சூரியனுக்கு வழிகாட்ட மெழுகுவர்த்தி ஏற்றலாமா?பிலாவடி மூலைப் பெருமான்  

புதன் செப்டம்பர் 04, 2019

வணக்கம் குஞ்சுகள்.
எல்லோரும் சுகமாக இருக்கிறியள் தானே?
கோடை காலம் முடிவுக்கு வருகிது எண்டு போட்டு ஒருக்கால் இலண்டன் பக்கம் போய் காற்று வாங்கலாம் என்று நான் வெளிக்கிட்டுப் போனனான்.
இலண்டன் நான் அடிக்கடி போய் வருகிற இடம் தான் பிள்ளையள். அங்கே போய் உங்களுக்கு என்ன மச மசாக்களைக் கொண்டு வரப் போகிறேன் என்று தான் முதலில் நான் யோசிச்சனான். அங்கை போய்ச் சேர்ந்தாப் பிறகு தான் பல குசும்புக் கதைகள் என்ரை காதில் விழுந்தது.

அங்கை நான் போய் இறங்கினவுடன் என்ரை நண்பன் சொன்னான், ‘பெருமான், இந்தியாவில் இருந்து திருமாவளவன் வந்திருக்கிறார். இண்டைக்குப் பின்னேரம் பொதுக் கூட்டம் ஒன்றை ஆள் நடத்துகிறார். இப்ப கிட்டடியில் தானே இந்தியாவில் தேர்தல் நடந்தது. இந்திய அரசியல் பற்றி பெடியன் என்ன சொல்கிறான் என்று கேட்பம், வாவன்...’ என்று.

எனக்குத் திருமாவளவன் என்ற பெயரைக் கேட்டதும் கெட்ட கோபம் தான் வந்தது. ஊருக்குப் போய் எங்கடை தலைவர் பிரபாகரனோடு இருந்து தமிழ்த் தேசியம், அது இது என்று புளுகித் தள்ளிப் போட்டு, கடைசியில் யுத்தம் தீவிரமடைஞ்சதும் சோனியா காந்தியோடு கூட்டணி வைச்சவர் தானே உந்தத் திருமாவளவன். அது மட்டுமே? யுத்தம் முடிஞ்ச கையோடு இவரும், கனிமொழியும் சேர்ந்து தானே கொழும்பு போய் மகிந்த மாத்தையாவுக்கு பொன்னாடை போர்த்து கெளரவிச்சவையள்.

இப்படிப்பட்ட ஒருத்தர் புதுசாக என்னத்தைத் தான் சொல்லிக் கிழிக்கப் போகிறார் என்று போட்டு, கூட்டத்துக்கு போகிறதுக்கு நான் முதலில் பஞ்சிப்பட்டனான்.

பிறகு என்ரை நண்பன் வற்புறுத்திக் கேட்டதில் வேறை வழியில்லாம் நானும் கூட்டத்துக்குக் கிளம்பிப் போனனான். எப்படியும் இந்தச் சாக்கில் திருமாவளவன் நாக்கைத் தொங்கப் போடுகிற மாதிரி நறுக்கென்று நாலு கேள்வியள் கேட்பம் என்பது தான் என்ரை திட்டமாக இருந்தது.

அங்கே போனதும் எனக்கு ஐந்தும் கெட்டு, அறிவும் கெட்டுப் போய்ச்சுது பிள்ளையள். கூட்டத்தை ஆர் ஏற்பாடு செய்வதை என்பதை நீங்கள் கேள்விப்பட்டால் அதிர்ந்து போவியள். வேறு யாரும் இல்லை.

உவன் ராகவன் தான்.என்னடா? கிழவன் புதுசாக ஒரு பேரைச் சொல்லிக் கலாய்க்கப் பார்க்குது என்று நீங்கள் தலையைச் சொறிகிறது எனக்கு விளங்குது பிள்ளையள்.

அவர் வேறு யாருமில்லை பிள்ளையள். அந்த நாட்களில் தமிழ் மக்களின் விடிவிற்காகத் தம்பி பிரபாகரன் தன்ரை வாழ்க்கையை அர்ப்பணித்து ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கின நேரத்தில் தலைவருக்குப் பக்கபலமாக நின்ற ஒருத்தர் தான் ராகவன். இப்படி நான் சொன்னதும் ஆளைப் பற்றி நீங்கள் கனக்க கனவு கண்டு போடாதேயுங்கோ.

