சமூக இடைவெளியை,2022ம் ஆண்டு வரை கடைப்பிடிக்க வேண்டியிருக்கும்!!

ஞாயிறு ஏப்ரல் 19, 2020

அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள், 'நாவல் கொரோனா கோவிட் - 19' வைரஸ் பரவல் குறித்து, கவலை தரும் ஆய்வு முடிவுகளை எட்டி உள்ளனர்.

'சயின்ஸ்' இதழில் வெளியாகியுள்ள அந்த ஆய்வின்படி, தற்போது உலகெங்கும் கடைப்பிடிக்கப்படும் சமூகத் தடைகளை சில வாரங்களில் நீக்குவதால், கொரோனா வைரஸ் பரவல் முன்பைவிட வேகமாக இருக்கக் கூடும்.

ஹார்வர்டு விஞ்ஞானிகள், ஏராளமான சமூகத் தரவுகளை உள்ளிட்டு, சக்தி வாய்ந்த கணினி மாதிரிகளை உருவாக்கி ஆராய்ந்து, இந்த முடிவுக்கு வந்துள்ளனர். தவிர, கொரோனா வைரஸ், ஒன்று, இரண்டு அல்லது சில ஆண்டுகளுக்கு ஒரு முறை தலைதுாக்கும் ஆபத்தும் உள்ளதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

உலக நாடுகள் ஏதாவது ஒரு வடிவில், சமூக இடைவெளியை, 2022ம் ஆண்டு வரை கடைப்பிடிக்கவேண்டியிருக்கும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அடுத்து வரும் மாதங்களில், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு, அது பரவலாக போடப்பட்டால், இந்த ஆபத்து விலகும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு கணினி மாதிரிகளை வைத்து செய்யப்பட்டது என்றும், கலாசார, பருவநிலை மற்றும் பொருளாதார காரணிகள், கணினி மாதிரிகளில் சேர்க்கப்படவில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.

உலகெங்கும், 30க்கும் மேற்பட்ட பெரும் ஆராய்ச்சி மையங்கள், கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க பாடுபட்டு வருவதும், சமூக இடைவெளி கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டிருப்பதும் தான் தற்போதைக்கு ஆறுதலான செய்தி.