சர்க்கரை நோயாளிகளுக்கு இனிமையான உணவுகள்!

வெள்ளி ஜூலை 26, 2019

சர்க்கரை நோய்க்கு காரணங்கள் எதுவாக இருப்பினும் முக்கியமான டிரீட்மென்ட் “உணவு முறை” தான். உணவுக்கட்டுப்பாடு என்று கூறுவதைவிட உணவு முறை என்று கூறுவது பொருந்தும்.

இன்றைக்கு பெரும்பாலான மக்களின் உரையாடல்களின் போது பொதுவாக பேசப்படுவது “உனக்கு சர்க்கரை நோய் இருக்கா..? எனக்கும் இருக்கு!” என்பது தான். அங்கிங்கெனாதபடி எங்கும் இருப்பது தற்பொழுது சர்க்கரை நோய். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண் பெண் பாகு பாடில்லாமல் நிலவுகிறது. 

இதற்கு வாழ்வியல் முறைகள், மரபு வழிக்காரணங்கள் என பல கூறப்படுகிறது. காரணங்கள் எதுவாக இருப்பினும் முக்கியமான டிரீட்மென்ட் “உணவு முறை” தான். உணவுக்கட்டுப்பாடு என்று கூறுவதைவிட உணவு முறை என்று கூறுவது பொருந்தும் என்று நினைக்கிறேன்.

 

சர்க்கரை நோய் இருப்பவர்கள் என்ன சாப்பிட வேண்டும்? இவர்கள் “எல்லாம் சாப்பிடலாம்”! அப்படியா?! நம் வீட்டில் உபயோகிக்கும் மின்சாரம் போன்றது நம் உடலில் சர்க்கரை.

வீட்டில் எப்படி மின்சாரம் பல வகைகளில் தேவைப்படுகிறதோ அதைப்போல் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் தத்தம் வேலைகளை செய்ய சர்க்கரை (குளுக்கோஸ்) தேவைப்படுகிறது. 

மின்சார சப்ளையில் ஏற்ற, இறக்கம் இருந்தால் ஏசி, டிவி, பிரிட்ஜ் போன்றவை பழுதாகிவிடும். அதைப்போலவே, நம் உடலில் குளுக்கோஸின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்பட்டால், உடல் உறுப்புகள் பாதிக்கப்படுகிறது. இதனாலேயே சர்க்கரை கட்டுப்பாடு தேவைப்படுகிறது. 

இதற்கு முக்கியமான தீர்வு சரியான நேரத்திற்கு, சரியான உணவு சாப்பிடுவது தான். ஏனென்றால், நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவும் ஜீரணமாகி, பின் மாவுச்சத்தாகத்தான் அதாவது குளுக்கோஸாகத்தான் உடலுக்கு உபயோகப்படுகிறது. எனவே தான், உணவுக்கட்டுப்பாடு வலியுறுத்தப்படுகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அரிசி சாப்பிடக்கூடாதா? சப்பாத்தி தான் சாப்பிடணுமா?

நமது நாட்டில் தென் மாநிலங்களில் முக்கியமாகத் தமிழ்நாட்டில் அரிசி தான் பிரதான உணவு. வட மாநிலங்களில் தான் கோதுமை புழக்கம் அதிகம்.

கோதுமைக்கு மாறியவர்களுடைய சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் உள்ளதா? சர்க்கரை நோயால் ஏற்படும் எந்த மற்ற நோய்களும் இல்லாமல் இருக்கிறார்களா? என்று யோசிக்கவேண்டும்.

தென்னகத்தில், நம் சீதோஷ்ண நிலைக்கும், நம் வயிற்று ஜீரணத்திற்கும் பழக்கமான அரிசியே சாப்பிடலாம். கோதுமைக்குத் தாவ வேண்டிய கட்டாயம் இல்லை.

பின் ஏன் கோதுமையை பரிந்துரைக்கிறார்கள்?

அரிசி சாதம், இட்லி, தோசை, பொங்கல் போன்றவை நம் பாரம்பரிய உணவுகள். இவற்றை சாப்பிடும் பொழுது நமக்கு அளவு தெரியாமல் சாப்பிடுகிறோம். ருசியாக இருந்தால் சொல்லவே வேண்டாம். ஆனால் அதுவே சப்பாத்தி, கோதுமை உப்புமா போன்றவை நம்மையறியாமல் ஒரு அளவோடு சாப்பிடுகிறோம். ஆகவே இங்கு அளவு தான் முக்கியமே தவிர அரிசியா, கோதுமையா என்பது அல்ல.

