எல்லை கற்களில் எழுதப்பட்டிருந்த பாகிஸ்தான் பெயர் அழிப்பு!

சனி செப்டம்பர் 14, 2019

இந்திய-வங்காளதேச எல்லை பகுதி கற்களில் பாகிஸ்தான் என எழுதப்பட்டிருந்த எழுத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

ஆங்கிலேயர்கள் ஆட்சியின் பிடியில் இருந்து பிரிந்து 1947-ம் ஆண்டு இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரு நாடுகள் உருவாக்கப்பட்டது. பாகிஸ்தான் தனது ஆளுமையின் ஒரு பகுதியாக கிழக்கு பாகிஸ்தானை நிர்வகித்து வந்தது. ஆனால் பாகிஸ்தானின்  அடக்குமுறை காரணமாக 1971-ம் ஆண்டு இந்தியாவின் ஆதரவுடன் கிழக்கு பாகிஸ்தான் வங்காளதேசம் என்ற தனி நாடாக உருவானது.

வங்காள தேசம் சுதந்திரம் அடைவதற்கு முன் கிழக்கு பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் எல்லைகளை குறிக்கும் விதமாக 8000 கற்கள் நடப்பட்டு இருந்தன. அதில் பாகிஸ்தான் மற்றும் இந்தியா எல்லை என எழுதப்பட்டிருந்தது. தனி நாடாக உருவெடுத்த பிறகும் இந்திய-வங்காளதேச எல்லையின் பல பகுதிகளில் பாகிஸ்தான் என பெயர் எழுதப்பட்டிருந்த எல்லைக்கற்கள் திருத்தியமைக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், இந்திய-வங்காளதேச எல்லையில் உள்ள பாகிஸ்தான் பெயர் பதித்த எல்லை கற்களை அப்புறப்படுத்த வேண்டும் என வங்காளதேச எல்லை பாதுகாப்பு படையினருக்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா உத்தரவிட்டார்.

 

பிரதமரின் இந்த உத்தரவையடுத்து அந்நாட்டு எல்லை பாதுகாப்பு படையினர் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், எல்லைக் கற்களில் இந்தியா-பாகிஸ்தான் என எழுதப்பட்டிருந்ததை அழித்து இந்தியா-வங்காளதேசம் என திருத்தியமைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுவந்தனர்.

 

திருத்தப்படும் எல்லை கற்கள்

 

இந்நிலையில், இந்திய-வங்காளதேச எல்லையில் உள்ள பாகிஸ்தான் என பெயர் பதிக்கப்பட்டிருந்த அனைத்து எல்லை கற்களும் முற்றிலும் அகற்றப்பட்டு வங்காளதேசம்-இந்தியா என பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டதாக அந்நாட்டு ராணுவம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வங்காளதேசம் சுதந்திரம் அடைந்து 48 ஆண்டுகள் கழித்து பாகிஸ்தான் என பெயர் பதிக்கப்பட்டிருந்த எல்லை கற்கள் அனைத்தும் அழிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.