சோழியன் குடுமி சும்மா ஆடாது...

செவ்வாய் சனவரி 14, 2020

‘குதிரை ஓடியபிறகு லாயத்தை மூடிய கதை’யாக, மக்களை அணி திரட்டும் பணியில் கூட்டமைப்பு களமிறங்கப்போகின்றதாம். ‘எமது இனத்திற்கு விரோதமாக இந்த அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளிற்கு எதிராக மக்களை அணிதிரட்டுவதற்கு தமது கட்சியின் இளைஞர்கள், தொண்டர்கள் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினர் தயாராக வேண்டும்’ என தமிழரசு கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா அறைகூவல் விடுத்திருக்கின்றார்.

111

தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட இளைஞர் மற்றும் மகளிர் அணியின் ஏற்பாட்டில் கட்சியின் 70ம் ஆண்டு நிறைவு விழா நிகழ்வு கடந்த வாரம் இடம்பெற்றது. அங்குதான் புற்றுக்குள் இருந்து வெளியே வந்து சீறும் பாம்பாகச் சீறியிருக்கின்றார் மாவையர் இனமழிந்த கடந்த பத்து வருடங்களாக சிங்களப் பேரினவாத ஆட்சியாளர்களுக்கு சாமரம் வீசிக்கொண்டிருந்துவிட்டு, இப்போது மக்களை அணிதிரட்டி ஏதோ வெட்டிக்கிழிக்கப்போவதாக மாவையர் திருவாய் மலர்ந்தருளியிருப்பது, தமிழர்களுக்கு நல்லது நடக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்திலல்ல, அடுத்த நாடாளுமன்றத் தேர்தலிலையும் வெற்றிபெற்று அரியாசனத்திலை அமரவேண்டும் என்ற அதீத எதிர்பார்ப்புத்தான்.

அதுசரி, சோழியன் குடுமி சும்மா ஒன்றும் ஆடாது.

                                                                               *************

கத்துக்குட்டியின்வரலாற்றுத் திரிப்பு....

தமிழர்கள் வாழ்ந்த தேசம் தமிழீழம். அந்தத் தேசத்தை மீட்பதற்குத்தான் தமிழ் மக்கள் தங்கள் உயிர்களை அர்ப்பணித்துப் போராடினார்கள். அளப்பரிய தியாகத்தை செய்திருக்கின்றார்கள். ஆனால், சிங்களவர்களுடைய நாட்டில் தமிழீழம் கேட்பதுபோன்று அரசியல் கத்துக்குட்டி எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கின்றார். இலங்கை தமிழரசுக்கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதுதான் அவர் இதனைச் சொல்லியிருக்கின்றார்.

அவர் சொன்னதை நீங்கள் ஒருக்கா வடிவாகக் கேளுங்கோ... ‘‘நீங்கள் எங்களையும் உங்கள் தேசத்தில் உள்வாங்கி எமக்கும் உரிய உரிமைகளை வழங்கி வாழ விருப்பமில்லை என்று சொன்ன காரணத்தினாலே எங்களை தனியே போகவிடுங்கள் என்ற தீர்மானத்தினை வட்டுக்கோட்டையில் நாங்கள் நிறைவேற்றினோம்’’ என்று சொல்லியிருக்கின்றார்.

111

தமிழினத்தின் வரலாறு தெரியாத ஒருத்தரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நுழைக்கும்போதே, எதிர்காலத்தில் தமிழர்களை நாசமாக்கவே நுழைக்கப்பட்டார் என்பது அனைவருக்கும் புரிந்திருந்தது.

கொடுத்த வேலையை சுமதந்திரன் கனகச்சிதமாகவே செய்துகொண்டிருக்கின்றார்.

அதுசரி, கொடுத்த காசுக்கு கூவத்தானே வேணும்.

                                                                       *************

வரலாறு, போராட்டம்,  கொள்கை தெரியாத கூட்ட(மைப்பு)ம்இலங்கைத் தீவில் தமிழினம் ஒரு தேசிய இனம் என்பதில் விடுதலைப் புலிகள் மிக உறுதியாகவே இருந்தார்கள். ‘தமிழ் மக்கள் சிறுபான்மை இனமல்ல’ என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அவர்கள் ஆதாரபூர்வமாக நிரூபித்துள்ளார்கள்.

விடுதலைப் புலிகளின் இந்தக் கோட்பாடுகள் தெரியாமல் வேற்றுக்கிரகத்தில் இருந்துவந்தவர்களைப்போல், தமிழ் மக்களை சிறுபான்மை இனமாக்குவதில் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முனைந்திருக்கின்றது. கடந்த வாரம் கைதடி வினாயகர் முன்பள்ளி பரிசளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ .சரவணபவன் தமிழ் மக்களை சிறுபான்மை இனம் என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழர்களின் வரலாறு, போராட்டம், கொள்கை எதுவும் தெரியாத இவர்கள் எல்லாம் எப்படித்தான் கூட்டமைப்பிற்குள் நுழைந்தார்களோ..?

111

‘‘எங்களுடைய முழு உரிமையை பறிக்கும் செயல் இந்த தேசிய கீதப் பிரச்சனை, ஒரு தேசிய இனம் தான் இருக்கின்றது. அதற்கு கட்டுப்படுங்கள் என்று சொல்கிறார்கள், அப்போ நாங்கள் வந்தேறு குடிகள்,அடிமைகளாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். சிறுபான்
மையினம் தாங்களே ஒரு தேசியகீதத்தை உருவாக்கி படிக்கட்டும் என்று எதிர்பார்க்கிறார்களோ தெரியாது’’ என்று சரவணபவன் ஆதங்கப்பட்டிருக்கின்றார்.

அதுசரி, வேலியே பயிரை மேயும்போது, மாட்டுக்கடித்து என்ன பயன்?

111

நன்றி: ஈழமுரசு