சிரியாவில் தொடரும் வன்முறை: ஐ.நா. கவலை!

வெள்ளி நவம்பர் 08, 2019

வடக்கு சிரியாவில் தொடர்ந்து நடக்கும் வன்முறைகள் கவலை அளிப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. நேற்று வெளியிட்ட அறிக்கையில் , “சிரியாவின் வடக்குப் பகுதியில் நடக்கும் வன்முறை காரணமாக பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வன்முறைகள் அங்கு நடந்து வருகின்றன. அக்டோபர் 9 ஆம் தேதி சிரிய எல்லையில் துருக்கி நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் பலர் பலியாகி உள்ளனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிரியாவில் தொடர்ந்து நடக்கும் வன்முறை வருத்தம் அளிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் கடந்த சில வாரங்களாக நடக்கும் வன்முறை காரணமாக 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

சிரியாவில் குர்து படைகளுக்கு எதிராக துருக்கி ராணுவத்தின் தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா தனது படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்து திரும்பப் பெற்றது. துருக்கியின் தாக்குதலைத் தொடர்ந்து சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து குர்து படையினர் பின்வாங்கி உள்ளனர். இந்நிலையில் துருக்கி - சிரியா எல்லையில் இரு நாட்டுப் படைகளும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.