எனக்கொரு வாத்தியார் இருந்தார்!

ஞாயிறு அக்டோபர் 06, 2019

தலையில் மழை தேங்குமாற் போலக் குட்டினார்.
முட்டுக்காலில் நிப்பாட்டினார்.
காதை அள்ளியிழுத்துத் திருகினார்.
தோப்புக்கரணம் போட வைத்தார்.

பிரம்படியால் கைசிவக்கச் செய்தார்.
நூறு தடைவை எழுதி வர வைத்தார்.
கொப்பியை தூக்கியெறிந்தார்.
விடுமுறைக்கு வீட்டுப்பாடம் அள்ளித் தந்தார்.

சட்டையை உள்ளுக்குள் விடச் சொன்னார்.
தலையை ஒழுங்காக வெட்ட வைத்தார்.
நகம் பரிசோதித்தார்.
ஒழுக்கத்தில்
ஒருபடி கூடக் கண்டிப்பாயிருந்தார்.

பழமொழிகள் சொல்லி வந்தார்.
கையெழுத்தை அழகாய் எழுத வைத்தார்.
செய்கைவழி முக்கியமென்றார்.
பத்துத் தரமெனினும்
விளங்காவிடில் கேள் என்றார்.

பந்தி பிரித்து எழுதப் பழக்கினார்.
குறியீடுகள் முக்கியமென்று சொன்னார்.
குறிப்பு எடுக்கிற முறையைக் காட்டித் தந்தார்.

வகுப்பு நேரத்துக்கு
முந்தி வந்து பிந்திப் போனார்.
விளங்காதவர்களுக்கு
தனித்தனியே விளங்கப்படுத்தினார்.
எங்கள் பயிற்சிக் கொப்பிகளை
வீட்டுக்கு காவிச் சென்று திருத்தி வந்தார்.

எல்லோரையும் உரத்து வாசிக்கச் செய்தார்
புத்தகங்களை பத்திரமாய் பேண வைத்தார்.
தினமொரு நாள்
ஒவ்வொருவரை முன்னழைத்துப் பேச வைத்தார்.
வகுப்பறைக்கு முன்
பூந்தோட்டம் வளர்க்க வைத்தார்.

நம்மை ஆசிரியனாக்கி
கரும்பலகையில் நிறுத்தினார்.
நற்சிந்தனைகளை எழுதி வைக்கும்
பழக்கத்தைக் கொண்டு வந்தார்.
நூலகங்களுக்கு அழைத்துச் சென்றார்.
பாடசாலைப் படிப்பே தாராளம் என்றார்.
அதிகாலைப் படிப்பு மனதில் பதியுமென்றார்.

எல்லோரையும்
தன் பிள்ளைகளைப் போல நேசித்தார்.
நம் தந்தைமாரைக் காட்டிலும்
நம்மில் அக்கறையாக இருந்தார்.

நம்மிடமிருந்த பயபக்தியெல்லாம்
கடவுளுக்கானதாய் இருந்ததோ இல்லையோ.
அந்த வாத்தியாருக்கானதாய் இருந்தது.

விழுதுகள் தேடிப் போகிற விருட்சமாய்
வேரடியில் இன்றும் அவர் இருக்கிறார்.
வகுப்பறைகளை விட்டுப் பறந்த பறவைகள்
தம் இரண்டாம் தந்தையைக் காண
நன்றிகளை சுமந்து ஊர் வருகின்றன.

இன்னமும்
அதே பயபக்தி பிள்ளைகளிடம்.

வாத்தியார் தான்
”நல்லாயிருக்கிறாயா?” என்கிற
மெலிந்த குரலுடன் முடித்துக் கொண்டு
பிள்ளைகளேயே பெருமிதத்துடன்
பார்த்துக் கொண்டிருக்கிறார்
மௌனமாக.

--- XXX ---

தீபிகா
11.28 இரவு.
05.10.2019