்று கூறிக்கொண்டு, அந்த மாதத்திற்குள் நாட்டை முழுமையாக மீண்டும் திறந்து விடப்போவதாகக் அறிவித்தார். ‘தொற்றுநோயை எதிர்கொள்ள, ஒரே தீர்வு தடுப்பூசி தான்,’ என்று அவர் அறிவித்த போதிலும், ‘நாட்டைத் திறக்காமல் பொருளாதாரத்தை நிலைநிறுத்த முடியாது,’ என்றும் பின்னர் தெரிவித்தார்.

கொட்டாவவில் பஸ்ஸில் இருக்கை பிடிக்க முண்டியடிக்கும் தொழிலாளர்கள் [Credit: WSWS]

கடந்த ஆண்டு மே மாதம், பெருவணிக கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், அரசாங்கம் பொருளாதாரத்தை முழுமையாக மீண்டும் திறந்துவிட்டது. எவ்வாறாயினும், மீண்டும் திறப்பது நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் கூர்மையான எழுச்சிக்கு வழிவகுத்த காரணத்தால், பின்னர் சில கட்டுப்பாடுகளை விதிக்க நிர்ப்பந்திக்கப்பட்டது.

உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் இலங்கை சுகாதார நிபுணர்களின் பல எச்சரிக்கைகளையும் மீறியே தற்போதுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு இராஜபக்ஷ நடவடிக்கைகள் எடுக்கின்றார்.

ஜூலை 2, உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் வத்தியர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், அரசாங்கங்கள் ‘தடுப்பூசி மட்டுமே தீர்வு’ என்ற கொள்கையை பின்பற்றுவதை எதிர்த்து எச்சரித்தார்.

‘பொது சுகாதாரம் மற்றும் வலுவான கண்காணிப்பு, மூலோபாய பரிசோதனை, ஆரம்பகால நோய் கண்டறிதல், தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவ பராமரிப்பு அதே போல் முக கவசம் அணிதல், தனிமனித இடைவெளி பேணுதல், நெரிசலான இடங்களைத் தவிர்ப்பது மற்றும் உட்புற பகுதிகளை நன்கு காற்றோட்டமாக வைத்திருப்பது ஆகிய சமூக நடவடிக்கைகள் அடிப்படையான பதில் நடவடிக்கைகளாகும்,’ என அவர் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பெரும்பான்மையான மக்களுக்கு தடுப்பூசி போட்டுள்ள, ஆனால் கொவிட்-19 முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மோசமாக குறைத்துள்ள அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் உட்பட உலகெங்கிலும் உள்ள நாடுகளில் டெல்டா மாறுபாடு நோய்த்தொற்றுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன.

பெருந்தோட்ட பிராந்தியத்தில் தடுப்பூசி மையத்திற்கு வெளியே சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் வரிசையில் நிற்கிறார்கள் [Source: Facebook]

ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கின்ற, பணப் பற்றாக்குறையில் உள்ள இராஜபக்ஷ அரசாங்கத்தின் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதான அக்கறை, இலங்கை மக்களின் உயிர்களைப் பாதுகாப்பது அல்ல, மாறாக இலாபங்களை அதிகரிப்பதே ஆகும். கடந்த வாரம் ஜனாதிபதி இராஜபக்ஷ தனது இளைய சகோதரர் பசிலை புதிய நிதியமைச்சராக நியமித்தார். அதன் பணி, பெருவணிகத்தை மேலும் மேம்படுத்துவதோடு, வாழ்க்கை நிலைமைகள் மீதான அரசாங்கத்தின் தாக்குதல்களை தீவிரப்படுத்துவதும் ஆகும்.

டெய்லி மிரர் பத்திரிகையின் படி, பசில் இராஜபக்ஷ நேற்று சில அமைச்சர்களைச் சந்தித்து, ‘நாட்டின் உற்பத்தித் தளத்தை புத்துயிர் பெறச் செய்ய வேண்டியதன் அவசியத்தையும், இல்லையெனில் பொருளாதாரத்தை இயக்குவதற்கு அரசாங்கம் பணப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.’

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல செனவிரத்ன சினிமாக்கள், தியேட்டர்கள், நீச்சல் குளங்கள், பகல்நேர பராமரிப்பு மையங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை 25 சதவீத உள்வாங்கலுடன் திறக்க அனுமதிப்பதன் மூலம் கொவிட்-19 விதிமுறைகளை மேலும் தளர்த்தியுள்ளார். ஆடைத் தொழில் உட்பட அனைத்து இலங்கை தொழிற்சாலைகளும் இப்போது முழுமையாக இயங்குகின்றன. இது 2020 மே முதல் தடையில்லாமல் தொடர்கிறது.

தடுப்பூசி திட்டம் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இலங்கையில் அனைத்து பாடசாலைகளும் ஆகஸ்டில் மீண்டும் திறக்கப்படும் என்றும் கல்வி அமைச்சர் ஜி. எல். பீரிஸ் நேற்று அறிவித்தார்.

