சிறிலங்கா காவல் துறை திணைக்களமே சட்டத்தை மீறுகின்றது

சனி ஜூலை 31, 2021

 கிளிநொச்சி - இரணைமடுவில் அமைந்துள்ள பிரதி   காவல் துறை மா அதிபர்  அலுவலகத்திற்கு அனுப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மேன் முறையீட்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

இது  தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சியை  சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் தகவல் அறியும்  உரிமைச் சட்டத்தின் ஊடாக கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதி காவல் துறை மா அதிபர் அலுவலகத்திடம் கடந்த 30.04.2021 திகதியிட்டு சில தகவல்களை கோரி விண்ணப்பத்தை அனுப்பியிருந்தார். 

இதற்கான பதில் சட்டத்தில் குறிப்பிப்பட்ட  கால எல்லையைக் கடந்தும்  அனுப்பப்படவில்லை. 

இந்த நிலையில் சட்டத்தின் பிரகாரம் ஊடகவியலாளர் குறித்தளிக்கப்பட்ட அலுவலருக்கு 20.07.2021 திகதியில்  மேன் முறையீடு விண்ணப்பத்தை தகவல் அறியும் படிவம் 10 ஊடாக பதிவுத் தபாலில் அனுப்பியிருந்தார்.

இந்த விண்ணப்பத்தையே கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி காவல் துறை மா அதிபர் அலுவலகம் ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ளது. 

கோரிக்கை அனுப்பட்ட தபாலுறையில்  பொலிஸ் திணைக்களத்தால் ஏற்க மறுத்துள்ளார்கள் என எழுதப்பட்டுள்ளது.  

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி  அலுவலகங்கள் நிறுவனங்களில் உள்ள தகவல் அறியும் அலுவலருக்கு  விண்ணப்பித்து அவரிடமிருந்து உரிய காலத்தில் தகவல் ஏதேனும் கிடைக்கவில்லை என்றால் அவ்வலுவலகத்தில் சட்டத்தின் பிரகாரம் நியமிக்கப்பட்டுள்ள குறித்தளிக்கப்பட்ட  அலுவலருக்கு மேன் முறையீடு செய்ய வேண்டும்.

இதற்கும் பதில் இல்லை எனில் தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு முறையீடு செய்ய முடியும். ஆனால் சட்டத்தை நடைமுறைப்படுத்துகின்ற பொலிஸ்  திணைக்களமே அதை மீறியுள்ளது.