மேலும் கோதுமையில் சிறிதளவு நார்ச்சத்து உள்ளது. அரிசியில் இல்லை. ஆனால் அரிசியில் சமைத்த உணவுகளை பருப்பு காய்கறிகளுடன் சேர்த்து சாப்பிட்டால் நார்ச்சத்து எளிதில் கிடைத்து விடும். அப்படியென்றால் வயிறு நிரம்ப சாப்பிடக் கூடாதா? அளவுடன் தான் சாப்பிட வேண்டுமா?

இங்கு தான் பெரும்பாலானவர்கள் “டயட் கன்ட்ரோல்” என்பதை தவறாக புரிந்து கொள்கிறார்கள், பயப்படுகிறார்கள். அளவு என்பது முக்கியம். “அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு” என்பது ஊரறிந்தது.

ஒவ்வொருவருடைய எடை, வேலையமைப்பு, வயது போன்றவற்றை வைத்து ஒரு சத்துணவு நிபுணர் கலோரி அளவை நிர்ணயித்து, அதற்கேற்றார்போல் உணவு அட்டவணை தருவார். இவ்வாறு செய்யும் பொழுது பத்து இட்லி சாப்பிட்டு பழகியவர்களுக்கு மூன்று அல்லது நான்கு இட்லி என்று நிர்ணயிக்கப்படுகிறது. இங்கு இட்லியின் எண்ணிக்கை குறைவுதான்.ஆனால், இட்லியுடன் திடமான சாம்பார், காய்கறி போன்றவை வலியுறுத்தப்படும். இரண்டு கப் சாம்பாருடன் நான்கு இட்லி என்பது, பெரும்பாலும் போதுமானதாகவே இருக்கும். வெறும் மிளகாய்ப்பொடி என்றால் கண்டிப்பாக பத்தாது.

இன்னொன்று கவனத்தில் கொள்வதென்றால் ஒவ்வொரு வேளை உணவுக்குமிடையே நீண்ட இடைவேளை இருத்தல் கூடாது. மூன்று அல்லது நான்கு மணி நேர இடைவெளியில் சிறிதாக எதையாவது சாப்பிட வேண்டும். அப்படியென்றால் சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டுமா என்று சிலர் கேட்பார்கள். யோசித்துப் பார்த்தால் அதைத்தான் இப்பொழுதும் செய்துக்கொண்டிருப்பார்கள்.

காலை சிற்றுண்டிக்குப்பின் 11-11.30 மணியளவில் காபி-டீ பிஸ்கட் என்று எதையாவது மனம் நாடுகிறது. அதேபோல் மதிய உணவுக்குப் பிறகு 4-5 மணியளவில் மீண்டும் காபி-டீ, பஜ்ஜி, போண்டா, வடை போன்றவை சாப்பிட்டால் நன்றாக இருக்கும் எனத் தோன்றும். இந்த நேர இடைவெளியினைத்தான் உணவியல் வல்லுனர்களும் வலியுறுத்துகிறார்கள். தேர்ந்தெடுத்து சாப்பிடும் உணவு வகைகளை மாற்றத்தான் சில வழிமுறைகளை கூறுகிறார்கள்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பூமிக்கடியில் விளைந்த காய்களை குறிப்பாக உருளைக்கிழங்கை சாப்பிடக்கூடாதா?

பூமிக்கடியில் வெங்காயம், முள்ளங்கி, நூக்கல், கேரட், பீட்ரூட், உருளை போன்றவை விளைகிறது. வெங்காயம், முள்ளங்கி தவிர மற்றவைகளில் மாவுச்சத்து கொஞ்சம் அதிகமாக இருக்கும். அதே நேரத்தில் அது நல்ல நார்சத்து மற்றும் பல மினரல், வைட்டமின் நிறைந்ததாகவும் இருக்கும். இவற்றை சாப்பிடுவதால் சுகர் ஏறாது. கேரட், பீட்ரூட்டில் கேன்சரைத் தடுக்கக்கூடிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

 

உருளைக்கிழங்கு

 

