சிறிலங்காவில் கொரோனா தொற்றை மறைத்து தேர்தலை நடத்த கோட்டபாய அரசு தீவிர முயற்சி!

சனி ஜூலை 11, 2020

சிறிலங்காவில் நேற்று (10) ஒரே நாளில் 293 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதை அடுத்து, இங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2447 ஆக அதிகரித்துள்ளது.

எனினும், இதன் தாக்கம் தொடர்பாக அக்கறையற்ற அரசாங்கம் தேர்தலை நடத்தி முடிக்கும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. 
  
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்த 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நேற்று காலை அறிவிக்கப்பட்டது.

நேற்று முன்தினம் (09) கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்த 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

h

வெலிக்கடை சிறைச்சாலையில் கொரோனா தொற்றுக்குள்ளான கைதியுடன் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்தவர்களுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

இதையடுத்து, மேலும் 90 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் நேற்று முன்தினம் மாலை இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. 

இதனையடுத்து, சிறிலங்காவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2450 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மாத்திரம் 296 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

ஆரம்பத்தில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையை தீவிரப்படுத்தியிருந்த அரசு தற்போது அது தொடர்பாக அக்கறை இன்றி, தேர்தலை நடத்தி முடிக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

தேர்தல் நடத்தப்பட்டால் தமக்கே வெற்றிவாய்ப்பு உறுதி என்ற நிலையிலேயே மகிந்த – கோட்டா அரசு தற்போது தேர்தலுக்கு அவசரம் காட்டுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.