எம் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்த தலைவா!

செவ்வாய் நவம்பர் 26, 2019

காந்தள் மலர்க் காடுகளே!
எனக்கொரு கடி மலர் வேண்டும்
வெடிகளுக்குள் முளைத்தெழுந்த
எம் வீரப் புதல்வன் பொன் அடிகளுக்கு
அதைச் சாற்றவேண்டும்
நீடூழி வாழ்கவெனப் போற்றவேண்டும்

கதைகளிலே படித்துவந்த
காவியத்து வேல் முருகன்
சதை உடுத்தி வந்த நாள் இன்று
போர்க் கதை உயர்த்தி வா!!
போரில் வென்றுவா என
மனம் பதை பதைக்கப் பிணமான
எதிரிகளின் சிதைகளுக்கு
தீ வைத்த தெய்வத் திரு வேந்தன்
தமிழின வாதை துடைத்த வரலாற்று நாயகனை
வாழ்த்த வேண்டும் வாருங்கள்

காந்தள் மலர்க் காடுகளே!
எனக்கொரு கடி மலர் வேண்டும்

கொஞ்சம் புதுவகையாய்
கலித்தொகையாய்
பொன்னகையாய்
தேனாய்
மேற்கந்தி வானாய்
தெவிட்டாத தமிழிலிருந்து
ஒரு சொல்லெடுத்துத் தாராய்
தமிழ்த்தாயே பாராய்!

பாராய்!!
அழகுடுத்தி மலர்ந்த அன்னை
நிலத்தைக்
களவெடுக்க வந்த கயவர்கள்
எம் சிசுவின்
உடலெடுத்துத் தாரில் உள்நுளைத்து
அழுத்திப் பின் உரிந்த தோலில்
ஒழுகும் குருதியில்
உயிர் இருக்கிறதா எனப் பார்த்தான்
அதை என் தலைவன் பார்த்தான்

இதைக் காண்கையில்
உயிருள்ள எல்லோர்க்கும்
உடனே கோவம் வரும்

மடை திறந்த அருவியின்
தடை அற்ற வேகம் போல்
குருதி கொதிக்க
பகையை கொல்வதற்கு கோவம் வரும்
தனி ஈழம் அமைக்கும் வேகம் வரும்
அதைத்தானே அன்று எம் அண்ணன் செய்தான்

கண்ணியம்
காலகாலமாய் கிடந்த இருட்டறை உடைத்து
வெளிவந்தது
ஈழத்துப்பெண்ணியம்

அன்பாய்
எதிரியை அழித்துவிடும் அம்பாய்
பண்பாய்
பனிக்குளிரில் கிடந்தாலும் பழுதுபடா
'மாமத்'தின் பலமான என்பாய்
செவ்வாய் மலர்ந்து
எமக்காய் சேவைகள் செய்த ஆண் தாய்
உனைச் சீராட்டி வளர்த்ததால்
தலை நிமிர்ந்தது வேலுப்பிள்ளையின்
வல்வாய்

எம் தலைவா எங்கள்
இதயத்திலிருக்கும் நான்கு அறை
எவர்க்கும் இடமில்லை
அது நீ இருக்கும் அறை
என் தமிழா எடுத்து வா பறை
எட்டுத் திக்கும் எம் தலைவன் பெயரை உரை
எம் இனத்தின் வாத்தியமடா அது
ஒலிக்க அறை 'பறை'

ஒரு புயலுக்குப் பின் அமைதி இருக்கும்
அந்த அமைதிக்குப் பின் வானம் கறுக்கும்
அமைதியின் அர்த்தம் ஆர்ப்பரிப்பு என
அறியாதார் செவிகள் இதைக் கேட்டால்
உறைக்கும்

'ஸ்பாட்டன்'களின் வீரத்தை
இன்றுவரை பேசுகிறது உலகு
என் தலைவன் வீரம்
பிரபஞ்சத்தில் கடைசி உயிர் உள்ளவரை
பேசப்படும் அலகு

கடவுள் இருக்கிறார்!!

கடவுள் இருக்கிறார் என்பவர் ஒருபுறம்
இல்லை என்பவர் மறு புறம்
எவர் எதையும் பேசட்டும்
ஆனால் உற்சவம் மட்டும்
சிறப்பாய் நடக்கும்

எம் வாழ்க்கைக்கு அர்த்தம் தந்த தலைவா!
ஈழத் தாயின் உன்னத புதல்வா
இன்று போல் ஈராயிரம் ஆண்டு
கடந்து வருகிற கார்த்திகை இருபத்தியாறில்
நீ மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டுதானிருப்பாய்
தமிழர் மனங்களில் உயர்ந்துகொண்டுதானிருப்பாய்

எம் உன்னத தலைவா நீ வாழ்க!!
என்றென்றும் உன் புகழ் வாழ்க!!

-அனாதியன்-