சமாதானம், ஒத்துழைப்பு மீதான சீனாவின் ஈடுபாட்டை மீள உறுதிப்படுத்தும் சி ஜின்பிங்

திங்கள் நவம்பர் 01, 2021

 பெய்ஜிங்,( சின்ஹுவா) — சமாதான ரீதியான அபிவிருத்தி மற்றும் சகலருக்கும் பயன்தரும் ஒத்துழைப்பு மீதான சீனாவின் ஈடுபாட்டை மீள உறுதிப்படுத்தியிருக்கும் ஜனாதிபதி சி ஜின்பிங் ஐக்கிய நாடுகளின் அதிகாரத்தையும் மதிப்பையும் ஆதரித்து பல்தரப்புவாதத்தை( Multilateralism) நடைமுறைப்படுத்துமாறு உலகத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.

  மக்கள் சீனக்குடியரசு  ஐக்கிய நாடுகளில் சட்டபூர்வமாக ஆசனத்தைப் பெற்ற 50 வது வருட நிறைவை முன்னிட்டு  திங்களன்று (அக்டோபர் 25)  ஒரு கூட்டத்தில் உரையாற்றிய அவர் சீனா எப்போதுமே கட்டியெழுப்பும் ஒரு நாடாகவும் உலகளாவிய அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்யும் நாடாகவும் சர்வதேச ஒழுங்கை(International order) பாதுகாக்கும் நாடாகவும் விளங்கும் என்று குறிப்பிட்டார்.

  ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர், ஐ.நா. பொதுச்சபையின் 26வது கட்டத்தொடர் அதிகப் பெரும்பான்மையான வாக்குகளால் தீர்மானம் 2758 ஐ நிறைவேற்றி ஐ.நா.வில் மக்கள் சீனக்குடியரசுக்கு சகல உரிமைகளையும் ஒப்படைத்தது.

  ” அது சீன மக்களினதும் உலக மக்களினதும் ஒரு வெற்றியாகும்” என்று கூறிய ஜனாதிபதி சி ஜின்பிங் கடந்த ஐம்பது வருடங்களும் சீனாவின் சமாதான ரீதியான அபிவிருத்தியையும் மனிதகுலத்தின் நல்வாழ்வு மீதான அதன் ஈடுபாட்டையும் அர்ப்பணிப்பையும் கண்ணுற்றன என்று குறிப்பிட்டார்.


  சமாதானத்துக்கும் அபிவிருத்திக்கும்   பங்களிப்பு

  ஐக்கிய நாடுகளில் சீனாவின் சட்டபூர்வமான ஆசனம் ஒப்படைக்கப்பட்டமை உலகிற்கும் ஐக்கிய நாடுகளுக்கும் ஒரு தனிச்சிறப்பவாய்ந்த நிகழ்வை குறித்து நின்றது.உலகில் நீதிக்காக நின்ற சமாதானத்தை விரும்பும் சகல நாடுகளினதும் கூட்டு முயற்சியின் விளைவாகவே அது வந்தது.

  ” அது சீன மக்களின் அல்லது உலக ஜனத்தொகையின் நான்கில் ஒரு பங்கினர் ஐ.நா.அரங்கிற்கு திரும்பி வந்ததை குறித்து நின்றது”என்று கூறிய ஜனாதிபதி அதன் முக்கியத்துவம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகவும் சீனாவுக்கும் பரந்த உலகிற்கும் பயன் விளைவுகளைக் கொண்டுவந்ததாகவும் அமைந்தது என்று குறிப்பிட்டார்.
   சர்வதேச கற்கைகளுக்கான சீன நிறுவனத்தின் நிறைவேற்று துணைத்தலைவர் றுவான் சொங்ஸி குறிப்பிடுகையில் ஐ.நா.வில் சீனாவின் சட்டபூர்வமான ஆசனம் ஒப்படைக்கப்பட்டமை அது உண்மையில் உலகளாவிய பிரதிநிதித்துவ மற்றும் அதிகாரபூர்வ சர்வதேச அமைப்பாக மாறியதை குறித்து நின்றது;ஐ.நா. வினதும்  சீனாவின் இராஜதந்திர  வரலாற்றினதும்  வளர்ச்சியில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மைல் கல்லாக அமைந்ததுஎனாறு சொன்னார்.

