சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் (30-08-20) - மே பதினேழு இயக்கம் வேண்டுகோள்!

சனி ஓகஸ்ட் 29, 2020

தமிழீழ விடுதலைப் போராட்டம் துவங்கப்பட்ட நாள் முதல் தற்போது வரை, போராடுபவர்கள் கடத்தி செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்படுவது விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் ஒரு செயல்திட்டமாக இலங்கை அரசினால் செயல்படுத்தப்படுகிறது. இராணுவத்தினர் விசாரிப்பதற்கு அழைத்து சென்றும், அரசியல் காரணங்களால் கைது செய்யப்பட்டும், வெள்ளை வேன் கடத்தல் என சட்டத்திற்கு புறம்பாக தமிழர்களை கடத்தி சென்று இலங்கை அரசினால் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு, 60,000 முதல் 1 லட்சம் வரையிலான காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அப்படியாக கடத்தி செல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் நிலை இன்று வரை என்ன என்று தெரியவில்லை.

ஐ.நா. மனித உரிமை ஆணையம் மூலமாக அழுத்தம் ஏற்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்த புகார்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்வதாக உறுதியளித்த பிறகும், இலங்கை அரசு ஆக்கப்பூர்வமாக எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. இதற்காக அமைக்கப்பட்ட ஆணையங்களும் செயல்படாமல் உள்ளன. இதனால் 2017 பிப்ரவரியில், காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர்களால், குறிப்பாக பெண்களால், கிளிநொச்சியில் துவங்கி தமிழீழம் முழுவதும் போராட்டம் பரவ, 1000 நாட்களை கடந்தும் தொடர் போராட்டமாக நடைபெற்று வருகின்றன. இதில் 53 பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் நிலை அறியாமலே இறந்தும் போயுள்ளனர். இலங்கை சுதந்திர நாளை கரிநாளாக அனுசரித்து பல்வேறு நாட்களில் பல பேரணிகளை முன்னெடுத்துள்ளனர். கோத்தபாய ராஜபக்சே பதவியேற்ற பிறகு இவ்வாறு போராடுபவர்கள் மிரட்டப்படுவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் இதனை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு எடுத்து செல்வது தமிழ் சமூகத்தின் கடமையாக உள்ளது.

போர் மற்றும் அரசியல் காரணங்களால் காணாமல் ஆக்கப்படும் மக்களின் மீட்பு நடவடிக்கைகள் சர்வதேச கவனம் பெற, ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதம் 30ம் நாள், ஐ.நா.வின் சாவதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாள் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நாளில் ஈழத்தில் கடந்த 60ஆண்டுகாலமாக இனப்படுகொலை இலங்கை அரசால் காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்காக நாம் நீதிவேண்டி போராடவேண்டியது அவசியம். ஏனென்றால் 2009இல் நடைபெற்ற கடைசி கட்ட போரின் போது மட்டும் ஒரு லட்சத்தி நாற்பாதனாயிரம் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை இலங்கை அரசால் காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள் என்று 2017ஆம் ஆண்டு மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் அவர்கள் ஐநா அவைக்கு தெரிவித்திருக்கின்றார்.

இப்படி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை இதுவரை என்னவென்று தெரியாமல் அவர்களின் உறவினர்கள் 2017ஆண்டிலிருந்து இன்றுவரை சுழற்சி முறையில் தொடர்ந்து போராட்டம் நடத்திக்கொண்டே இருக்கிறார்கள். இவர்களுக்கு உரிய பதிலை சொல்லாத இனப்படுகொலை இலங்கை அரசு. சர்வதேச சமூகத்தை ஏமாற்றுவதற்காக கண்துடைப்புக்கு சாலிய பீரிஸ் தலைமையில் ’காணாமல் போனோருக்கான ஆணைக்குழு’ அமைக்கப்பட்டது. அது இன்றுவரை ஒரு தீர்வு தராமல் ஒரே ஒரு அறிக்கையை மட்டும் வெளியிட்டு விட்டு செயல்படாமல் இருக்கிறது.
 
இந்நிலையில் இந்த வருடத்தின் தொடக்கத்தில் ஐநா அதிகாரிகளுடனான சந்திப்பை முடித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த இனப்படுகொலைக் குற்றவாளி இலங்கை அதிபர் கோத்தபய இராசபக்சே காணாமல் இருக்கிற அனைவரும் இறந்துவிட்டார்கள் என்றும் அவர்களுக்கு விரைவில் இறப்பு சான்றிதழ் வழங்கப்படுமென்றும் அறிவித்தார்.

1992இல் வெளியிடப்பட்ட ஐநாவின் சாசனம் தெளிவாக சொல்கிறது “ அரசாங்கத்தாலோ, அரசாங்கத்தின் ஆதரவினலோ அல்லது  தனிநபர்கள் மற்றும் குழுக்களினாலோ ஒரு நபர் கட்டாயமாக கடத்தப்படுவதோ, விருப்பதிற்கு மாறாக கைது செய்யப்படுவதோ, தடுத்து வைக்கப்படுவதோ அல்லது இவ்வாறு செய்யப்பட்டவர்களின் விவரங்களை தொடர்ந்து வெளியிடாமல் இருப்பதோ ஐநாவின் சாசனம் 47/133 18இன் படி குற்றம். இப்படி நடந்துகொள்பவரின் மீது சட்டப்படி சர்வதேச ரீதியில் நடவடிக்கை எடுக்கலாம். ஆக இராசபக்சே சகோதரர்களும் சரி, இலங்கை ஆட்சியாளர்களும் சரி 60ஆண்டுகலமாக குறிப்பாக 2009 இறுதி போரின் போது வலிந்து பல லட்சம் ஈழத்தமிழர்களை காணாமல் ஆக்கியிருக்கின்றார்கள்.

இந்த ஆண்டு, தமிழீழத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து, இலங்கை அரசு ஐநா மனித உரிமை ஆணையத்தில் உறுதியளித்ததிற்கு மாறாக, நடவடிக்கை எடுக்காமல் இருப்பதை சர்வதேச சமூகத்தில் அம்பலப்படுத்தும் விதமாகவும், காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்திற்கு நீதி கேட்கவும் சமூக வலைத்தள பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 30-08-2020 ஞாயிறு அன்று தமிழ்நாட்டு நேரப்படி காலை 9 மணி முதல், #Justice4DisappearedTamils என்ற ஹேஷ்டேக் கொண்டு ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் பிரச்சாரம் செய்ய உலகத் தமிழர்கள் அனைவரும் முன்வர வேண்டும் என மே பதினேழு இயக்கம் வேண்டுகோள் விடுக்கிறது. பல்வேறு நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்கள் உட்பட அனைவரும் ஒரே நேரத்தில் பதிவுகள் இடும்போது, உலகளாவிய ட்ரென்ட்டிங்கில் இடம்பெற முடியும். அப்படி செய்துகாட்ட இயலுமெனில் சர்வதேச கவனத்தை நம் பக்கம் ஈர்க்க முடியும்.

மே பதினேழு இயக்கம்

g