உருளைக்கிழங்கு ஒன்றையே காயென நினைத்து அதையே வழக்கமாக சாப்பிடுபவர்கள் அதிகம். மற்ற காய்கறிகளையும் சேர்க்கவேண்டும் என்பது அவசியம். மேலும் உருளைக்கிழங்கை மொறுமொறு என்று நிறைய எண்ணெய் ஊற்றி வறுவலாக்கி ருசியாக சாப்பிடுவதே வழக்கம். இதனால் எண்ணெய், உப்பு சத்து கூடுகிறது. அதனால் தீமைகள் அதிகம். எனவேதான் உருளைகிழங்கைத் தவிருங்கள் என கூறுகிறார்கள். வாரத்தில் ஏதேனும் ஓரிரு நாட்கள் உருளைக்கிழங்கை வறுக்காமல் வேகவைத்து தாளித்து சாம்பார் சாதத்துடன் சாப்பிடலாம். பூரி உருளைக்கிழங்குக்கூட ருசிக்கலாம் அளவோடு.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் வடை, போண்டா பஜ்ஜி போன்றவை சாப்பிடலாமா?

கண்டிப்பாக சாப்பிடலாம். ஆனால் வாரத்தில் ஒரு முறை, பண்டிகை நாட்களில் இரண்டு (அ) மூன்று வடை, போண்டா, பஜ்ஜி சாம்பார் (அ) சட்னி சேர்த்து சாப்பிடலாம். தினமும் தேனீர் வேளையில் இவற்றை சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும். சுண்டல், பயறு வகைகள், சாலட், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, பட்டாணி, பொரி போன்றவை ஸ்னாக்ஸாக இந்த நேரத்தில் சாப்பிடலாம். சில நேரங்களில் தோசை, பிரட் சாண்ட்விச், அவித்த முட்டையின் வெள்ளைக்கரு, ஓட்ஸ், சோளம் போன்றவையும் சேர்க்கலாம்.

பாதாம், முந்திரி, பிஸ்தா, அக்ரூட் போன்ற கொட்டை வகைகள் ஒரு கைப்பிடியளவு ஸ்னாக்ஸாக சாப்பிடலாம். இதில் நல்ல வகை கொழுப்புதான் உளளது. பயப்படத் தேவையில்லை.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் பழங்களே தொடக்கூடாதா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் அனைத்து வகை பழங்களையும் சாப்பிடலாம்! பழங்களில் இனிப்பு அதிகமாக இருப்பதால் பெரும்பாலானோர் அதை சர்க்கரை என்று எண்ணி பயப்படுகிறார்கள். உண்மையில் பழங்களில் உள்ள இனிப்பு நார்சத்துடன் கூடிய நீரில் கரையாத இனிப்பு, அதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை ஏற்றாது.

நாம் சாப்பிடும் பீர்க்கங்காய், புடலை, பூசணி, சுரைக்காய் போன்றவை “லோகிளை சீமிக்” உணவுகள். இவற்றை அதிகமாக உண்ணலாம். அதே போல கொய்யா, சப்போட்டா, பப்பாளி, தர்பூசணி, கிர்னி, நாவல்பழம், பன்னீர் திராட்சை, பச்சை திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி போன்ற அனைத்து வகை பழங்களும் 50 (அ) 60 கிராம் வரை ஒரு நாளில் ஒரு வேளை உண்ணலாம். காலை 11 மணி (அ) மாலை 4-5 மணியளவில் பழங்களை சாப்பிடுவது சிறந்தது. ஏனென்றால் இந்த உணவு இடைவெளியின் பொழுது, உடலுக்கு குளுக்கோஸ் தேவைப்படுகிறது, அதே நேரத் தில் சர்க்கரை அதிக மாகவும் கூடாது. பழங்களில் உள்ள நார்சத்துடன் கூடிய சர்க்கரை இந்த வேலையை கச்சிதமாக செய்கிறது.

