சுவிசில் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2021!

ஞாயிறு நவம்பர் 28, 2021

தமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில் சிறப்பாக நடைபெற்றது.

இவர்டோன் நகரில் அமைந்துள்ள நினைவுக்கல்லில் 27ம் திகதி காலை 09:00 மணியளவில்  தமிழீழத் தேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் ஈகைச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகி முறையே அகவணக்கம், மலர்வணக்கம், தீபமேற்றல், உறுதிப்பிரமாணம் எடுத்தல் என்பவற்றோடு நிறைவுபெற்றன.

தமிழ்த் தேசிய விடுதலை வேள்வியில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பானது அமைப்பின் ஒழுங்கின் அடிப்படையில் அந்நிகழ்வுக்குரிய மகத்துவத்துடன் மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் காலை 10:45 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுவிஸ் வாழ் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட உறவுகள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.

முதற்களப்பலியான மாவீரர் லெப். சங்கர் அவர்களின் நினைவுக்கல் அமைந்திருக்கும் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்து ஏற்கனவே இங்கு பாதுகாக்கப்பட்ட புனிதமண்ணும் தாயகத்து சில மாவீரர் துயிலுமில்லங்களிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித மண்ணும் எடுத்துவரப்பட்டு மாவீரர் பொதுத்தூபி முன்றலில் வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு துயிலுமில்ல நிகழ்வுகள் ஆரம்பமாகின.
தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியேற்றலுடன், காலத்தின் தேவை கருதி தமிழீழத் தேசியத் தலைவர்; அவர்களின் 2008ஆம் ஆண்டின் தேசிய மாவீரர் நாள் உரை முழுமையாக அகன்ற வெண்திரையில் காண்பிக்கப்பட்டது.

சங்கொலி, பறையிசை, மணியொலி எழுப்பலுடன் அகவணக்கத்தினைத் தொடர்ந்து தாயக நேரம்  18:07 மணியளவில் முதன்மைச் சுடரேற்றப்பட்டு துயிலுமில்லப் பாடலோடு மலர்வணக்கப் பாடலும் ஒலிபரப்பப்பட்டது. மக்களால் மலர், சுடர் வணக்கம் செலுத்தப்பட்ட சமவேளையில்; மாவீரர்களுக்கான வணக்கப்பாடல்களும் காணிக்கைப்படுத்தப்பட்டன. 

சுவிஸ் தேசிய மாவீரர்நாள் நிகழ்வில், சுவிசின்; அனைத்து மாநிலங்களிலிருந்தும் தற்போது நிலவும் கொரோனா நோய்த்தொற்றுச் சூழமைவுக்கு மத்தியிலும் அதற்குரிய பாதுகாப்பு நடைமுறை விதிமுறைகளுக்கமைவாக கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்கள் வரலாற்றுக் கடமைக்கான உறுதிமொழியை மாவீரர் திருவுருவப் படங்களுக்கு முன்னால் எடுத்தமையானது சுவிஸ் வாழ் தமிழ் மக்களின் தேசிய உணர்வையும், இலட்சியப்பற்றையும் மீளவும் வெளிப்படுத்தி நிற்கின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகள் சுவிஸ்கிளையின் கொள்கை விளக்கப்பேச்சும் கிளைப்பொறுப்பாளரினால் நிகழ்த்தப்பட்டதுடன், தமிழர் நினைவேந்தல் அகவம் சுவிசினால் நடாத்தப்பட்ட மாவீரர்; நினைவுகள் சுமந்த பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வெற்றிக்கேடயங்கள் வழங்கப்பட்டது.

மாவீரர் காணிக்கை நிகழ்வுகள் அனைத்தும் மிகவும் உணர்வெழுச்சியாக இருந்ததுடன் சமகால நிகழ்வுகளைக் கருத்தியலாகக் கொண்ட நாடகமானது மக்களின் பாராட்டுக்களைப் பெற்றது.
'நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்“ என்ற தாயகப் பாடலையடுத்து, தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் உணர்வெழுச்சியுடன் சிறப்பாக நிறைவுபெற்றன.