சரியான அரசியல் தலைமையை தெரிவு செய்வதற்கு தமிழ் மக்கள் தயாராக வேண்டும்!

புதன் ஜூலை 10, 2019

தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமை சரியான பாதையில் பயணித்திருந்தால் இன்று தமிழ் மக்களின் நிலைமை வேறாக இருந்திருக்கும்.

ஆனால் நாம் செய்த ஊழ்வினைப்பயன் போலும் தமிழ் அரசியல் தலைமை அரசாங்கத் துடன் இணைந்து செல்வதைப் பெரிதாக நினைத்ததேயன்றி,தமிழ் மக்களின்  உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற நினைப்பு அவர்களிடம் இம்மியும் இருக்க வில்லை.

இதன்காரணமாக தமிழ் மக்கள் எல்லா வழிகளாலும் பாதிப்பைச் சந்திக்கின்றனர்.

வன்னி யுத்தத்தில் எமக்கு ஏற்பட்ட இழப்பை பலமாகக் கொண்டு எங்கள் உரிமைகளை வென்றெடுப்பார்கள் என்று நம்பி வாக்களித்து பாராளுமன்றத்துக்கு அனுப்பிவைக்க,அவர்கள் அரசாங்கத்தைப் பாதுகாப்பது,வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாகக் கையுயர்த்துவது என்பதிலேயே தங்கள் காலத்தைச் செலவிட்டனர்.

யுத்தப் பாதிப்புக்களை அனுபவிக்கும் மக்கள் பற்றியோ, காணாமல்போனவர்களுக்கு நடந்தது என்ன? என்பது குறித்தோ, தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை பற்றியோ எந்தச் சிந்தனையும் தமிழ் அரசியல் தலைமையிடம் இருக்கவில்லை.

இதற்கு மேலாக, தமிழ் அரசியல் தலைமையைத் தம்பக்கம் வைத்துக் கொண்ட அரசாங் கம்; வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களையும் நில அபகரிப்புக்களையும் பெளத்த விகாரைகளையும் ஏற்படுத்தியதோடு சிங்கள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி அவர்களை வடக்குக் கிழக்குக்கு அனுப்பி வைத்தது.

இவையயல்லாம் நடந்தபோதிலும் தமிழ் அரசியல் தலைமை தன் சுயநலம் பற்றியே சிந்தித்து நிற்கிறது.இதில் புறநடையாக மனதுக்குள் புழுங்கக் கூடியவர்கள் ஒரு சிலர் இருப்பார்களாயினும் அவர்களாலும் எதுவும் செய்ய முடியாத நிலைமையே காணப்படுகிறது.

சேர்ந்துபோனால் மட்டுமே அரசியல் களத்தில் நின்று பிடிக்கலாமென்று நினைப்பவர்களால் தமிழினத்துக்கு எதுவும் கிடைக்காதென்பது அறுதியிட்ட உண்மை.எனவே தமிழ் மக்கள் தங்களுக்கான சிறந்த அரசியல் தலைமையைத் தெரிவு செய்யத்  தயாராக வேண்டும்.

இதற்கான வழிவகைகளை தமிழ் மக்கள் பேரவை செய்வதும் கட்டாயமானதாகும்.

தமிழ் மக்கள் நினைத்தால் நிச்சயம் தமிழர் களுக்கென; நீதி பிறழாத, நேர்மை தவறாத அரசியல் தலைமையை உருவாக்க முடியும்.

இந்த உருவாக்கமானது,பித்தலாட்டம் புரியும் அத்தனை தமிழ் அரசியல்வாதிகளையும் ஓட ஓட விரட்டும். இது சத்தியம்.ஆகையால் சரியான அரசியல் தலைமையைத் தெரிவு செய்யத் தமிழ் மக்கள் தயாராக வேண்டும்.

நன்றி வலம்புரி