  இந்த 50 வருடங்களிலும் சீன மக்கள் உலகம் பூராவும் உள்ள மக்களுடன் ஒருமைப்பாடு மற்றும் ஒத்துழைப்பு உணர்வுடன் நின்றார்கள். சீன மக்கள் சர்வதேச சமத்துவம் மற்றும் நீதியை ஆதரித்துப் போற்றியதுடன் உலக சமாதானத்துக்கும் அபிவிருத்திக்கும் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பைச் செய்தார்கள்.

  1990 ஆம் ஆண்டிலிருந்து சீனா ஐ.நா.வின்  30 அமைதி காக்கும் பணிகளுக்கு ஐம்பது ஆயிரத்துக்கும் அதிகமான படையினரை அனுப்பியது.ஐ.நா.வின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்கு இரண்டாவது பெரிய  நிதிப்பங்களிப்பை செய்யும் நாடாக விளங்கும் சீனா ஐ.நா.பாதுகாப்பு சபையின் வேறு எந்த உறுப்பு நாட்டையும் விடவும் கூடுதல் எண்ணிக்கையில் அமைதிகாக்கும் படையினரை பங்களிப்பு செய்த நாடாகவும் இருக்கிறது.
  சீனா குறிப்பிடத்தக்க  அபிவிருத்தியை கண்டிருக்கிறது;   ஒப்பீட்டளவில் குறைவான உற்பத்தியைக் கொண்ட நாடு என்ற நிலையில் இருந்து சீனா இன்று உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக பாய்சலைச் செய்திருக்கிறது.

 உலக வங்கியின் வறுமைக்கோட்டின் பிரகாரம் சீனாவின் வறுமைக்குறைப்பு உலகின் மொத்த வறுமைக்குறைப்பின் 70சதவீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதன் மூலமாக சீனா நிலைபேறான அபிவிருத்திக்கென்று ஐ.நா. குறித்துரைத்த 2030 இலக்கை பத்து வருடங்கள் முன்கூட்டி சாதித்திருக்கிறது.
  ” சமாதானமும் அபிவிருத்தயும் எமது பொது இலட்சியங்கள். சமத்துவமும் நீதியும் எமது அபிலாசை.ஜனநாயகமும் சுதந்திரமும் எமது பொது செயல் முயற்சிகள்” என்று சி ஜின்பிங் சொன்னார்.

  ” சமாதானம், அபிவிருத்தி,சமத்துவம்,  ஜனநாயகம் மற்றும் சுதந்திரம் ஆகியவை மனிதகுலத்துக்கான பொது விழுமியங்கள்.அவற்றை நாம் உறுதியாகவும் துடிப்புடனும் நியாயப்படுத்தி பாதுகாக்க வேண்டும்.சிறப்பானதொரு உலகை கட்டியெழுப்துவதற்கான சரியான வழிகாட்டல் கோட்பாட்டை வழங்குவதற்காக நாம் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும். எந்தளவு கூடுதலாக சீனா வளர்கிறதோ அந்தளவுக்கு கூடுதலாக ஐ.நா. சிறப்பானதாக இருக்கும்.சர்வதேச விவகாரங்களில் பெரியதொரு பாத்திரத்தை ஐ.நா. வகிக்க சீனாவினால் உறுதியாக ஆதரவளிக்கமுடியும்.உலகளாவிய சமாதான ரீதியான அபிவிருத்திக்கும் முன்னேற்றத்துக்கும் சீனாவினால் தொடர்ந்து பங்களிப்பு செய்யமுடியும்” என்று றுவான் கூறினார்.

  சகலருக்கும் நன்மை பயக்கும் விளைவுகள்

    ஒரு நூற்றாண்டு காலத்தில் கண்டிராத துரித மாற்றங்களுக்கு தற்போது உலகம் முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் அதேவேளை,சமாதானம், அபிவிருத்தி மற்றும் முன்னேற்றத்துக்கான சக்திகள் தொடர்ந்து வளர்ச்சி கண்டிருக்கின்றன.அத்தகைய சூழ்நிலையில்,மோதலுக்கு பதிலாக ஒத்துழைப்பையும் ஒதுங்கியிருப்பதற்கு பதிலாக ஔிவுமறைவின்மையையும் எவருக்குமே பயன்தராத போக்கிற்கு பதிலாக பரஸ்பர பயன்விளைவுகளை தருகின்ற போக்கையும் தெரிவுசெய்யுமாறு சி ஜின்பிங் உலகிற்கு அழைப்பு விடுத்தார்.