ஆனால் மா, பலா, வாழை இந்த லிஸ்டில் இடம் பெறவில்லையே என்று நினைக்க வேண்டாம். இம்முக்கனிகளும் கூட கட்டாயம் சாப்பிடலாம். ஆனால் அளவு என்பது முக்கியமாக கவனிக்க வேண்டும். சில சமயங்களில் பழ சாலட்டாகக் கூட 50 கிராம் அளவு சாப்பிடலாம். 50 கிராம் என்றால் எவ்வளவு என்ற சந்தேகம் உள்ளவர்கள் ஒரு சிறிய (அ) மீடியம் சைஸ் பழத்தை தேர்ந்தெடுத்து முழுசாக சாப்பிடலாம். பெரிய சைஸ் என்றால் பாதி சாப்பிட்டு பாதியை யாருடனாவது ஷேர் செய்து விடலாம்.

அசைவ உணவு சாப்பிடலாமா?

முட்டையின் வெள்ளைக்கரு ஒருநாளைக்கு மூன்று வேளையும் சாப்பிடலாம். மஞ்சள் கருவுடன் கூடிய முழு முட்டை வாரத்தில் ஓரிரு நாட்கள் சாப்பிடலாம். சிக்கன், மட்டன், நண்டு, இறால் போன்ற மற்ற அசைவ உணவுகளும் வாரத்தில் ஓரிரு நாட்கள் சாப்பிடலாம். வறுக்காமல் சாப்பிடுவது நல்லது.

அசைவம் சமைக்கும் நாட்களிலும் காய், கீரை வகைகள் கண்டிப்பாக இருப்பது உணவில் நார் சத்தை அதிகப்படுத்தி சர்க்கரையை சீராக வைக்க உதவும்.

நன்கு மென்று சாப்பிடுவது அவசியம். “நொறுங்கத்தின்றால் நூறு வாழ்வு” என்பதன் பொருள் இதுதான். வாயில் வைத்த உணவை உமிழ்நீருடன் சேர்த்து, நன்கு நொறுங்க மென்று விழுங்குவதால் வயிறு நிரம்பிய உணர்வு சீக்கிரம் வரும், அதிகமாக சாப்பிடத்தோன்றாது. இதன் மூலம் சர்க்கரை நோயை எளிதில் கட்டுப்படுத்த முடியும்.

அன்றாட நடைபயிற்சி (30-45 நிமிடங்கள்), உடல் திசுக்களில் உபயோகப்படாமல் தேங்கியிருக்கும் சர்க்கரை கரைய உதவுகிறது. அதனால் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை எது?

“ஒரு மாத்திரை அதிகம் போட்டுக்கொண்டு, இரண்டு மடங்கு உணவு (அ) இனிப்பு சாப்பிடலாம்” என்று சிலர் நினைத்துக் கொள்வதுண்டு. அது மிகவும் தவறு. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பொருத்து மருந்துகள் பரிந்துரைக்கப்படுகிறது. கூறப்பட்ட மருந்தின் அளவு கூடினாலும் குறைந்தாலும் சர்க்கரையின் அளவில் மாற்றங்கள் ஏற்படுத்தும். அதனால் உடலின் பல உறுப்புகளில் பாதிப்பு ஏற்படலாம். எனவே பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளும், அதன் அளவும் சரியாக பயன்படுத்துவது அவசியம்.

காபி-டீ போன்ற பானங்களில் அரை சர்க்கரை, கால் சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதை கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

பண்டிகை நாட்களிலும் இனிப்பை தவிர்ப்பது நலம். பேரீச்சம்பழம், உலர்ந்த திராட்சை, ஆப்ரிகாட்ஸ் போன்ற ‘ட்ரை புருட்ஸ்’ தவிர்க்கபடவேண்டும்.

ஊறுகாய், வறுத்த உணவுகள், மைதா மாவினால் செய்த தின்பண்டங்களை தவிர்ப்பது நல்லது. பழ ரசம் அருந்தக்கூடாது.
சர்க்கரை, கருப்பட்டி வெல்லம், நாட்டு சர்க்கரை, தேன் என அனைத்தும் ரத்தத்தில் சர்க்கரை அளவை ஏற்றக்கூடியவை. எனவே கண்டிப்பாக சாப்பிடக்கூடாது.

சாப்பிடுவது வாழ்வதற்கே தவிர, வாழ்வது சாப்பிடுவதற்காக கிடையாதல்லவா? எனவே ஒவ்வொரு வேளை உணவும் ருசியறிந்து அளவறிந்து உண்டு வந்தால் கண்டிப்பாக எல்லா உணவும் சர்க்கரைக்கு இனிய உணவு தான்.