சஜித் பொருத்தமானவரா?

செவ்வாய் செப்டம்பர் 10, 2019

இலங்கையில் தற்போதைய அரசாங்கம் தொடர்பில்  பெரும்பாலான மக்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த மாயைகளிலிருந்து அவர்களை விடுவித்து வெளிக் கொண்டு வருவதற்கும் வாக்காளர்களை தம் பக்கமாகக் கவருவதிலும் ஐக்கிய தேசியக் கட்சி பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளது. 

 சராசரி பொதுமக்கள் மத்தியில் நாட்டின் அரசியலமைப்பு சீர்திருத்தம் மற்றும் சட்டச் சீர்திருத்தங்கள், நிலைமாற்றத்திற்கான நீதி, வெளிநாட்டுக் கொள்கைகள் என்பன பற்றி பெரும் அக்கறை காணப்படவேண்டும் என்றோ மற்றும் அவற்றின் உள் தாற்பரியங்கள் பற்றி சரியாக விளங்கிக்கொண்டிருக்க வேண்டும் என்றோ பெருமளவு எதிர்பார்க்க முடியாது.

2015 ஆம் ஆண்டு தேர்தலின் போது மக்களிடம் தாம் நாட்டில் ஊழலற்ற அரசாங்கத்தை ஏற்படுத்தப் போகிறோம், பொருளாதார அபிவிருத்தியைக் கொண்டு வரப் போகின்றோம் என்றெல்லாம் உறுதிகள் வாரி வழங்கப்பட்டன. 

ஆனால் அவற்றை அவ்வாறு செய்து முடிக்கவில்லை. அதேவேளையில் இவற்றைப் பொறுத்தமட்டில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவிடம் சாதாரண வறுமையான பொதுமக்களை அவர்களது துயரங்களிலிருந்து வெளிவர ஆவன செய்வது தொடர்பில் சாதனைகள் செய்யக்கூடியவர், அப்பிரிவினரது நல்வாழ்க்கை தொடர்பில் கரிசனம் கொண்டவர் என்ற முறையில் அவர் ஒரு சிறப்பான தொடர்பினை பொது மக்களிடம் ஏற்படுத்திக் கொண்டவராகத் தென்படுகிறார். 

அவ்வாறு அவர் கொண்டுள்ள கரிசனங்களுக்கும் அர்ப்பணிப்புகளுக்கும் சிறந்த சான்றாதாரமாக அவர் தனது பதவியின் மூலம் அம்மக்கள் பிரிவினருக்கு நிர்மாணித்து வழங்கி வந்துள்ள வீடுகள் திகழ்கின்றன. 

நாட்டில் கணிசமான அளவிலான வாக்காளர்கள் வாழ்க்கை வசதிகளில் கீழ் மட்டத்திலேயே இருந்து வருகின்றனர்.

நாட்டு மக்களில் 40 வீதமானோர் சமுர்த்தி நலன்புரி உதவிகளை பெற்று வருகின்றனர். 

அம்மக்கள் தமது தேவைகளை அவரே வழங்கக்கூடியவர் என்ற நம்பிக்கையுடன் காணப்படுவதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

அத்துடன் அவருடைய தந்தையார் காலஞ்சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவும் இதேபோன்ற ஒரு நம்பிக்கையை பொதுமக்களிடம் வளர்த்துக் கொண்டிருந்தவர்.

சராசரி பிரஜைகளின் தோழர், எடுத்த காரியங்களைச் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர், சொல்வதைச் செய்யக்கூடியவர், நாட்டின் அனைத்து சமய மக்களையும் மதித்து நடப்பவர், சாமான்யனாக இருந்து உயர்மட்டத்திற்கு வந்த ஏழைகளின் துயரறிந்தவர் என்றெல்லாம் பெயர் பெற்றவர்.

ஐந்தே வருடங்களில் (1978– 83) 10 இலட்சம் வீடுகளை நாட்டில் நிர்மாணிக்க வழிகாட்டியவர். 

