எனக்கான முழு தீனி வாசிப்பில்தான் கிடைக்குது!

ஞாயிறு நவம்பர் 10, 2019

பள்ளி, கல்லூரிகளில் பாடப்புத்தகங்கள் தாண்டிய வாசிப்புக்கு நம் கலாச்சாரத்தில் இடம் இல்லை. பெற்றோருக்கு வாசிக்கும் பழக்கம் இருந்தால் பிள்ளைகளுக்கு அந்த வாய்ப்பு கிடைக்கக்கூடும். வாசிக்கும் பழக்கமுள்ள ஆசிரியர் வாய்த்தால் மாணவர்கள் யாரேனும் அவரைப் பிடித்துக்கொள்ள வாய்ப்பு உண்டு. இரண்டும் வாய்க்காதவர்கள் தனிப்பட்ட ஏதோ ஒரு உந்துதலிலேயே வாசிப்பு உலகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார்கள். அப்படி எதேச்சையாக வாசிப்புக்குள் நுழைந்த விஷ்ணு சமீபத்தில்தான் பொறியியல் படிப்பை முடித்திருக்கிறார். அவரது குடும்பத்தில் விஷ்ணுவே முதல் தலைமுறை வாசகர். மூன்று வருடங்களுக்குள் வாசிப்பில் அவர் சென்ற தூரம் பிரமிக்கத்தக்கது. அவருடன் உரையாடியதிலிருந்து...

எந்த வயதில் வாசிப்புக்குள் வருகிறீர்கள்? எது வாசிப்பை நோக்கி உங்களைத் தள்ளியது?

காலேஜ் போன ரெண்டாவது வருஷந்தான் முதமுதலா வாசிக்க ஆரம்பிக்குறேன். காலேஜ்ல நிறைய நண்பர்கள் இருந்தாங்கன்னாலும் வீட்ட விட்டு இருக்குறனால தனியா இருக்க மாதிரி இருந்துச்சு. அந்த சமயத்துலதான் ஒரு சீனியர், சும்மா வாசிச்சுப்பாருடா தம்பினு ‘லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள்’ புத்தகத்தையும், ச.பாலமுருகனோட ‘சோளகர் தொட்டி’ நாவலையும் கொடுத்தாரு. அப்படித்தான் புத்தகம் நோக்கிப் போக ஆரம்பிச்சேன்.

முதல் வாசிப்பு அனுபவம் எப்படி இருந்தது?

நான் முதல்ல வாசிச்சது போர்ஹேஸோட ‘வட்டச்சிதைவுகள்’ கதைதான். இப்போ எனக்கு வாசிப்புப் பத்தி வேற புரிதல் இருக்குன்னாலும் முதல்ல வாசிப்பு எனக்குக் கொடுத்தது பிரமிப்புதான். ‘வட்டச்சிதைவுகள்’ கதைல மனுஷங்களெல்லாம் சூனியக்காரங்களோட கனவுனால உருவானவங்கங்குற மாதிரி எழுதிருப்பாரு. நெஜ வாழ்க்கைலயும் எல்லாமே அப்படித்தானோனுலாம் அப்போ நினைச்சிட்டிருந்தேன்.

இப்போது வாசிப்பு குறித்த உங்களுடைய புரிதல் என்னவாக மாறியிருக்கிறது?

‘கேப்டிவ்’னு ஒரு சிரியக் கவிதை. அதுல ஒருத்தன் சிறைதண்டனைக் கைதியா இருப்பான். ஒரு பெரிய தீவைக் கனவுகாணுவான். அந்தத் தீவுல ஒரு பெரிய சூரியகாந்தித் தோட்டம் இருக்கும். நனைஞ்சுபோன ஒரு பட்டாம்பூச்சி அந்தத் தோட்டத்துல தேன் குடிச்சிட்டு இருக்கும் போது அதோட சிறகசைப்புல ஒரு வலிய அவன் உணர்வான். அதப் போல வாழ்க்கைய நான் சிறைப்பிடிச்சது மாதிரியும், அந்தப் பட்டாம்பூச்சியோட வலிய உணர்ற மாதிரியும் எனக்கு வாசிப்பு இருக்குது.

யாரெல்லாம் உங்கள் மனதுக்கு நெருக்கமான படைப்பாளிகளாக இருக்கிறார்கள்?

போர்ஹேஸ், காஃப்கா, தஸ்தாயேவ்ஸ்கி, இடாலோ கால்வினோ, மிஷிமா, ஜான் கிம்மாரோய்ஸ் ரோசா, ஷார்ல் போத்லெர். தமிழ்ல அபி கவிதைகள் ரொம்பப் பிடிக்கும். ப.சிங்காரம் ரொம்பப் பிடிச்ச எழுத்தாளர். புதுமைப்பித்தன், மௌனி இவங்களும்.

