எலிக்குக் குரான் என்ன,புராணம் என்ன?

வெள்ளி ஜூன் 28, 2019

வணக்கம் பிள்ளையள்.

நாட்டிலை நடக்கிற கூத்துகளைப் பார்த்தால் எனக்குக் கண் எல்லாம் இருட்டிக் கொண்டு வருகுது.

அதாலை உங்களை எல்லாம் கண்டதும் சுகம் விசாரிக்க முடியவில்லை.

உந்த முசுலிம் அமைச்சர்மார் கூண்டோடு பதவி விலகின சமாச்சாரத்தை எங்கடை ஊடகங்கள் எல்லாம் ஊதிப் பெரிப்பிச்சு அரங்கேற்றின கூத்து இருக்குதெல்லே,அதுகளைக் கேட்டுக் கேட்டே காது புளிச்சுப் போச்சு.

சரி,ஓணான் எவ்வளவு தூரத்துக்கு ஓடுது பார்ப்பம் என்று நானும் பார்த்தால், தவி விலகின ஆட்களில் இரண்டு பேர் போன கிழமை விழுந்தடிச்சுக் கொண்டு அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொண்டிட்டீனமாம்.

111

நான் போன முறையே சொன்னேன்.ஒற்றுமை,அது,இது என்று உந்த முசுலிம் அமைச்சர்மார் அரங்கேற்றின காத்தவராயன் கூத்துக்கள் எல்லாம் கொஞ்ச நாட்களில் புஸ்வாணமாகி விடும் என்று. உந்த நைன்ரிக்கு மண்டை பிழைச்சுப் போச்சுது என்று எங்கடை ஆட்கள் கொஞ்சப் பேர் என்ரை முதுகுக்குப் பின்னால் நின்று குசுகுசுத்ததும் எனக்குத் தெரியும்.

கடைசியில் என்ன நடந்தது? அற நனைந்தவனுக்குக் குளிரென்ன,கூதலென்ன? என்ற கதையாக வெட்கத்தை எல்லாம் விட்டுப் போட்டு இரண்டு முசுலிம் அரசியல்வாதிகள் திரும்பவும் அமைச்சர்களாகீட்டீனம்.

அதுக்குள்ள பதவி விலகின மிச்ச முசுலிம் அரசியல்வாதிகளும் அமைச்சுப் பதவிகளைத் திரும்பவும் ஏற்றுக் கொள்கிறது பற்றி ஆழமாக சிந்திச்சுக் கொண்டிருக்கீனமாம்.

நல்லா சிந்திக்கட்டும்.ஏதோ அமைச்சுப் பதவிகளைப் பற்றி மட்டும் சிந்திக்காமல் தங்களுக்கு வாக்குப் போட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைச்ச முசுலிம் வாக்காளர்களைப் பற்றியும் உந்த முசுலிம் அரசியல்வாதிகள் கொஞ்சம் சிந்திப்பீனம் என்றால் சரி.  

ஆனாலும் ஒன்று சொல்கிறன் பிள்ளையள்,கங்கையில் மூழ்கினாலும் காக்கை அன்னம் ஆகுமே? இல்லை தானே? இருந்து பாருங்கோ,உது தான் உந்த முசுலிம் அரசியல்வாதிகளின்ரை விசயத்திலும் நடக்கும். உதை எங்கடை தமிழ் பேசும் முசுலிம் உறவுகள் புரிஞ்சு கொண்டால் சரி.

இதுக்குள்ளை கல்முனையில் ஒரு பெரிய பூகம்பமே வெடிக்கும் போலை இருக்குது.காலம் காலமாக தமிழர் வாழ்ந்து,ஆண்ட பூமி கல்முனை. பாண்டிருப்பு,மருதமுனை, நீலாவணை, சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு என்று தமிழ் மணம் கம கமக்கிற அழகான ஊர்களைக் கொண்ட ஒரு பிரதேசம் கல்முனை.

வெள்ளைக்காரன் காலத்திலை கேரளாவில் இருந்தும் பம்பாயில் இருந்தும் அம்பாந்தோட்டை வழியாக வந்த முசுலிம் கடல் வியாபாரிகள்,அப்படியே வணிகத் தேவையளுக்காக கடலோரமாக நகர்ந்து கல்முனையில் குடியேறினவை கேரளாவில் இருந்து வந்தபடியால் அவையளில் பல பேருக்கு தமிழ் நல்ல அத்துப்படி.

பிறகென்ன? அவையளோடை வந்த உருது மொழியும், அரபு மொழியும் பேசுகிற ஆட்களும் தமிழைக் கற்றுக் கொண்டு அப்படியே கல்முனையில் குந்தி விட்டீனம்.

