சுயாதீன ஊடகப் பணிக்கு விடுக்கப்பட்ட மற்றொரு அச்சுறுத்தல்

புதன் அக்டோபர் 14, 2020

இரண்டு ஊடகவியலாளர்கள் முல்லைத்தீவில் வைத்து நேற்றைய தினம் கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். வன்னியின் இயற்கை வளமான மரங்களை வெட்டிக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சிலரை அம்பலப்படுத்தும் முயற்சியில் – செய்தி சேகரிக்கச் சென்ற போதுதான் இவர்கள் தாக்கப்பட்டிருக்கின்றார்கள். கடமையில் ஈடுபட்டிருந்தபோது அவர்கள் தாக்கப்பட்டிருப்பது, சுயாதீன ஊடகப் பணிக்கு விடுக்கப்பட்டுள்ள ஒரு சவாலாகவே கருதப்பட வேண்டும்.

வடபகுதியில் குறிப்பாக வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற பகுதிகளில் இயற்கைப் பாதிக்கும் பிரதான செயற்பாடுகளில் ஒன்றாக காட்டு வளம் அழிக்கப்படுவது தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் தெரிவிக்கபபடுகின்ற போதிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை.

அரச தரப்பின் ஆதரவும், காவல்துறையின் அனுசரணையும் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் துணிச்சலுடன் தமது செயல்களை முன்னெடுப்பதற்குக் காரணமாக இருக்கலாம்.

இயற்கை வளத்தைப் பாதுகாப்பதை தமது சமூகப் பொறுப்புக்களில் ஒன்றாகக் கருதும் ஊடகங்கள் இது தொடர்பில் தொடர்ச்சியாக எழுதிவந்திருக்கின்றன. இருந்த போதிலும் கொரோனா அச்சுறுத்தல் ஒருபுறம் இருக்க மறுபுறம் மரக்கடத்தல்கள் தொடர்ந்துகொண்டிருக்கின்றன. இந்த நிலையில்தான் இந்த விவகாரத்தை அம்பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு துணிச்சலாகச் செயற்பட்ட ஊடகவியலாளர்கள் இருவரும் தாக்கப்பட்டிருக்கின்றார்கள்.

ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் செய்யவிடாது தாக்குதலாளர்களால் தடுக்கப்பட்டிருக்கின்றார். அதனைவிட, இது சுயாதீன ஊடகத்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள மற்றொரு அச்சுறுத்தல். வன்முறையைப் பயன்படுத்தி உண்மையை மூடிமறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சி.

இதில் சம்பந்தப்பட்டவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படுவது அவசியம். பாராபட்சமோ அரசியல் தலையீடுகளோ இல்லாமல் இது குறித்த விசாரணை முன்னெடுக்கப்படுவதை அரசாங்கமும், ஊடகத்துறை அமைச்சும் உறுதிப்படுத்த வேண்டும். ஊடக சுதந்திரத்துக்காகக் குரல் கொடுக்கும் அமைப்புக்களும் இந்த விடயத்தை அரசாங்கம் எவ்வாறு கையாள்கின்றது என்பதையிட்டு உன்னிப்பாக அவதானிப்பது அவசியம்.