ஆரம்பகட்டத்தில், வாசிப்பைப் பகிர்ந்துகொள்ள நண்பர்களெல்லாம் இருந்தார்களா?

காலேஜ்ல எங்கூட இருந்த நண்பர்கள் ஒருத்தனுக்கும் வாசிப்புப் பழக்கம் இல்ல. வாசிப்பு தர்ற பிரமிப்புகள அவனுங்ககிட்ட பகிர்ந்துப்பேன். ‘என்னடா ஏதோ பைத்தியக்காரன் மாதிரி சொல்லிட்டு இருக்கான்’னு சொல்வாங்க. அவங்களுக்கு வாசிப்புங்குறது அறிவியல், கணிதம்னு ஒரு வகைப்பாட்டுக்குள்ள இருக்கு. நம்ம பள்ளிக்கூடத்துலருந்தே வாழ்க்கையப் பத்தின வாசிப்பு நமக்குக் கிடையாது. அது நடக்கணும்னு எனக்கு ஒரு ஆசை உண்டு.

வாசிப்பு மூலமாக என்ன அடைந்திருப்பதாக நினைக்கிறீர்கள்?

என்னோட அன்றாடங்கள அப்படியே கடந்துபோய்டாம மறுபடி திரும்பிப்பாக்குறதுக்கு வாசிப்பு சொல்லிக்கொடுத்துருக்குது; அதனால, என்னை அப்பப்போ புதுப்பிச்சிட்டே இருக்க முடியுது. அப்புறம், மரணம் பத்தின பயத்தை விலக்குது. அது ரொம்ப முக்கியம்.

இப்போதே மரணம் குறித்தெல்லாம் யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா?

ஏழு வயசுப் பையனும் மரணத்தை எதிர்கொள்றான்ல? மரணம் பத்தி யோசிக்க வயசு ஒரு காரணமே கிடையாது. மரணப் படுக்கைல கெடக்குற பாட்டி மேல ஈ மொய்க்குது. அதைப் பாத்தாலே பயம் வந்துடும்.

போர்ஹேஸுக்குப் பிறகு அடுத்தடுத்த புத்தகங்களை எப்படிக் கண்டுகொண்டீர்கள்?

எல்லாத்துக்கும் காரணம் போர்ஹேஸ்தான். ‘போய் நீட்சேவைப் படி’னு சொல்வாரு. அவர்தான் ஒவ்வொருத்தரையும் அறிமுகப்படுத்துனார். பலநூறு புத்தகங்கள வாசிச்சுத்தான் ஒரு கதைய அவர் உருவாக்குறார். முதன்முதல்ல அவர வாசிச்சதால நிறைய முக்கியமான எழுத்தாளர்கள சீக்கிரமே கண்டுபிடிக்க முடிஞ்சது. அதுபோக எனக்கு யாரோட எழுத்தாவது பிடிச்சுடுச்சுன்னா அவங்களோட மத்த புத்தகங்களயும் வாசிச்சிட்ற பழக்கம் உண்டு. அவங்க பரிந்துரைக்குற புத்தகங்கள்னு அப்படியே அது போய்க்கிட்டே இருக்கும்.

புதிதாக வாசிக்கத் தொடங்குபவருக்கு முதல் புத்தகமாக எதைப் பரிந்துரைப்பீர்கள்?

கண்டிப்பா போர்ஹேஸ்தான். அவர் நம்மள குழந்தையா மாத்திடுவாரு. எல்லாத்தையும், ‘புதுக் கண் வச்சுப் பாரு’னு சொல்வாரு. எழுபது வயசு தாத்தா முதன்முறையா வாசிக்க ஆசைப்பட்டாலும் அவருக்கும் போர்ஹேஸத்தான் கொடுப்பேன்.

ஒரே ஒரு புத்தகம் வைத்திருக்கத்தான் அனுமதி என்றால் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

தஸ்தாயேவ்ஸ்கியோட ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவல எடுத்துப்பேன். என்னோட ஆழ் மனசுல எழக்கூடிய கேள்விகளப் பரிசீலிக்க தஸ்தாயேவ்ஸ்கிதான் சொல்லித்தர்றார். அந்த நாவலே கனவுக்கான தன்மையோடத்தான் இருக்கும். எனக்கு கனவுனா ரொம்பப் பிடிக்கும். அதை எழுதுற எழுத்தாளர்கள எனக்குப் பிடிக்கும். அதுல தஸ்தாயேவ்ஸ்கி நெருக்கமானவரா இருக்குறார். நான் கனவுகாண்றதுக்கு அதிகமான தீனி ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவல்ல இருக்குது.