சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்குள் அனுமதிக்க முடியாதாம்!

செவ்வாய் நவம்பர் 26, 2019

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா  அங்கீகரித்த பிரேரணையை மீண்டும் கலந்துரையாடல்களுக்கு உட்படுத்தி பிரேரணைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் கையாளவுள்ளதுடன் அடுத்த இருவாரங்களில்  இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளதாக அரச தரப்பு கூறுகின்றது.

சர்வதேச நீதிபதிகளை இலங்கைக்குள் அனுமதித்து விசாரணைகளை நடத்த  சிறிலங்கா  ஜனாதிபதி தயாரில்லை எனவும் அரசாங்கம் தெரிவிக்கின்றது. 

போர்க்குற்றங்கள் குறித்த பொறுப்புக்கூறல் விடயத்தில் முன்னைய அரசாங்கம் ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக்கொண்ட விடயங்களை புதிய அரசாங்கம் முற்றாக நிராகரிப்பதாக வெளிநட்டலுவல்கள் அமைச்சினை பொறுப்பேற்ற அமைச்சர் தினேஷ் குணவர்தன நேற்று சாடையாக கருத்துக்களை முன்வைத்திருந்த நிலையில் இடைக்கால அரசாங்கத்தின் கால எல்லைக்குள் இது குறித்து அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் என்னவென வினவிய போது அமைச்சர் கூறியதானது,

கடந்த காலத்தில், 2015 ஆம் ஆண்டில் அரசாங்கம் ஜெனிவாவில் முன்னெடுத்த நகர்வுகள் முற்றிலும் தவறானதாகும். 

இது ஏற்றுகொள்ள முடியாதவை என நாம் தொடர்ச்சியாக  கூறி வந்துள்ளோம்.  போர்க்குற்றங்கள் நிருபிக்க எந்த ஆதாரங்களும் இல்லாது வெறுமனே ஒரு சிலர் கூறும் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதை போலவே கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெனிவா கூட்டத்தொடரின்  30/1 பிரேரணைக்கு இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது.

இது சிறிலங்கா அரசாங்கம் வழங்கியது என கூறுவதை விடவும் அப்போதைய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் தனிப்பட்ட தீர்மானம் என்றே கூறமுடியும்.

அமைச்சரவை அங்கீகாரம் இல்லாது, பாராளுமன்றத்தில்  இது குறித்த அனுமதியை பெற்றுக்கொள்ளாது தாமாக இணை அனுசரணை பிரேரணையை ஆதரித்தனர். 

எனினும் நாம் மீண்டும் இதனை பரிசீலிக்கவுள்ளோம். வெகு விரைவில் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன்  மீண்டும் கலந்துரையாடி சிறிலங்கா   அரசாங்கம் அங்கீகரித்த பிரேரணை தொடர்பில் கலந்துரையாடல்களுக்கு உற்படுத்தி அதனை நீக்குவதற்காக சகல நடவடிக்கையும் முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.