கொவிட்-19 நோய்த்தொற்றுகள் சம்பந்தமாக ஒரு சோடனைச் சித்திரத்தை காட்டுவதற்கு கொழும்பு முயற்சிக்கிறது. இது பொய்யானதும் மற்றும் ஆபத்தானதுமாகும்.. ஜூலை 11 அன்று, மொத்த கொரோனா வைரஸ் தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை 274,538 ஆக உயர்ந்தது, அன்றைய தினம் மட்டும் 1,507 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் ஏழு நாள் தினசரி சராசரி 1,273 ஆக இருந்தது. ஜூலை 11 அன்று 33 பேர் உட்பட கடந்த பத்து நாட்களில், 500 பேர் வைரஸால் இறந்துள்ளனர், மொத்த இறப்பு எண்ணிக்கை 3,467 ஆக உள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்கம் பி.சி.ஆர். பரிசோதனைகளை குறைந்த அளவில் முன்னெடுப்பதை வேண்டுமென்றே ஒரு கொள்கையாக முன்னெடுப்பதால் இலங்கையில் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கை சரியாக அறிவிக்கப்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, ஜூலை 11 அன்று 13,777 பி.சி.ஆர். பரிசோதனைகள் மட்டுமே நடந்துள்ளன.

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக தொற்றுநோய் மற்றும் மூலக்கூறு துறை தலைவர் வைத்தியர் சந்திமா ஜீவன்தர,. கொழும்பில் 20 டெல்டா தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக நேற்று தெரிவித்தார். மேலும் மாதிரிகள் பரிசோதிக்கப்பட உள்ளன.

பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன நேற்று டெய்லி மிரர் பத்திரிகையிடம் பேசும் போது, நிலைமை தீவிரமானது என்றும், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக சுகாதார அதிகாரிகள், டெல்டா மாறுபாடு நோய்த்தொற்றுகள் குறித்த தகவல்களை மூடிமறைக்கின்றார்கள் என்றும் கூறினார்.

ஜூலை 3 அன்று, நாடு முழுவதும் இருந்து 142 மாதிரிகள் கொண்ட ஒரு தொகுப்பில் 14 டெல்டா மாறுபாடு நோய்த்தொற்றுகள் கண்டறியப்பட்டன. கொழும்பு போலவே காலி, மாத்தறை மற்றும் திருகோணமலையில் மாவட்டங்களிலும் டெல்டா தொற்றுகள் பதிவாகியுள்ளன. அதாவது தீவின் பல பகுதிகளுக்கு கொடிய மாறுபாடு பரவியுள்ளது.

சுயாதீன சுகாதார நிபுணர் வைத்தியர் ரவி ரன்னன் எலிய ஒரு ட்விட்டரில் இட்ட பதிவு குறிப்பிட்டதாவது: “தீவு முழுவதிலுமிருந்து 142 மாதிரிகளில் பத்தில் ஒன்று டெல்டா என்பது கவலை அளிக்கிறது. விவரங்கள் தெரியாது, ஆனால் இப்போது நாட்டில் பல நூறு அல்லது ஆயிரம் டெல்டா தொற்றாளர்கள் உள்ளனர் என்று கடுமையாக பரிந்துரைக்கிறோம்.” ‘இதைக் கட்டுப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்,’ என்று அவர் எச்சரித்தார்:

ஜூலை 12 அன்று, கிட்டத்தட்ட 12,000 தொழிலாளர்கள் பணிபுரியும் கொக்கல விசேட பொருளாதார வலயத்தைச் சேர்ந்த ஆடைத் தொழிலாளி ஒருவர் டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டது. பொருளாதார வலயத்தின் இயக்குனர் சிசில் பெர்னாண்டோ, தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெறுவதால் ஏனைய தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதற்கான எந்த ஆபத்தும் இல்லை என்று கூறிக்கொண்டார். இது தொழிற்சாலையில் உற்பத்தி தொடரும் என்பதைக் குறிக்கிறது.

கொவிட்-19 இழப்பீடு மற்றும் நிவாரண நிதியைக் கோரும் பூண்டுலோயா டன்சினன் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் [Source: Facebook]

முதலாளிகள், அரசாங்கத்தின் ஆசீர்வாதத்துடன், நோய்த்தொற்றுகள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் தங்கள் ஆலைகளை மூடவில்லை. உண்மையில், ஊழியர்கள் பாதுகாப்பற்ற நிலையில் வேலை செய்ய மறுத்தபோதுதான் ,தொழிற்சாலைகள் மூடப்பட்டன. தொழிற்சங்கங்களின் முழு ஆதரவோடு அந்த ஆலைகள் விரைவில் மீண்டும் திறக்கப்பட்டன.

இலங்கை ஊடகங்கள், அரசாங்கத்தினதும் பெருவணிகத்தினதும் பொருளாதாரத்தை மீண்டும் திறக்கும் குற்றவியல் கொள்கைகளை முழுமையாக ஆதரிக்கின்றன. டெய்லி மிரர் பத்திரிகையில் “கொவிட்-19 உடன் வாழுதல்” என்ற தலைப்பில் ஜூலை 5 அன்று வெளியான ஆசிரியர் தலையங்கம், சிங்கப்பூர் அரசாங்கம் அடிப்படையான தொற்றுநோய் பாதுகாப்பு நடவடிக்கைகளை கைவிட்டதை பாராட்டியது.

