சர்வதேச விற்பனையில் முதலிடம் பிடித்த ஐபோன் XR!

வெள்ளி டிசம்பர் 27, 2019

அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் XR மாடல் சர்வதேச விற்பனையில் 2019 மூன்றாவது காலாண்டில் முதலிடம் பிடித்துள்ளது.

சர்வதேச சந்தையில் 2019 மூன்றாவது காலாண்டில் அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போனாக ஐபோன் XR இருக்கிறது. சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் ஐபோன் XR மூன்று சதவீத பங்குகளை கொண்டிருக்கிறது என கவுண்ட்டர்பாயின்ட் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 செப்டம்பர் மாதத்தில் வெளியான ஐபோன் XR 2018 நான்காவது காலாண்டில் இருந்து அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போனாக இருந்து வருவதாக கவுண்ட்டர்பாயின்ட்டின் மார்கெட் பல்ஸ் தெரிவித்துள்ளது.

அப்பிள் நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் ஐபோன் XR மட்டும் நான்கில் ஒரு பங்கு இருந்துள்ளது. மேலும் அனைத்து பகுதிகளிலும் ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் சாதனமாக ஐபோன் XR இருந்திருக்கிறது. சீனா மற்றும் இந்தியா போன்ற சந்தையில் ஐபோன் XR விலை மாற்றப்பட்டது, விற்பனை அதிகரிக்க காரணமாக கூறப்படுகிறது.

வெளியான காலாண்டிலேயே ஐபோன் 11 டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் மூன்று ஸ்மார்ட்போன்கள் டாப் 10 பட்டியலில் இடம்பிடித்து இருக்கின்றன. மூன்று சாதனங்களும் கேலக்ஸி ஏ சீரிஸ் மாடல்கள் ஆகும். சாம்சங் நிறுவனம் தனது ஜெ சீரிஸ் மாடல்களை நிறுத்திவிட்டு கேலக்ஸி ஏ மாடல்களை குறைந்த விலையில் அறிமுகம் செய்தது.

அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன்களின் டாப் 10 பட்டியலில் சாம்சங் நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் மாடல்கள் எதுவும் இடம்பிடிக்கவில்லை. ஒப்போ நிறுவனத்தின் மூன்று ஏ சீரிஸ் மாடல்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்து இருக்கின்றன.