சட்டவிரோத குடியேறிகள் மலேசிய எல்லையில் கைது!

ஞாயிறு மே 05, 2019

 மலேசியாவின் மேற்கு கடலோர பகுதி வாயிலாக அந்நாட்டுக்குள் நுழைந்த 54 சட்டவிரோத குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடன் குடியேறிகளை அழைத்து வந்த 3 இந்தோனேசியா படகோட்டிகளும் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். 

ஆப்ரோஷன் நியாஹ் 1(Nyah 1) என்ற பெயரில் மே 1 காலை 6 மணியளவில் மலேசியவின் பொது நடவடிக்கைகள் படை நடத்திய தேடுதல் வேட்டையில் இவர்கள் அனைவரும் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து ஒரு படகும் இரண்டு படகு இயந்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மலேசியாவின் செலாங்கூர்(Selangor) மாநிலத்தில் உள்ள தன்ஜூங் செபாட் (Tanjung Sepat) கரைப்பகுதி வழியாக இவர்கள் மலேசியாவுக்குள் நுழைந்துள்ளதை மலேசிய காவல்துறை உறுதி செய்திருக்கின்றது. 

இதில் கைது செய்யப்பட்டுள்ள 54 சட்டவிரோத குடியேறிகளில் 7 மியான்மரிகள், 44 வங்கதேசிகள், 3 இந்தோனேசியர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மலேசியாவுக்குள் நுழைவதற்காக சட்டவிரோத குடியேறிகள் ஒவ்வொரு வரும் தலா 14,000 மலேசிய ரிங்கட் (2.30 லட்சம் இந்திய ரூபாய்) செலுத்தியுள்ளதாக படைத்தளபதி அப்துல் கனி குறிப்பிட்டிருக்கிறார்.  

இந்த நிலையில், மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக இருந்து வந்த பிலிப்பைன்சை சேர்ந்த 525 பேரும், இந்தோனேசியாவை சேர்ந்த 158 பேரும் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.