சமூக சீர்கேடான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிளிநொச்சியில் போராட்டம்!

சனி சனவரி 18, 2020

கிளிநொச்சி – விநாயகபுரத்தில் நடைபெற்றுவரும் சமூக சீர்கேடுகளைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை விடுத்து இன்று (18) சனிக்கிழமை மாலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

மேற்படி பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் விநாயபுரம் கிராம அபிவிருத்திச் சங்க மண்டபத்திற்கு முன்பாக மாலை 4 மணியளவில் ஒன்றுகூடி இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். 

குறித்த பிரதேசத்தில் விபச்சார விடுதி ஒன்று இயங்கி வருகின்றது. இதனால் அப்பிரதேசத்தில் இளைஞர், யுவதிகளிடையே கலாசாரப் பிறழ்வுகள் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளது என அப்பிரதேச மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

அந்த விடுதியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பல இடங்களுக்கும் சென்று தாங்கள் கோரிக்கை விடுத்த போதிலும் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர். 

விபச்சார விடுதி நடத்துபவருக்கும் சிறிலங்கா பொலிஸாருக்கும் இடையே மிகவும் நெருக்கம் உண்டு எனவும் இதனால் பொலிஸார் நடவடிக்கை எடுப்பதற்கு பின்னடிக்கின்றனர் எனவும் மக்கள் கூறுகின்றனர். 

பொலிஸாரும் அவ்வப்போது விடுதிக்குச் சென்றுவருகின்றனர் என மக்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலும் சிங்கள இனத்தவர்களே அந்த விடுதிக்கு இளம் பெண்களை அழைத்து வருகின்றனர் எனவும் மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். 

இந்த விடுதியை அங்கிருந்து அகற்றாவிட்டால் தாங்கள் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுப்பார்கள் எனவும் அவர்கள் உறுதிபடக்கூறினர்.