சிறிலங்காவின் பாதுகாப்பு கேள்விக்குறி, முக்கிய இடங்களில் பொலிஸ் பாதுகாப்பு

செவ்வாய் ஜூலை 07, 2020

சிறிலங்காவில் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளதாகவும் முக்கிய இடங்களுக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்குமாறும் புனனாய்வுத்துறை எச்சரித்துள்ளதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொலிஸ் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

தேவாலயங்களிலும், பொதுமக்கள் அதிகளவில் கூடுகின்ற கண்டி, கதிர்காமம் போன்ற இடங்களிலும், ஏனைய வழிபாட்டுத தலங்களிலும் பாதுகாப்பு தொடர்ந்து தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, சிறப்பு புலனாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களும் எச்சரிக்கப்பட்டுள்தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஏதேனும் தேவாலயம் அல்லது ஏனைய வழிபாட்டுத் தலங்கள் கூடுதல் பாதுகாப்பு கோரினால், அதனை வழங்குமாறும் பொலிஸ் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு வாரங்களாக தேவாலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் பெருமளவு படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக ஞாயிறு ஆராதனைகளின் போது அதிகளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொலிஸ் பேச்சாளர், இது ஒரு விசேட நடவடிக்கை அல்ல எனவும்  புலனாய்வுப் பிரிவுகளால் விடுக்கப்பட்ட ஆலோசனையின் பேரிலேயே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

அத்துடன் தொடர்ந்து பொலிசார் விழிப்பு நிலையிலேயே இருப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.