சோசலிச சமத்துவ கட்சி வேட்பாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்

சனி ஜூலை 04, 2020

சோசலிச சமத்துவ கட்சியின் சார்பில் யாழ்ப்பாணத்தில் போட்டியிடும் வேட்பாளர்களிற்கு இராணுவத்தினர் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர் என அந்த கட்சி தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களின் வீடுகளிற்கு சென்று தம்மை படையினர் என அறிமுகப்படுத்தியவர்கள் வேட்பாளர்களினதும் அவர்களது குடும்ப உறுப்பினர்களினதும் தனிப்பட்ட விபரங்களை சேகரித்துசென்றுள்ளனர் என கட்சியின் பொதுச்செயலாளர் விஜய டயஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாங்கள் பாதுகாப்பு செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளோம் என தெரிவித்துள்ள அவர் எனினும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலின் போது ஒழுக்கமான சமூகம் குறித்து வாக்களித்த போதிலும் ஆட்சிக்கு வந்த பின்னர் அவரால் அந்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியவில்லை என விஜயடயஸ் தெரிவித்துள்ளார்.

மக்களின் பல ஜனநாயக உரிமைகள் அச்சுறுத்தப்படுகின்றன என குறிப்பிட்டுள்ள அவர் நாங்கள் இராணுவமயப்படுத்தப்படும் அரசாங்கத்தை சந்திக்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவமயப்படுத்தல் காரணமாக எங்களது வேட்பாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.