சங்கதி-24 மீது சைபர் போர் தொடுத்தது சிங்களம் - ஈழத்தீவில் இணைப்புக்கள் அனைத்தும் முடக்கம்!

புதன் ஜூன் 03, 2020

கருத்தியல் களத்தில் சிங்களம் முன்னெடுத்துள்ள எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளுக்கு பெரும் சவாலாக விளங்கும் சங்கதி-24 இணையம் மீது முழு அளவிலான சைபர் போரை சிங்களம் தொடுத்துள்ளது.

கடந்த கார்த்திகை மாதம் 18ஆம் நாளன்று சிங்கள அதிபராகக் கோத்தபாய ராஜபக்ச பதவியேற்றதை அடுத்து சிங்கள வான்படையின் தொழில்நுட்பப் பிரிவில் இணையத்தளங்கள் மீது தாக்குதல்களை நடாத்துதல், இணைய சேவைகளை முடக்குதல் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்ற கணினித்துறை நாசகாரிகள் 40 பேர் உள்வாங்கப்பட்டதாக கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் கடந்த 29.05.2020 வியாழக்கிழமையுடன் ஈழத்தீவு முழுவதுமாக சங்கதி-24 இணையத்தின் இணைப்புக்கள் அனைத்தின் மீதும் சைபர் தாக்குதல் நடாத்தி அதனை சிங்கள அரசு முடக்கியுள்ளது.

இதன் விளைவாக சங்கதி-24 இணையத்தினை ஈழத்தீவில் பார்வையிட்டு வந்த பலரது இணையவலை சேவைகள் மற்றும் இணையத் தொலைபேசிச் சேவைகள் கடந்த மூன்று நாட்களாக முற்றாக முடங்கியிருந்தன.

அத்தோடு சங்கதி-24 இணையத்தளத்தை எவருமே ஈழத்தீவில் பார்க்க முடியாத நிலை கடந்த நான்கு நாட்களாக நிலவி வருகின்றது.

இது தொடர்பாக விசாரணைகளைக் கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்டு வந்த எமது தொழில்நுட்பப் பிரிவு நிபுணர்கள், சங்கதி-24 மீது முழு அளவிலான சைபர் போரை சிங்களம் தொடுத்திருப்பதன் விளைவாகவே இந்நிலை எழுந்திருப்பதாக இன்று உறுதி செய்துள்ளனர்.

விரைவில் சிறீலங்கா நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற இருக்கும் பின்புலத்திலும், புலம்பெயர் தேசங்களில் இயங்கும் தமிழ்த் தேசிய அமைப்புக்களைப் பலவீனப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியம் பேசிக் கொண்டு சிங்களக் கைக்கூலிகளாக இயங்கும் இரண்டகர்கள் முடுக்கி விட்டுள்ள சூழமைவிலும் சங்கதி-24 இணையம் மீதான முழு அளவிலான சைபர் போரை சிங்களம் தொடங்கியுள்ளது.

 

எனினும் சங்கதி-24 இணையத்தினைத் தமிழீழ தாயகத்தில் பார்க்க விரும்புவோர் https://www.proxysite.com எனும் இணையத்திற்குச் சென்று அதில் http://www.sankathi24.com என்ற எமது முகவரியை இடுகை செய்தால் எம்மோடு இணைந்திருக்க முடியும்.