சஜித்தின் எதிர்காலம் நவம்பர் 16ஆம் திகதிக்கு பின்னர் கேள்விக்குறியாக்கப்படும்!

புதன் அக்டோபர் 09, 2019

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் எதிர்காலம் நவம்பர் 16ஆம் திகதிக்கு பின்னர் கேள்விக்குறியாக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேச நாணயக்கார தெரிவித்தார்.

அநுராதபுரத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கொள்கையற்ற அரசியல் பிரசாரத்தையே ஐக்கிய தேசியக் கட்சி தற்போது முன்னெடுத்து செல்கிறது.

ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் கருத்துக்கள் அனைத்தும் நகைச்சுவையாகவே காணப்படுகின்றன.எவ்வித கொள்கைகளும் இல்லாமலே 2015ஆம் ஆண்டு ஆட்சிமாற்றம் ஏற்பட்டது.

இதன் காரணமாகவே கடந்த ஐந்து வருட காலமாக நாடு பாரிய நெருக்கடிகளை அனைத்து துறைகளிலும் எதிர்கொண்டது.ஐக்கிய தேசியக் கட்சியிடம் தவறாக ஆட்சியதிகாரத்தை வழங்கிய மக்கள் தற்போது தவறினை திருத்திக்கொண்டுள்ளார்கள்.

ஐக்கிய தேசியக் கட்சி மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றாது. நவம்பர் 16ஆம் திகதிக்கு பின்னர் ஆளும் தரப்பின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படும் என அவர் இதன்போது தெரிவித்தார்.