சர்வதேச ரீதியாக ஒருங்கிணைந்த போராட்டங்களும் சிறந்த இராஜதந்திர நகர்வுகளுமே தமிழர்களுக்குத் தேவை!

வெள்ளி ஏப்ரல் 05, 2019

ஈழத்தமிழ் மக்கள் ஏமாற்றத்தின் விளிம்பில் நின்றுகொண்டிருக்கின்றனர். எனினும் அவர்கள் மன உறுதி
யைத் தளரவிடவில்லை என்பதை அவர்களின் செயற்பாடுகள் சுட்டிநிற்கின்றன. இத்தனை அவலங்களையும், இழப்புக்களையும், துன்ப துயரங்களையும் சந்தித்த பின்னரும் தமிழ்த் தேசியக் கொள்கையில் அவர்கள் உறுதியாக நிற்கின்றனர்.

எது வரினும் இறுதிவரை போராடுவோம் என்ற தமிழீழ தேசியத் தலைவரின் தாரக மந்திரத்தை இன்றும் இவர்கள் மனதிருத்திக்கொள்கின்றனர்.அதனால்தான் தற்போதும் தமிழ்த் தேசியக் கொள்கை தளராத நிலையில் உள்ளது.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழரின் தாரக மந்திரம். அதுபோல, ஐ.நா மனித உரிமைப் பேரவைக் கூட்டம் ஆரம்பமாகத் தொடங்க முன்னரே தமக்கு புதிய தீர்வு ஒன்று வரப்போகின்றது, வரும் என்ற நம்பிக்கை ஈழத்தமிழர் மனங்களில் குடிகொள்ளும்.

இயலாத் தன்மையில் உள்ள ஒரு இனம் எதையும் நம்பும் என்பது போல, தீர்வுக்கு வேறு வழிகள் இன்றி இருக்கின்ற தமிழினமும் ஐ.நாவை எதிர்பார்ப்பது நியாயமானதே.

தமிழ் அரசியல்வாதிகளும் தமிழ் ஊடகங்களும் ஐ.நா சபையையும் அதன் மனித உரிமைகள் பேரவையையும் மிகப் பிரமாண்டமாகவே மக்களுக்கு காண்பிக்கின்றன. ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஏதோ தமிழீழத்தைப் பெற்றுத்தரப்போகின்றது, இறந்தவர்களை உயிர்ப்பிக்கப்போகின்றது, எமக்கு எல்லாமே தழைக்கப்போகின்றது என்றவாறு தமிழ் அரசியல்வாதிகள் கதையளக்கின்றனர்.

இவ்வாறு கூறியே பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. யுத்தம் முடிவடைந்த இந்த 10 ஆண்டுகளில் தமிழ் மக்கள் அடைந்தது என்ன? எனக் கேட்டால் எதுவும் இல்லை என்பதே பதில். மாறாக தமிழ்த் தேசியப் பற்றில் இருந்து தமிழ் மக்களை பிரித்தெடுக்கும் பணிகள் கனகச்சிதமாக அரங்கேறி வருகின்றது.

முன்னர்சிறீலங்காப் படைப்புலனாய்வாளர்கள் செய்த செயற்பாடுகளை தற்பொது தமிழ் அரசியல்வாதிகளே செய்துகொண்டிருக்கின்றனர். மக்களின் மனங்களை மாற்றும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது, தமிழ் அரசியல்வாதிகள் சிறீலங்கா அரசிடம் நிறையவே சலுகைகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

குறிப்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சிறீலங்கா அரசாங்கத்தில் அமைச்சர்கள் போன்றே கெளரவப்படுத்தப்படுகின்றனர். அமைச்சுக்களுக்கான நிதி போலவே இவர்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

சிறீலங்காவில் தற்பொது கம்பரெலிய என்ற சிங்களப் பெயருடன் ஒரு திட்டம் நடைமுறைப்படுகின்றது.

கிராமங்களில் துரித மீள் எழுச்சித் திட்டம் என்ற இத்திட்டத்தின் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பில்லியன் கணக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது.

அந்த நிதியைப் பயன்படுத்தி அவர்கள் தமது தொகுதியில் உள்ள கிராமங்களில் மீள் கட்டுமானத்தை ஏற்படுத்த வேண்டும்.

