சோமாலியாவில் வறட்சி காரணமாக சுமார் 20 இலட்சம் பேர் உயிரிழக்க கூடும்-ஐ.நா. எச்சரிக்கை

ஞாயிறு ஜூன் 09, 2019

சோமாலியாவில் நிலவிவரும் கடுமையான வறட்சி காரணமாக சுமார் 20 இலட்சம் பேர் உயிரிழக்க கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அவசர கால மீட்புப் பணியகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அதிகரித்துள்ள வெயிலின் தாக்கத்தால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. இதன்காரணமாக அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 20 இலட்சம் மக்கள் உணவின்றி உயிரிழக்க கூடிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கால்நடைகளும் பயிர்களும் அழிந்து வரும் சூழலில், மீட்புப் பணிகளுக்காக சுமார் 70 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் அவசர கால மீட்புப் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

தண்ணீருக்காக மாத்திரம் சோமாலியா,கென்யா மற்றும் எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஐ.நா சுமார் 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளமைக் குறிப்பிடத்தக்கது.