ஒரே மாதத்தில் ஏறத்தாழ ஒன்றரை இலட்சத்திற்கு மேலான இந்திய வம்சாவளி மலையக மக்களை வாக்கிழந்து இருந்த நிலையிலிருந்து வாக்களிக்கத் தகுதி கொண்ட பிரஜைகளாக்கினார். 

அனைத்து சமய வணக்கத் தலங்களுக்கும் சென்று பிரார்த்தனை நடத்தி சமய சமரசத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர். 

இத்தகைய தந்தையின் வழி வந்தவரே சஜித் பிரேமதாஸ. இந்த வரலாறு இற்றைக்கு 25 வருடங்களுக்கு முந்தியது தான். 35 வயதுள்ள பெரும்பாலானோருக்கு இந்த விபரங்கள் தெரிந்திருக்கும்.

ஆனால் மறுபுறத்தில் பார்க்கும்போது கட்சியின் தலைமைத்துவம் மற்றும் அறிவுபூர்வமான சிரேஷ்ட அங்கத்தவர்களைப் பொறுத்தமட்டில் அவர்களிடம் அமைச்சர் சஜித் பிரேமதாஸ கொள்கைகள் சார்ந்து தீர்மானங்களைச் செய்வதற்கான முழுமையான திசைப்படுத்தும் திறமையை கொண்டுள்ளமையைப் பொறுத்து மாறான அபிப்பிராயங்களே நிலவுகின்றன எனத் தெரிகிறது. 

நாட்டில் நிலவும் பிரதான முரண்பாடுகளைக் கொண்ட பிரச்சினைகளான அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள், கடந்த காலப் பிரச்சினைகளைக் கையாளுதல், வெளிநாட்டுக் கொள்கை என்பன தொடர்பில் அவர் என்ன நினைக்கிறார். 

அவருடைய நிலைப்பாடு யாது? என்பன தொடர்பில் கூறக்கூடியதாக வெகு சில கருத்துகளே உள்ளன.

இன்னுமொரு குறிப்பிடத்தக்க விமர்சனம், அவர் அதிகார பரவலாக்கம் தொடர்பில் கரிசனை குறைந்தவராகக் காணப்படுகிறார் என்பதாகும். 

தமிழ் அரசியலைப் பொறுத்தமட்டில் இந்த விடயமானது மிக முக்கியமானதும் அம்மக்களது ஆதரவு வாக்குகளைப் பெற அத்தியாவசியமானதுமாகும். 

இது குறித்த சீர்திருத்தம் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய, நிதியமைச்சர் மங்கள சமரவீர, மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க போன்றோர்களே பொது மக்களிடம் ஆதரவைப் பெற்ற தலைவர்களாகக் காணப்படுகின்றனர். 

கடந்த நான்கு வருடங்களில் கட்சித் தலைமையின் தீர்மானங்களுடன் அனுசரித்துப் போகும் வழியில் இவர் வீட்டு வசதி அமைச்சராக செயற்பட்டு வந்துள்ளார். 

நாட்டில் நிலவும் பலதரப்பட்ட பிரச்சினைகளையும் கவனத்திற்கொண்டு பார்க்கும்போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் இலங்கை பொதுமக்கள் பெரமுன கட்சியின் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளருமான கோத்தபாய ராஜபக் ஷவிடமிருந்து இத் தேர்தலின்போது வரக்கூடிய தேசியத்துவ கொள்கைகளுடனான சவால்களை எதிர்கொண்டு வெற்றிகரமாக செயற்பட முன்கூறிய முக்கியமான தலைவர்கள் (பிரதமர், சபாநாயகர், நிதியமைச்சர், முன்னாள் ஜனாதிபதி) உட்பட்ட குழுவுடன் இணைந்து சஜித் செயற்பட வேணடிய நிர்ப்பந்தம் உண்டெனத் தோன்றுகிறது.

பேராசிரியர் மா.செ. மூக்கையா