ஆரம்பத்தில் தலைவருக்குப் பக்கபலமாக நின்று துரோகியாக மாறிய மைக்கல் பற்குணம் தொடக்கம் கடைசியில் இயக்கத்தையே அழிச்ச கே.பி வரைக்கும் இருக்கிற இரண்டகர்களில் ஒருத்தர் தான் இந்த ராகவன்.
முதலில் ராகவன் ஒழுங்காகத் தான் இருந்தவர். ஆனால் ஆசை ஆரை விட்டது பாருங்கோ.

மனுசருக்கு மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்று மூன்று ஆசைகள் இருக்கக் கூடாது என்று சொல்கிறவையள்.

அவருக்கு மண்ணாசை இருந்திச்சுதோ தெரியவில்லை. ஆனால் நாள் போகப் போக ஆளுக்கு மற்ற இரண்டு ஆசைகளும் வந்திட்டுது.

இப்படித் தான் இந்தியாவில் இயக்கம் இயங்கின காலத்தில்... 1984ஆம் ஆண்டின்ரை கடைசியாக இருக்க வேணும் பிள்ளையள்.

நல்ல மாதிரி இருந்த ராகவன் திடீரென்று இயக்கத்திற்குள் சனநாயகம் வேணும், தலைவர் பிரபாகரன் சர்வாதிகாரப் போக்குடன் நடக்கிறார், இயக்கத்தின்ரை தலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு என்று ஒரு அரசியல்பீடம் இருக்க வேண்டும், அது இது என்று புசத்தத் தொடங்கி விட்டார்.

பிறகு தான் விளங்கிச்சுது இதே கதையை நிர்மலா நித்தியானந்தனும் கதைச்சுக் கொண்டு திரிகிறார் என்று. நாள் போகப் போகத் தான் நிர்மலா, அவாவின்ரை கணவர் நித்தியானந்தன், ராகவன் என்று மூன்று பேருமாக இயக்கத்தின் தலைமைப்பீடத்திற்குள் பெரிய அளவில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று சமாவைக்கத் தொடங்கி விட்டீனம்.

இப்படித் தான் ஒரு நாள் எங்கடை தேசத்தின் குரல் பாலாவின்ரை வீட்டை போய் தலைமைப் பீடத்தை மறுசீரமைக்க வேண்டும் என்று ராகவனும், நிர்மலாவும் விசர்க் கதை கதைச்சிருக்கீனம். தம்பி பாலாவும் என்ன செய்கிறது என்று தெரியாமல் பொறுமையாக எல்லாத்தையும் கேட்டுக் கொண்டு இருந்திருக்கிறார்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த எங்கடை வெள்ளைத் தமிழச்சி அடேலுக்கு சரியான கோபம் வந்திட்டுது.
அந்த நேரம் பார்த்துத் தலைவர் பிரபாகரன் வீட்டுக்குள் வந்திருக்கிறார். அவ்வளவு தான் தங்கச்சி அடேல் உடனே தலைவரைக் காட்டி நிர்மலாவிட்டை சொல்லிச்சுதாம், ‘இந்தா, நீங்கள் விமர்சிச்சுக் கொண்டிருந்த ஆள் வந்திட்டார். சும்மா இஞ்சை எங்களிட்டை வந்து அவரைப் பற்றிக் குற்றம் சுமத்துகிறதை விட்டுப் போட்டு, சொல்ல வேண்டிய விசயத்தை நேரடியாக அவரிட்டையே சொல்லுங்கோ.

நீங்கள் சொல்கிறதை கேட்கிறதுக்குத் தான் தம்பி வந்திருக்கிறார்’ என்று. அவ்வளவு தான் நிர்மலாவுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்திட்டுது. பிறகென்ன, நிர்மலாவும், ராகவனும் கிளம்பிப் போய்விட்டீனமாம்.
அதுக்குப் பிறகு நிர்மலாவும், அவாவின்ரை கணவன் நித்தியானந்தனும் இயக்கத்தை விட்டு விலகிப் போய் விட்டீனம்.

111

கூடவே ராகவனும் போய் விட்டார். இதைத் தான் வந்த வெள்ளம், நின்ற வெள்ளத்தை அள்ளிக் கொண்டு போகிறது என்று அந்தக் காலத்தில் என்ரை அப்பு சொல்கிறவர்.

ஆனால் அதோடு கதை முடியவில்லை பாருங்கோ. பிறகு மூன்று பேரும் இலண்டன் போனதும் தன்ரை கணவன் நித்தியானந்தனை நிர்மலா விவாகரத்துச் செய்தார். கொஞ்ச நாளில் ராகவனை மறுமணம் செய்தார்.

