எகிப்தின் மம்மிகள், பாதாள உலக கடவுளுடன் பேசுவதற்காக “தங்க நாக்குகள்”

செவ்வாய் டிசம்பர் 07, 2021

எகிப்தில் கிறிஸ்துக்கு முன் 525 ஆண்டு காலப்பகுதியை சேர்ந்த இரண்டு கல்லறைகளில் புதைக்கப்பட்டிருந்த மம்மிகளின் வாய்களில் இருந்து வெளியில் தள்ளிய நிலையில் தங்கத்திலான நாக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து 220 கிலோமீட்டர் தெற்கே இருக்கும் எல்-பஹ்னாசா பகுதியில் நடைபெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியில் 2500 ஆண்டுகளுக்கு முந்திய மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பழங்கால எகிப்தியர்கள், இந்த இரண்டு கல்லறைகளிலும் அடக்கம் செய்யப்பட்ட உடலங்களின் நாக்குகளை தங்க தகடுகளால் மாற்றியுள்ளனர்.

தமது பாதாள உலக கடவுளாக கருதப்படும் ஓப்சிரிஸ் (Osiris) உடன் இறந்தவர்களின் ஆவி பேச முடியும் என்று கருதியே இந்த முறையை எகிப்தியர்கள் கையாண்டதாக ஊகிக்கப்படுகிறது.

கற்பாறையிலிருந்து வெட்டப்பட்டு அமைக்கப்பட்டிருந்த கல்லறைகளின் உள்ளே இருக்கும் மம்மிகளில், மின்னிக் கொண்டிருக்கும் தங்க நாக்குகள் வாயின் வெளியே கண்ணுக்கு தெரியும்படி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Gallery