சவுரவ் கங்குலிக்கு மாரடைப்பு! பாஜகவின் நெருக்கடியே காரணமா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு-

செவ்வாய் சனவரி 05, 2021

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி அவர்கள் லேசான நெஞ்சு வலி காரணமாக கொல்கட்டாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், கிரிக்கெட் வீரர்களும் நலம் விசாரித்தனர். இதனை தொடர்ந்து பிரதமர் மோடி அவர்களும் கங்குலியின் மனைவியை அலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். 

இந்நிலையில் அரசியலில் இணைய வலியுறுத்தி பாஜக தரப்பில் கங்குலிக்கு கடும் நெருக்கடி அளிக்கப்படுவதாக, மேற்கு வங்கத்தை சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அசோக் பட்டாச்சாரியார் பரபரப்பு தகவலை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கங்குலி அரசியலில் இணைய வேண்டும் என்று அவருக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது, அவரை அரசியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள். கடந்த வாரம் கங்குலி என்னிடம் பேசிய போது கூட நான் அவரிடம் அரசியலுக்கு வராதீர்கள், அரசியலில் சேரக்கூடாது என்று தெரிவித்தேன்.

அதற்கு கங்குலி என் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என அசோக் பட்டாச்சாரியார் கூறியுள்ளார். இந்நிலையில் அரசியலில் சேர கோரி சவுரவ் கங்குலிக்கு அதிகமான நெருக்கடியும் அழுத்தமும் கொடுக்கப்பட்டதால் தான் மாரடைப்பு வந்திருக்கலாம் என, இவர் கூறிய கருத்திற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.