  ” பரஸ்பர மற்றும்  எவருக்கும் தீங்கு வராத பயன்விளைவுகள்   மீது பற்றுறுதி கொண்டவர்களாகவும்  எமது மக்களின் பெரும்பயனுக்கான பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தியை மேம்படுத்த ஒன்றுசேர்ந்து பாடுபடுபவர்களாகவும் நாம் இருக்கவேண்டும் ” என்று அவர் சொன்னார்.

  பொது அபிவிருத்தியை சாதிப்பதில் சீனா பற்றுறுதி கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்ட ஜனாதிபதி வளர்ச்சியடைந்துவரும் ஏனைய நாடுகளுக்கு சீனா எப்போதும் உதவியிருப்பதுடன் அதன் சொந்த அபிவிருத்தியின் ஊடாக உலகிற்கு புதிய வாய்ப்புக்களை வழங்கியிருக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.
  ” சீனாவின் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி அதற்கு  மாத்திரமல்ல,பிராந்தியத்திற்கு குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகள் சங்கத்துக்கும்( ஆசியான்) உலகிற்கும் கூட நற்பேறாக அமைந்திருக்கிறது என்று கம்போடிய அரசாங்கத்தின் பிரதம  பேச்சாளரான பே சிபான் கூறினார்.

   கடந்த மாதம் நடைபெற்ற ஐ.நா.  பொதுச்சபையின் 76வது கூட்டத்தொடரில் உலகளாவிய அபிவிருத்தி மீது கொவிட்–19 தொற்றுநோய் ஏற்படுத்துகிற தாக்கங்களை வெற்றிகொள்வதற்கு நாடுகள் ஒன்றிணைந்து பாடுபடும் நம்பிக்கையுடன் உலக அபிவிருத்தி செயற்திட்டம் ( Global Development Initiative) ஒன்றை பிரேரித்திருந்தது; நிலைபேறான அபிவிருத்திக்கான 2030இலக்கை துரிதப்படுத்துவதற்கும் பொதுவான எதிர்காலத்துடனான உலக சமூக அபிவிருத்தியை கட்டியெழுப்புவதற்கும் யோசனையை முன்வைத்தது.

  ஐ.நா.செயலாளர் நாயகம் அன்ரோனியோ குற்றெரஸ் இந்த செயற்திட்டத்தை உலக சமத்துவத்தை மேம்படுத்துவதற்கு மகத்தான நேர்மறையான முக்கியத்துவம் கொண்டது என்று பாராட்டியதுடன்  அதை ஐ.நா. முழுமையாக ஆதரிக்கிறது என்றும் கூறினார். இது விடயத்தில் சீனாவுடன் ஒத்துழைப்பை பலப்படுத்த ஐ.நா. தயாராயிருக்கிறது எனாறும் அவர் சொன்னார்.

  வேறுபட்ட அபிவிருத்திக் கட்டங்களில் உள்ள நாடுகளின் வேறுபாடுகளையும் குணாதிசயங்களையும் இந்த செயற்திட்டம் ஒருங்கிணைப்பதாகவும் சகல நாடுகளினாலும் எதிர்நோக்கப்படுகின்ற பொதுவான சவால்கள் மற்றும் பிரச்சினைகள் மீது கவனத்தைக் குவிப்பதாகவும் UN Global Compact இன் ஆசிய பசுபிக் வலையமைப்பின் தலைவரான லியூ மெங் கூறினார்.” செயற்திட்டம் நாடுகள்  மத்தியில்  கருத்தொருமிப்பை கட்டியெழுப்புவதற்கும் கூட்டு முயற்சிகளை முன்னெடுப்பதற்கும் எந்த நாட்டுக்கும் பாதிப்பில்லாத ஒத்துழைப்பை மேம்படுத்தவும் உதவுகிறது” என்று லியூ கூறினார்.