111

தமிழ் மக்களோடு முரண்பாடு இல்லாமல் தாங்கள் வாழ வேண்டும் என்பதற்காக தமிழ்ச் சொற்களை அரபு மொழியில் எழுதி அவையள் பாடமாக்கினவையள் என்றால் பாருங்கோவன்.

அந்த நாட்களில் தமிழ் நாட்டிலையும், ஈழத்திலையும் குடியேறின முசுலிம்கள், தாங்கள் தமிழில் பேசுகிறதை அப்படியே அரபு எழுத்து வடிவங்களைப் பாவிச்சுத் தான் எழுதுகிறவையள்.அதாவது தமிழ்ச் சொற்களை அரபு மொழியில் மொழிபெயர்க்காமல் அப்படியே தமிழை அரபு மொழியில் எழுதுகிறவையளாம். அதை அரபுத் தமிழ் என்று சொல்கிறவையள்.

இப்பவும் தமிழ்நாட்டிலை இருக்கிற சேலம் மாவட்டத்தில் வாழுகின்ற முசுலிம்களில் சிலர் இந்த மொழியைப் பயன்படுத்தி வருகீனம். நூர் நாமம், சயீத் மாலை, பெண் புத்தி மாலை என்று பல நூல்கள் உந்த அரபுத் தமிழ் மொழியில் நடைமுறையில் இருக்குது என்றால் பாருங்கோ.

சரி, விசயத்துக்கு வருவம். முந்தியயாரு காலத்தில் தமிழும், அரபுத் தமிழும் புட்டும், தேங்காய்ப் பூவும் மாதிரி தமிழ்-முசுலிம் மக்களின் வாழ்வில் ஒன்றித்துப் போயிருந்த பிரதேசம் கல்முனை. பிறகு உந்த பாழ்பட்ட ஜே.ஆர்.
ஜெயவர்த்தனாவும், ரணசிங்க பிரேமதாசவும் இசுலாமிய அடிப்படைவாதிகளை தூண்டி விட்டு, தென்தமிழீழத்தில் ஜிகாத் ஒட்டுப்படையை உருவாக்கினதும், முசுலிம் ஊர்காவல்படை என்ற பெயரில் சிங்களப் படைகளோடு இணைந்து 1990ஆம் ஆண்டு நூற்றுக்கணக்கான தமிழ் மக்களை முசுலிம் காடையர்கள் கொன்று குவிச்சதும் வரலாறு.

என்ன தான் பழசை மறந்து முசுலிம் மக்களோடை நல்லுறவைக் கட்டியயழுப்புவம் என்று எங்கடை கல்முனை பிரதேசத்துத் தமிழ் மக்கள் முயற்சி செய்தாலும், எரியிற கொள்ளியில் எண்ணெய்யை ஊற்றுகிற கதையாக முசுலிம் மக்களைத் தூண்டி விட்டுத் தமிழ் மக்களைக் காபீர்கள் என்று சொல்லி நிந்தனை செய்கின்ற கைங்கரியத்தை முசுலிம் அரசியல்வாதிகளும், இசுலாமிய அடிப்படைவாதிகளும் செய்கீனம்.

உது தான் பிள்ளையள் கல்முனையில் தங்களுக்கென்று தனியானதொரு பிரதேச செயலகம் வேண்டும் என்று தமிழ் மக்கள் கேட்டுகிறதுக்கு காரணம் பாருங்கோ. ஒன்றில் பழையபடி புட்டும், தேங்காய்ப் பூவும் போல் தமிழ் மக்களோடு ஒருமித்து வாழ்கிறதுக்கு கல்முனையில் இருக்கிற எங்கடை முசுலிம் சகோதரர்கள் முன்வர வேண்டும்.

அப்படி இல்லை என்றால் தமிழ் மக்களுக்கு என்று ஒரு தனியான பிரதேச செயலகம் அமையிறதுக்குத் தடையாக இருக்கக் கூடாது. அதை விட்டுப் போட்டு தானும் படுக்க மாட்டான், தள்ளியும் படுக்க மாட்டான் என்ற கதையாகத் கல்முனையில் இருக்கிற தமிழ் மக்களுக்கு இடைஞ்சல் விளைவிச்சால் தமிழ் மக்கள் என்ன தான் செய்கிறது? அது தான் அங்கை இப்ப தனித் தமிழ் பிரதேச சபை கேட்டு மக்கள் போராட்டம் ஒன்று வெடிச்சிருக்குது.

