சுமந்திரன் போன்றோர் தமிழ் தேசிய அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

புதன் பெப்ரவரி 19, 2020

எனது யாழ் மாநகர சபை உறுப்புரிமையை இரத்து செய்ய கோரி சட்டத்தரணி சுமந்திரன் நடாத்தும் வழக்கு நேற்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றில் தீர்ப்பிற்காக தவணையிடப்பட்டிருந்தது. இலண்டனிற்கு சென்ற சட்டத்தரணி சுமந்திரன் மக்கள் எதிர்ப்பால் கூட்டம் நடாத்த முடியாது திரும்பி நேரடியாக எனது வழக்கில் நேற்றைய தினம் ஆயராகியிருந்தார்.

இவ்வழக்கை ஏற்கனவே விசாரணை செய்திருந்த மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதியரசர் யசந்த கோட்டா கொட உயர் நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வு பெற்று சென்றதனால் இவ்வழக்கானது புதிய நீதியரசர்களுக்கு முன்னால் மீள் விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ளது.

மீள் விசாரணையானது எதிர்வரும் மார்ச் மாதம் 03 ஆம் 11ஆம் திகதிகளுக்கு தவணையிடப்பட்டுள்ளது. மீள் விசாரணையானது புதிதாக மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதியரசர் டுலிப் நவாஸ் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இதேநேரம் கடந்த 2018ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் சட்டத்தரணி சுமந்திரன் அவர்கள் நான் அமைச்சர் ரவி கருணாநாயக்காவை காக்கா பிடித்து வரியின்றிய கார் ஒன்றை வாங்கியதாக பொய் பரப்புரை ஒன்றை செய்திருந்தார்.

குறித்த பொய் பரப்புரைக்கு தேர்தல் கூட்டமொன்றில் எனது காரிற்கு தீர்வை செலுத்திய பற்றுச்சீட்டை காண்பித்ததுடன், சுமந்திரன் நான் தீர்வை இன்றிய வாகனத்தை காக்கா பிடித்து வாங்கியதை ஒரு மாத காலத்திற்குள் நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து ஒதுங்குவேன் என்றும் அதை நிரூபிக்க தவறினால் சுமந்திரன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் பகீரங்க சவால் விடுத்திருந்தேன்.

எனினும் இரண்டு ஆண்டுகள் கடந்தும் குறித்த குற்றச்சாட்டினை சுமந்திரன் நிரூபிக்கவுமில்லை பதவி விலகவும் இல்லை. குறித்த பொய் குற்றச்சாட்டையும் மீறி மாறாக மக்கள் எனக்கு வாக்களித்து என்னை மாநகர சபை உறுப்பினராக்கினர். ஆனால் எனது சவாலில் தோற்ற சுமந்திரன் தனது பதவியை விலகாது மக்கள் விருப்பிற்கு மாறாக எனது உறுப்புரிமையை இரத்து செய்ய வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இவ்வாறான போலியான நபர்களை இனம் கண்டு மக்கள் எதிர்வரும் தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும். சுமந்திரன்ற போன்றோர் தமிழ் தேசிய அரசியலில் இருந்து அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம்.

எனக்கு எதிராக 2 வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். எத்தனை வழக்குகளை எனக்கெதிராக தாக்கல் செய்தாலும் எனது அரசியல் பயணம் வீச்சோடும் மூச்சோடும் தொடரும்