‘தனிமைப்படுத்தல் இல்லாத பயணத்திற்கு திரும்புவதற்கும், பெரும் ஒன்று கூடல்களைத் தொடங்குவதற்கும் அனுமதிப்பதற்காக, முடக்கம் மற்றும் வெகுஜன தொடர்புத் தடமறிதல் ஆகியவற்றை கைவிடுவதை அவர்கள் முன்மொழிகின்றனர்… தினசரி கொவிட்-19 தொற்றுக்களின் எண்ணிக்கையை கணக்கிடுவதை சிங்கப்பூர் நிறுத்த வேண்டும் என்று அது விரும்புகிறது’ என்று அந்த தலையங்கம் மகிழ்ச்சியுடன் அறிவித்தது.

சிங்கப்பூர் அரசாங்க செயலணி, “தொற்றுநோயை குறைந்த அச்சுறுத்தலாக, இன்ஃப்ளூவன்ஸா போல், கால் மற்றும் வாய் நோய் அல்லது சின்னம்மை போன்றவற்றுக்குள் மாற்ற முன்மொழிகிறது” என்று செய்தித்தாள் தொடர்ந்தது. ‘சிங்கப்பூர் மாதிரி வேறுபட்டது, மேலும் கணக்கில் சேர்த்துக்கொள்ளப்படக் கூடும்… இது தீர்வுகளுக்காக கிழக்கு நோக்கிப் பார்க்க வேண்டிய நேரமாக இருக்கலாம்.’

அடுத்த நாள் டெய்லி மிரர் இந்த மூலோபாயத்திற்கும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் நகர்வுகளுக்கும் ஒப்புதல் அளித்த பி.கே. பாலச்சந்திரனின் ஒரு கருத்தை பிரசுரித்தது. “மேற்கைப் போலவே… வைரஸைப் பற்றிய சித்தப்பிரமைக்கு எந்த இடமும் கொடுக்கக்கூடாது. சித்தப்பிரமை பொது மக்களின் மன உறுதியையும் எதிர்காலத்தில் அவர்களின் நம்பிக்கையையும் சேதப்படுத்தும்.”

பாலச்சந்திரன் அரசாங்கத்தை பாராட்டியதோடு, ‘பொது முடக்கம் மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை மீண்டும் திணிப்பதற்கான சோதனையை எதிர்ப்பது” முக்கியம் “இது பொருளாதாரத்தை பின்னடையச் செய்வதோடு வருமான உற்பத்தியை பாதிக்கும்’ என்று அறிவித்தார். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் மரணத்திற்கு வழிவகுத்த கொலைகார ‘சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பரப்பல்’ கொள்கையை அவர் ஒரு ‘தீர்வாக’ காட்டுகிறார்.

ஆளும் வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவினராலும் ஆதரிக்கப்படும் இராஜபக்ஷ அரசாங்கத்தின் சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பரப்பல் கொள்கையை தொழிலாள வர்க்கம் நிராகரிக்க வேண்டும். முதலாளித்துவ முறைமையின் கீழ் தொற்றுநோய்க்கு தேசிய தீர்வு எதுவும் கிடையாது, இங்கு இலாபங்கள் மனித வாழ்க்கையை விட முன்னுரிமை பெறுகின்றன.

இலங்கைத் தொழிலாளர்கள் சர்வதேச அளவில் தங்கள் வர்க்க சகோதர சகோதரிகளுடன் ஒன்றிணைந்து தங்கள் சொந்த நலன்களுக்காக போராட வேண்டும். உண்மையான கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும், வேலை நிறுத்தப்படும் தொழிலாளர்களுக்கு ஒழுக்கமான வாழ்வதற்கேற்ற ஊதியத்துடன் அத்தியாவசியமற்ற உற்பத்தியை மூடுவதற்கும் ஒவ்வொரு வேலைத் தளத்திலும் நடவடிக்கைக் குழுக்களை கட்டியெழுப்ப வேண்டும். நான்காம் அகிலத்தின் அனைத்தலுக குழுவால் பிரேரிக்கப்பட்டுள்ள தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் சர்வதேச கூட்டணியைக் கட்டியெழுப்பும் பாதையில் இந்த போராட்டங்கள் முன்னோக்கி நகர்த்தப்பட வேண்டும்.

இந்த போராட்டத்தில், இலங்கைத் தொழிலாளர்கள் கிராமப்புற மக்களையும் ஏழைகளையும் அணிதிரட்டிக்கொண்டு சோசலிசக் கொள்கைகளுக்காகப் போராட வேண்டும் – அதாவது வங்கிகள், பெருந் தோட்டங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொள்ளவும், வெளிநாட்டுக் கடன்களை நிராகரிக்கவும், பெரும்பான்மையினரின் நலனுக்காக சமூகத்தை மறுசீரமைக்கவும் போராட வேண்டும்.