இதில் வேதனைக்குரிய விடயம் என்னவென்றால்,உந்தப் போராட்டத்தை தமிழ் அரசியல் தலைவர்கள் வழிநடத்தாமல் கைகட்டி வேடிக்கை பார்க்க, துரோகி கருணா புகுந்து குட்டையைக் குழப்ப முற்படுகிறது தான். அரசன் இல்லாத நாடு அச்சில்லாத தேர் என்று சொல்கிறதின்ரை அர்த்தம் இப்பத்தான் விளங்குது.

111

ஒழுக்கம், கட்டுப்பாடு, கொள்கைத் திட்டம் என்று இருந்த எங்கடை இயக்கத்தின்ரை பெயரைக் கெடுத்த இந்த கோடரிகாம்பு, கிரானிலை இருக்கிற கயிட்டப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இளம் பெண்களுக்கு காசை வாரியிறைத்து தன்ரை ஆசை நாயகிகளாக வைத்திருக்கின்ற இந்த ஒழுக்கம் கெட்டவன், இன்றைக்கு கல்முனை மக்களுக்காக போராடக் கிளம்பி இருக்கிறானாம்.

111

எனக்கு வருகிற ஆத்திரத்துக்கு கருணா மட்டும் என்ரை கையில் சிக்கினான் என்றால்...

உதுக்குள்ளை ஆமத்துறுமார் கொஞ்சப் பேர் தாங்களும் மூக்கை நுழைச்சுக் கூத்துக் காட்டக் கிளம்பியிருக்கீனம். அன்றைக்கு என்னவென்றால் கல்முனை சுபத்திராம விகாரையின் தலைமை ஆமத்துறு சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் போய், போராட்ட மேடையில் கடைவிரிச்சு பட்டினிப் போர் என்று நாடகம் ஆடினார்.

பிறகென்ன என்று பார்த்தால் உந்த அத்துரலிய ரத்தின தேரரும், மட்டக்களப்பு விகாரையின் தலைமை ஆமத்துறு சுமணரட்ண தேரரும் போராட்ட மேடைக்குப் போய் தாங்களும் தமிழ் மக்களுக்குத் தங்கடை ஆதரவைத் தெரிவிச்சிருக்கீனமாம்.

111

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்ற கதையாகத் தான் உந்தக் கூத்துக்கள் இருக்குது.

எலிக்கு குரான் என்ன, புராணம் என்ன என்ற கதையாக, கல்முனையில் தமிழ்-முசுலிம் மக்களுக்கு இடையில் இருக்கிற பிரச்சினைக்குள்ளை புகுந்து விளையாடுகிறது தான் உந்த பிக்குமாரின்ரை நோக்கம் பாருங்கோ.

இது காணாது என்று உந்த அத்துரலிய ரத்தின தேரர் வரேக்குள்ளை தன்ரை ஆட்களைப் பிடிச்சு அவரின்ரை தலைக்கு மேலை மஞ்சள் துணியை குடை மாதிரி பிடிச்சுக் கொண்டு வரச் சொன்னாரே எங்கடை வியாழேந்திரன் மாத்தையா! ஆனால் உதை விட மிகப் பெரிய குசும்புக் கதையயான்றை அங்கஜன் இராமநாதன் வெளியிட்டிருக்கிறார்.

இதைத் தான் பீலா விடுகிறது என்று கோடாம்பக்க சினிமாவிலை சொல்கிறவையள்.

எங்கடை அங்கஜன் மாத்தையா சொல்கிறார்,கல்முனை தமிழ் மக்களின் போராட்டம் வெற்றி பெறுவதற்காகத் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகத் தயாராம்.ஆனால் தான் பதவி விலகிறது என்றால் எல்லாத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக வேண்டுமாம்.

உந்த முசுலிம் அமைச்சர்மாரின்ரை பதவி விலகல் கூத்தைப் பார்த்துப் போட்டு தானும் ஏதாவது கூத்து அரங்கேற்றலாம் என்று மனுசன் ஆசைப்படுகிறார் போலை கிடக்குது. ஆலையில்லாத ஊருக்கு இலுப்பம் பூ சர்க்கரையாம் என்ற கதையாகத் தான் இவரின்ரை குசும்பு இருக்குது.

உதுகளை எல்லாம் அடிக்கடி கேள்விப்படக்குள்ளை தான் எனக்கு கண்ணை இருட்டிக் கொண்டு வருகிறது பிள்ளையள்.

ஏதோ நல்லது நடந்தால் சரி. நடக்க வேணும் கண்டியளே.
வேறை என்ன?
அடுத்த கிழமை சந்திப்பம்.

-பிலாவடி மூலைப் பெருமான்-

நன்றி:- ஈழமுரசு