சபாநாயகரின் விசேட அறிக்கை

புதன் டிசம்பர் 08, 2021

அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (8) சபையில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற கூட்டத்தின் ஆரம்பத்தில் அவர் விசேட அறிக்கையொன்றையும் வெளியிட்டார்.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சபாநாயகர்,

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு  என்னை சந்தித்து, நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கும் போது பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

சபாநாயகர் என்ற வகையில், இந்த சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பை வழங்குவதும், இது தொடர்பாக தேவையான நடவடிக்கைகளை எடுப்பதும் எனது முதன்மையான பொறுப்பு.

அதன்படி, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பை வழங்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன என்பதை இந்தச் சபையில் தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.

எவ்வாறாயினும், அண்மைய நாட்களில் இடம்பெற்ற துரதிஷ்டவசமான சம்பவங்கள் மீண்டும் நிகழாதிருக்கவும், குறிப்பாக ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது மிகவும் ஆவேசமான மற்றும் தனிப்பட்ட அவமதிப்புக் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதைத் தவிர்க்கவும்  சபையில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தையும் சபாநாயகர் இதன்போது சுட்டிக்காட்டினார்.