சந்திரயான்-2 விண்கலம் - விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு!

செவ்வாய் டிசம்பர் 03, 2019

நிலவின் தென்துருவத்தில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது.

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா கடந்த ஜூலை மாதம் 22-ந்தேதி சந்திரயான்-2 விண்கலத்தை ஏவியது. 48 நாட்கள் பயணத்துக்கு பிறகு சந்திரயான்-2 விண்கலம் நிலவை நெருங்கியது.

இந்தமாத தொடக்கத்தில் சந்திரயான்-2 விண்கலத்தில் இருந்து லேண்டர் கருவி தனியாக பிரிந்தது. இந்த லேண்டர் கருவிதான் நிலவின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருந்தது.

லேண்டர் கருவிக்குள் இருக்கும் ரோவர் மூலம் 15 நாட்கள் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்தனர். நிலவின் தென்துருவ பகுதியில் லேண்டரை தரை இறக்கும் முயற்சி கடந்த 7-ந்தேதி மேற்கொள்ளப்பட்டது.

 

விக்ரம் லேண்டர்

 

நிலவின் தென் துருவ பகுதியில் இதுவரை எந்த நாடும் விண்கலத்தை தரை இறக்கியது இல்லை. எனவே லேண்டர் தரை இறங்கும் நிகழ்வை உலகமே ஆவலுடன் எதிர்பார்த்தது. ஆனால் கடந்த 7-ந்தேதி லேண்டரை தரை இறக்கும்போது நிலவில் இருந்து சில கி.மீட்டர் தொலைவில் அதன் வேகம் அதிகரித்தது.

இதன் காரணமாக லேண்டர் கருவி திசைமாறி சென்று நிலவின் மேற்பரப்பில் மோதி விழுந்து விட்டது. லேண்டருடன் மீண்டும் தகவல் தொடர்பை ஏற்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் வெற்றிபெறவில்லை. இதனால் 14 நாட்களுக்கு பிறகு லேண்டரை உயிர்ப்பிக்கும் முயற்சியை இஸ்ரோ கைவிட்டது.

லேண்டர் திசைமாறி சென்று விழுந்து விட்டதாக கருதப்படும் பகுதியில் உயர்சக்தி கொண்ட கேமராக்கள் மூலம் படம் பிடிக்கப்பட்டது. என்றாலும் லேண்டர் எந்த பகுதியில் விழுந்துள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதற்கிடையே அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு விஞ்ஞானிகள் லேண்டரை கண்டுபிடிக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டனர்.  

இந்நிலையில் நிலவுக்கு அமெரிக்காவின் நாசா அனுப்பிய செயற்கைக்கோள் விக்ரம் லேண்டரை கண்டுபிடித்துள்ளது.  விக்ரம் லேண்டர் தரையிறக்க நிர்ணயிக்கப்பட்ட இடத்திலிருந்து 500மீ, தொலைவில் விக்ரம் லேண்டர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிலவின் தென்துருவத்தில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் லேண்டர் விழுந்த இடத்தையும், பாகங்களையும் புகைப்படங்களுடன் வெயிட்டது அமெரிக்காவின் நாசா.