இந்த நிதி கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. இரா.சம்பந்தன் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினர் சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துக் கலந்துரையாடியபோது ஆட்சியைத் தக்கவைப்பதற்கு கூட்டமைப்பின் ஆதரவை வழங்கு
மாறு ரணில் கேட்டிருந்தார். அதற்கு பதிலாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவிகளை வழங்குவார்கள் என ரணில் தரப்பில் உறுதிமொழி வழங்கப்பட்டது.

எனினும், ஆட்சிக்கு ஆதரவு வழங்க சம்மதம் தெரிவித்த சம்பந்தனும் சுமந்திரனும் அமைச்சுப்பதவிகளைப் பெறுவதை விரும்பவில்லை. தமிழ் மக்கள் தங்களைப் புறமொதுக்குவார்கள் எனக் கூறி, அடுத்த தேர்தலில் தாம் வெற்றிபெற முடியாத நிலை ஒன்று வரும் என்பதை உணர்ந்து அவர்கள் மறுதலித்தனர்.

அமைச்சுப் பதவிகளைப் பெறாமலே அமைச்சுக்குரிய சலுகைகளை அனுபவிக்க முடியுமா என அவர்கள் ஆலோசித்தனர். இதன்போதே ரணில் விக்கிரமசிங்க அணியினர் புதிய யோசனை ஒன்றை முன்வைத்தனர்.

நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ள கம்பரெலிய அபிவிருத்தி திட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு அதிக நிதி ‘அமைச்சுக்களைப் போல நிதி’ ஒதுக்குவார்கள் என ரணில் தரப்பு தெரிவித்தது. இதற்கு கூட்டமைப்பும் இணங்கிக்கொண்டது.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மேற்படி திட்டத்தின் கீழ் பல பில்லியன் ரூபாய்கள் வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த நிதியை கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் பங்கீடு செய்திருக்கின்றது.

அதை வைத்துக்கொண்டு தற்போது தமது தொகுதிகளில் கூட்டமைப்பு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்து வருகின்றது. அதிலும், தமக்கு ஆதரவு உள்ள இடங்களையே கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலைப்படுத்தி உள்ளனர்.

வீதிகள், பாடசாலைகள், பொது இடங்கள் என பல இடங்களில் புனரமைப்பு பணிகள், புதிய கட்டுமானப் பணிகளை கூட்டமைப்பு செய்து வருகின்றது. அடுத்த தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று அரசுக்கு முண்டுகொடுக்கும் பணிகளைச் செவ்வனே செய்வதற்காக கூட்டமைப்பு தற்போது முழு முயற்சிகளையும் எடுத்து வருகின்றது.

அப்பாவித் தமிழ் மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டவர்கள் போலவே இருக்கின்றனர். யுத்தத்தில் கணவர்களை இழந்தவர்கள் ஏதிலிகளாக உள்ளனர். கடத்தப்பட்டு காணாமல் போனோரின் உறவுகள் கையறு நிலையில் உள்ளனர். மழை, வெயிலைப் பொருட்படுத்தாமல் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்.

குடும்ப வறுமை அவர்களை வாட்டி வதைக்கின்றது. இந்த வாழ்க்கை அவர்களுக்கு வேதனையைக் கொடுத்திருக்கின்றது. எனினும், அவர்கள் மன உறுதியுடன் போராட்டத்தை முடுக்கி விட்டிருக்கின்றனர்.

தமிழ் அரசியல்வாதிகளுக்கு இந்தப் போராட்டம் தேவைப்படுகின்றது.

இந்தக் கையறு நிலையில் இருக்கின்ற தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு? இந்தத் தீர்வை எப்படிப் பெறமுடியும் என்பதே இன்றைய கேள்வியாக இருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கான தீர்வுக்கு பாடுபடும் என நம்புவது படு முட்டாள்தனம். ஆக, இனி தமிழ் மக்களுக்கு யார் தலைமை தாங்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிகரான எந்தவொரு சக்தியும் தற்போது தாயகத்தில் தலையயடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது. காரணம், தங்களுக்கு மாற்றாக இருக்கின்ற அனைத்துச் சக்திகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏதோ ஒரு வகையில் அரச சலுகைகளால் ஆட்டம்காண வைக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றது.

