சிவாஜிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

செவ்வாய் சனவரி 28, 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கம், இந்தியாவில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றினால், அவருக்கு நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

வட்டுவாகலில் காணி அளவீடு சம்பந்தமாக இடம்பெற்ற முரண்பாடு ஒன்றின்போது, அரச அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாக தெரிவித்து அவருக்கு எதிராக தொடரப்பட்டிருந்த வழக்கின் விசாரணை நேற்று இடம்பெற்றது.

இதன்போது, அவர் மன்றில் முன்னிலையாகியிருக்கவில்லை. இதனையடுத்து நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.இது தொடர்பாக ஆராய்ந்தபோது எம்.கே.சிவாஜிலிங்கம் சில தினங்களுக்கு முன்னதாகவே இந்தியாவிற்கு சென்றுள்ளமை தெரிய வந்துள்ளது.

இதேவேளை சிவாஜிலிங்கம் மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோருக்கு எதிரான குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.