எல்லையில் சீனா ஆக்கிரமிப்பை தடுக்காமல்? போராடும் விவசாயிகளை தடுப்பதா!

எல்லையில் சீனா கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்து வருகிறது, அதை தடுக்காமல் நாட்டிற்குள் போராடும் விவசாயிகளை தடுக்க பார்க்கிறது மத்திய அரசு என கூறி "Stop China Not Farmers" என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் இன்று பிரபலமாகி வருகிறது.
விவசாய மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் டில்லியில் தொடர்ந்து 50 நாட்களை கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அவர்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த சுமூக முடிவும் எட்டப்படவில்லை.
இதனால் நாளுக்கு நாள் அவர்களது போராட்டம் வலுத்து கொண்டே போகிறது. அடுத்தப்படியாக வருகிற குடியரசு தினத்தில் பிரம்மாண்ட உழவு இயந்திர பேரணி நடத்த திட்டமிட்டுள்ளது.
இதில் நாடு முழுக்க இருந்து பலரும் பங்கேற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதை முறியடிக்கவும், எந்தவித அசம்பாவிதங்கள் நடக்காத வண்ணம் இருக்க பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் இதை தடுக்கும் முயற்சியிலும் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க எல்லையில் சீனா தொடர்ந்து ஆக்கிரமித்து வருகிறது. அருணாச்சல் பிரதேசத்தின் எல்லையில், ஒரு புதிய கிராமத்தை சீனா உருவாக்கி வருகிறது. அங்கு கட்டுமான பணிகளும் நடந்து வருகிறது.
அருணாச்சல பிரதேசத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள திபெத்தின் ஒரு பகுதி என, சீனா தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில் அங்கு கட்டுமானம் மேற்கொள்வது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை சுட்டிக்காட்டி டுவிட்டர் செயலியில், இணையவாசிகள் பிரபலமாக்கி வருகின்றனர்.
அதாவது எல்லையில் சீனா மெல்ல இந்தியாவை ஆக்கிரமித்து வருகிறது. இதை தடுக்காமல் நாட்டில் தங்களின் வாழ்வாதாரத்திற்காக போராடும் விவசாயிகளை ஒடுக்க நினைக்கிறது மத்திய அரசு. ஆகவே சீனாவை தடுங்கள் விவசாயிகளை அல்ல என கூறி "Stop China Not Farmers" என்ற ஹேஷ்டாக் டுவிட்டரில் பிரபலமானது.
உண்மையான எதிரிகள் யார் என்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். நமது விவசாயிகளை களங்கப்படுத்துவதை நிறுத்த வேண்டும். நமது பிராந்தியத்தில் சீனாவால் உருவாக்கப்பட்ட மோடியின் "ஸ்மார்ட் கிராமம்'' லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்துக்கு சீனா நுழைந்துள்ளது. இன்று வரை சீனா என்ற வார்த்தையை கூட பிரதமர் மோடி உச்சரிக்கவில்லை.
ஆனால் விவசாயிகளுடன் சண்டையிட்டு டில்லியில் அவர்கள் நுழைவதை பாஜக அரசு தடுக்கிறது என பலரும் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்.