  உண்மையான பல்தரப்புவாதத்தின் குரல்

  பயங்கரவாதம்,காலநிலை மாற்றம், இணையவெளி பாதுகாப்பு மற்றும் உயிரியல் பாதுகாப்பு போன்ற சவால்களை உலகம் எதிர்கொண்டிருக்கும் நிலையில்,ஐ.நா.வின் அதிகாரத்தையும் மதிப்பையும் போற்றிப்பேணுமாறும் பல்தரப்புவாதத்தை நடைமுறைப்படுத்துமாறும் சி ஜின்பிங் தனதுரையில் வலியுறுத்தினார்.” கூடுதலான அளவுக்கு சகல தரப்பையும் உள்ளடக்கிய உலக ஆட்சிமுறை, பயனுறுதியுடைய பல்தரப்பு பொறிமுறைகள் மற்றும் சுறுசுறுப்பான பிராந்திய ஒத்துழைப்பு ஆகியவையே இந்த பிரச்சினைகளை உறுதியானமுறையில் கையாள உதவும்”என்று அவர் சொன்னார்.

  “சர்வதேச சட்டவிதிகளை தனிப்பட்ட நாடுகளினாலோ அல்லது நாடுகள் குழுவினாலோ அல்ல, ஐ.நா.வின்  193உறுப்பு  நாடுகளினால் மாத்திரமே உருவாக்கமுடியும். 193 நாடுகளும் எந்த விதிவிலக்குமின்றி சர்வதேச சட்டவிதிகளை பின்பற்றவேண்டும்”என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

   ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடு என்ற வகையில் சீனா உலகளாவிய ஆட்சிமுறையை மேம்படுத்துவதில் நல்ல முன்னுதாரணத்தை வகுத்திருக்கிறது; ஐக்கிய நாடுகள் சாசனத்தின் நோக்கங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் உண்மையாக நடந்துகொள்கிறது ; சர்வதேச விவகாரங்களில் ஐக்கிய நாடுகளின் மத்திய பாத்திரத்தை மதிக்கிறதுஎன்று தாய்லாந்தை தளமாகக் கொண்டியங்கும் சியாம் சிந்தனைக்குழுவின் தலைவரான நடீ ராவீசிறிஃபியூயெங்ஃபங்  கூறினார்.

  மனிதகுலத்துக்கு  பொதுவான எதிர்காலத்துக்கான ஒரு சமூகத்தை நோக்கி எஞ்சிய உலகத்துடன் சீனா பற்றுறுதியுடன் பாடுபடுகிறது.இது உலகளாவிய ஆட்சிமுறையை மேம்படுத்துவதற்கு சீனா எவ்வாறு முயற்சிகளை முன்னெடுக்கிறது என்பதற்கு ஒரு திடமான சான்றாகும் என்றும் அவர் மேலும் சொன்னார்.

  ஐக்கிய நாடுகளுக்கும் உலகிற்குமான சீனாவின் கடப்பாட்டை மீள உறுதிப்படுத்திய சி ஜின்பிங் பரந்தளவு கலந்துரையாடல், கூட்டுப் பங்களிப்பு, ஒத்துழைப்புக்கான புதிய சிந்தனைகள் மற்றும் புதிய வகைமாதிரிகளைக் கண்டறிவதற்கான பொதுவான பயன்கள், புதிய சூழ்நிலைகளின் கீழ் பல்தரப்புவாத நைடைமுறையை வளப்படுத்துதல் ஆகிய கோட்பாடுகளின் கீழ் உலக நாடுகளுடன் பணியாற்ற சீனா தயாராயிருக்கிறது  என்று ஜனாதிபதி சி சொன்னார்.

  பல்தரப்புவாதத்தில் எப்போதும்  உறுதியாக இருக்கும் சீனா ஐக்கிய நாடுகளின் செயல் நோக்கங்களை ஆதரிக்கிறதுஎன்று கூறிய செயலாளர் நாயகம் குற்றெரஸ் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தி, பல்தரப்புவாதத்தை போற்றிப்பேணி, உலக ஆட்சிமுறையை மேம்படுத்தி கூடுதலான அளவுக்கு நேர்மையையும் நீதியையும் சாதிக்குமாறு சர்வதேச சமூகத்துக்கு அழைப்புவிடுத்தார்.