அதுக்குப் பிறகு தலைவர் பிரபாகரனைக் கொச்சைப்படுத்தி நிர்மலாவும், ராகவனும் ஊர் ஊராகக் கதைக்காத கதைகளே இல்லை. கடைசியில் யுத்தம் தீவிரமடைஞ்ச காலத்தில் இலண்டனில் புலிகள் வலுக்கட்டாயமாக காசு சேர்க்கீனம் என்று சொல்லி அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு இரண்டு பேரும் பேட்டி குடுத்தவையள் என்றால் பாருங்கோவன் பிள்ளையள்.

இப்படிப்பட்ட ராகவன் ஏற்பாடு செய்த கூட்டத்திற்கு திருமாவளவன் போயிருந்தவர் என்றால் ஆள் எப்படிப்பட்ட மனுசன் என்று யோசியுங்கோ.

அது சரி, தங்கக் கழுதை எல்லா இடத்துக்கும் போகும் என்று செக் நாட்டில் ஒரு பழமொழி இருக்குது. திருமாவளவன் விசயத்திலும் இது பொருந்தும் பிள்ளையள். சரி, அத்தோடு கதை முடிஞ்சால் பரவாயில்லை.

ராகவனுக்கு வால்பிடிச்சதோடு நிற்காமல், 2009ஆம் ஆண்டு யுத்தம் தீவிரமடைந்த கட்டத்தில் சோனியா காந்தியின் கூட்டணியில் தான் சேர்ந்ததுக்குத் தலைவர் பிரபாகரனின் கட்டளை தான் காரணம் என்று திருமாவளவன் ஒரு ரீல் விட்டாரே பாருங்கோ. அதுவும் தன்னோடு தம்பி நடேசனும், சேரலாதனும் தொடர்பு கொண்டு கதைச்சவையளாம்.

தலைவரின்ரை கட்டளைப்படி தான் தாங்கள் கதைக்கிறதாகவும், உடனடியாகப் போய் சோனியா காந்தியோடு கூட்டுச் சேருங்கோ என்று அவையள் தனக்குச் சொன்னதாகவும் ஆள் ஒரு பெரிய புலுடா விட்டார்.

சூரியனுக்கு வழிகாட்டுவதற்கு மெழுகுவர்த்தி ஏற்றிக் காட்டக் கூடாது என்று இத்தாலி நாட்டில் ஒரு பழமொழி இருக்குது.

திருமாவளன் கதைக்கிற கதை கிட்டத்தட்ட அப்படித் தான் இருக்குது. ஏதோ மரம் தெரியாதவனுக்கு இலை பிடுங்கிக் காட்டின மாதிரி ஆள் ரீல் விடுகிறார்.

1111

ஆனாலும் ஒன்று சொல்லுவன் பிள்ளையள். முள்ளிவாய்க்காலில் கொத்துக் கொத்தாக எங்கடை சனத்தைக் கொல்வதற்கு மகிந்தருக்கு சோனியா காந்தி ஆயுதங்களை அள்ளி அள்ளிக் கொடுக்க, அதே சோனியா காந்தி தமிழ்நாட்டுக்கு தேர்தல் பரப்புரைக்காக வந்திறங்கியதும், மேடையில் நின்றவாறு ‘சோனியா காந்தி வாழ்க!’ என்று முழங்கியவர் தானே திருமாவளவன்.

இதைப் போன வருசம் தமிழ்நாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கின செவ்வியிலேயே அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

உதுக்குத் தான் ஜப்பான் நாட்டில் சொல்கிறவையள், ஆட்டு மந்தையின் துணையுடன் புலியைத் தாக்க முயற்சி செய்யக்கூடாது என்று.

தப்பு எங்கடை பக்கத்தில் இருக்குது பிள்ளையள். திருமாவளவன், கட்டுமரம் கருணாநிதி போன்ற ஒரு சில ஆட்டு மந்தை அரசியல்வாதிகளை நாங்கள் நம்பியிருந்தது தான் நாங்கள் செய்த மிகப் பெரிய பிழை பிள்ளையள்.

வேறை என்ன? அடுத்த முறை கனடாவுக்குப் போனதும் புதுசா ஏதாவது சூடான சங்கதியளோடு வந்து உங்களை சந்திக்கிறேன். வரட்டே...?

நன்றி: ஈழமுரசு