எழுச்சிப் பேரணியில் அனைவரும் அணிதிரளுங்கள்-தமிழ் மக்கள் பேரவை

வெள்ளி மார்ச் 15, 2019

போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் இலங்கை அரசுக்குக்கால அவகாசம்  வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை 16ஆம் திகதி   முன்னெடுக்கவுள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணிக்குத் தமிழ் மக்கள் பேரவை தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றது.

தமிழ் மக்களின் உரிமைக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருவதில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் பல்கலைக்கழக சமூகமும் எப்போதும் முன்னின்று செயற்படுகின்றது.

இதன்காரணமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்த அத்தனை அகிம்சைப் போராட்டங்களுக்கும் தமிழ் மக்களின் ஆதரவு இருந்து வருகின்றது.

தற்போதையை சூழ்நிலையில் ஒட்டுமொத்தத் தமிழ் மக்களும் ஒன்றுபட்டு ஒருமித்துக் குரல்கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பித்திருக்கின்ற இவ்வேளையில் தமிழ் மக்களின் நிலைப்பாட்டை வலியுறுத்துவது கட்டாயமானதாகும்.

அந்த அடிப்படையில், சர்வதேச போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியும் இலங்கை அரசுக்குக்கால அவகாசம் வழங்கக் கூடாது என்பதை எடுத்துரைக்கவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நாளை 16ஆம் திகதி ஏற்பாடு செய்துள்ள மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியில் எம் தமிழ் மக்கள் பங்கேற்று எங்களின் ஒட்டுமொத்த நிலைப்பாட்டை சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்த வேண்டுமென தமிழ் மக்கள் பேரவை கேட்டு நிற்கின்றது.