சர்வதேசத்தின் அழுத்தம் இல்லாமல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு இல்லை?

திங்கள் அக்டோபர் 21, 2019

ஜனாதிபதித் தேர்தலில் நான் வெற்றி பெற்றால் மறுநாளே இராணுவக்கைதிகளை விடுதலை செய்வேன் என்கிறார் கோத்தபாய ராஜபக்ச.

பல்வேறு குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள இராணுவத்தினரை உடனடியாக விடுதலை செய்வேன் என்று கூறுகின்ற கோத்தபாய ராஜபக்ச ­ தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றி எதுவும் கூறவில்லை.

அப்படியானால் நான் ஜனாதிபதியாக வந்தால், இராணுவத்தை விடுதலை செய்வேன். ஆனால் தமிழ் அரசியல்கைதிகளை விடுதலை செய்யமாட்டேன் என்பதாக கோத்தபாய ராஜபக்ச ­வின் நிலைப்பாடு உள்ளது என அனுமானிக்கலாம்.

இது அவர்கள் பக்கம் என்றால், சஜித் பிரேமதாஸவின் தேர்தல் பிரசாரங்கள் அனைத்தும் பொதுப்படையானதாக இருக்கின்றதே தவிர, எதையும் குறித்துரைப்பதாக இல்லை.

அதாவது நாட்டைக் கட்டியயழுப்புவேன், மக்களின் குறைபாடுகளை 24 மணிநேரத்துக் குள் தீர்த்து வைப்பேன் என்பதாக சஜித் கூறுகின்றாரே தவிர, இனப்பிரச்சினைக்குத் தீர்வு அந்தத் தீர்வு இவ்வாறாக அமையும், தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்வேன் என குறிப்பிட்டுக் கூறுவதை அவர் அடிப்படியே தவிர்த்து வருகிறார்.

தவிர, தமிழ் மக்களின் பிரச்சினையைத் தனித்துக் கையாளாமல் இந்த நாட்டின் முழுப் பிரச்சினைகளையும் குறிப்பிட்டு தமிழ் மக்களின் பிரச்சியைப் பெரிதுபடுத்தாமல் விடுகின்ற நுட்பத்தையும் காணமுடிகிறது.

இவற்றுக்கு மேலாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்காக தமிழ் மக்களின் ஆதரவைப் பெறுகின்ற பணியைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பொறுப்பெடுத்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

அதாவது பெரும்பான்மையான சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறுவதில் சஜித் பிரேமதாஸவும் தமிழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெறுவதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் களத்தில் இறங்கியுள்ளனர்.

இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினை பற்றிக் கூற வேண்டும் என நினைக்கின்றார். அவ்வாறு தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி ஏதேனும் கூறினால் மட்டுமே தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறமுடியும் என்று அவர் நம்புகிறார்.

போர்க்குற்றம் தொடர்பான சாட்சியங்கள் ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்ற விசாரணை சாத்தியமாகலாம் என்றவாறு எதையும் நிறுதிட்டமாகக் கூறாமல், தக்கை வைத்துக் கூறுவதைக் காண முடிகின்றது.

கடந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்திய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதுவரை தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை பற்றிக் கூறவே இல்லை.

தவிர,போர்க்குற்ற விசாரணை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியவர்.

ஆனால் இப்போது அவர் கூறுவதைப் பார்த்தால் தமிழ் மக்களுக்காகக் கதைத்தால், அது சிங்கள மக்களின் வாக்குகளைப் பாதிக்கும் என்ற உள்நோக்கமும் அதேநேரம் தமக்கும் ஏதேனும் கிடைக்கும் என்று தமிழ் மக்கள் நம்புவதாகவும் தனது கருத்துக்கள் இருக்க வேண்டும் என்பதிலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிகத்தெளிவாக இருக்கிறார்.

ஆக, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு வாக்களித்தல் என்பதற்கப்பால்,தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வை சிங்கள ஆட்சியாளர்கள் எவரும் தரமாட்டார்கள் என்பது மட்டும் சர்வநிச்சயம்.

எனவே எம் தமிழினம் வாழவேண்டுமாக இருந்தால், இனப்பிரச்சினைக்கான தீர்வை வழங்குமாறு சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும்.

இதைச் செய்தாலன்றி மற்றும்படி தமிழ் இனத்துக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதே உண்மை.

நன்றி.வலம்புரி