எனினும், கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அடுத்ததாக பலத்தை வெளிப்படுத்திய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குறிப்பிட்டளவான இளைஞர்களைத் தன்னகத்தே இணைத்துக்கொண்டு வளர்ந்துவரும் பாங்கைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அடுத்து வருகின்ற மாகாண சபை அல்லது நாடாளுமன்றத் தேர்தலே இக்கட்சியின் வளர்ச்சியைத் தீர்மானிக்கும்.

தற்போது சர்வதேச ரீதியாக தமிழ் மக்களுக்கான சிறந்த தலைமைத்துவம் ஒன்று கட்டியயழுப்பப்படவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது.

ஐ.நா மனித உரிமைப் பேரவை தமிழர்களுக்கான தீர்வைப் பெற்றுத்தரும் என்றோ இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரçணைப் பொறிமுறையை உருவாக்கும் என்றோ எதிர்பார்ப்பது எல்லாம் முட்டாள்தனமான சிந்தனை.  

இறுதி யுத்தத்தில் இலட்சக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டபோது பார்த்துக்கொண்டிருந்த ஐ.நா தற்போது அதற்கு ஒரு தீர்வைப் பெற்றுத்தரும் என எப்படி எதிர்பார்க்க முடியும்?

ஆக, சர்வதேச ரீதியாக ஒருங்கிணைந்த போராட்டங்களும் சிறந்த இராஜதந்திரமுமே தமிழர்களுக்கு தற்போது தேவை. சர்வதேச அரசுகளை நேரடியாகச் சந்தித்து அவர்களுக்கு உண்மை நிலையை எடுத்துக் கூறி தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதே தற்போதைய ஒரே வழியாகும். மேலும், சர்வதேச ரீதியாக போராட்டங்கள் வலுப்பெறவேண்டும்.

தமிழர் தாயகத்தில் இருந்து படைகள் முற்றாக வெளியேற்றப்பட்ட நிலையில், இங்கு ஜனநாயக வழியில் சமஷ்டி ஆட்சி ஒன்று உருவாக்கப்பட்டு ஆட்சி அதிகாரம் தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட வேண்டும்.

தற்போதைக்கு இது ஒன்றே தமிழ் மக்களுக்கான வழி.அதற்காக, தனித் தமிழீழக் கனவை நெஞ்சில் நிறுத்திப் போராடிய மாவீர்களின் கனவு வீண்போய்விடும் என்பதல்ல. என்றோ ஒருநாள் தமிழீழக் கனவு நனவாகும். இத்தனை மாவீர்களினதும் பொதுமக்களினதும் தியாகம் வீண்போகாது. என்றோ ஒருநாள் அதன் பலாபலன்களைத் தமிழ் மக்கள் அனுபவிப்பர். அதுவரை, கட்டமைக்கப்பட்ட ஒரு தனியான ஆட்சியைத் தமிழ் மக்கள் அனுபவிக்க வேண்டும்.

புலம்பெயர் தேசத்தில் உள்ள அத்தனை செயற்பாட்டாளர்களும் தமக்கிடையிலான பகைமை உணர்வைக் கைவிட்டு, போட்டி மனப்பான்மையை புறமொதுக்கி, அன்று தேசியத் தலைவரின் கட்டளைக்கு அமைய எப்படிப் பணியாற்றினார்களோ அதேபோன்று தற்போதும் பணியாற்றவேண்டும்.

ஓரணியில் இணைய வேண்டும். அதன் மூலமே தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கும்.

இன்னும் சில ஆண்டுகள் சென்றால் கடந்த காலம் வெறும் நினைவுகளாகவே இருக்கும். நினைவேந்தலுடன் காலத்தைக் கடத்தவேண்டி ஏற்படும். எனவே, நிகழ்காலத்தில் சிந்திக்கவேண்டும். செயற்படுத்த வேண்டும். இது காலத்தில் அவசர கோரிக்கை.

-தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்-

நன்றி-ஈழமுரசு