எங்களை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?

திங்கள் நவம்பர் 30, 2020

எம் பிள்ளைகள் உங்களிடம் ...
எம் நிலத்தைக் கேட்டனர்
மறுத்து வதைத்தீர்கள்.
விடுதலையைக் கேட்டனர்.
அடக்கி ஒடுக்கினீர்கள்.
சம உரிமையை தரச் சொன்னார்கள்.
ஏமாற்றி இழுத்தடித்தீர்கள்.
சமாதானமான வாழ்வைக் கேட்டார்கள்.
அழித்து முடித்தீர்கள்.
நாங்கள் உங்களிடம் ...
அவர்களின் கல்லறையைக் கேட்டோம்
இடித்து அழித்தீர்கள்.
கார்த்திகையில் அங்கு விளக்கேற்றக் கேட்டோம்.
உங்கள் முகாம்களை நிறுவினீர்கள்.
வீதிக் கரையில் நின்று விளக்கேற்றினோம்.
வழிகளை மறித்தீர்கள்.
வீட்டு வாசல்களில் விளக்கேற்றினோம்.
விசாரணைக்கு அழைத்தீர்கள்.
விளக்கீட்டுக்கு விளக்கேற்றினோம்.
எம்மைக் கைது செய்தீர்கள்.
இறுதியாய்
எங்களை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?
இலங்கை ஒரு பௌத்த சிங்கள நாடு.
என்பதில் தான் 
எத்தனை நாட்டுப் பற்று உங்களுக்கு.
வாழ்க ஸ்ரீ லங்கா” !
வளர்க ஸ்ரீ லங்கா” !
ஸ்ரீலங்கா”  தாயே - நம்  ஸ்ரீ லங்கா”
நமோ நமோ நமோ நமோ தாயே
---xxx ---
தீபிகா
29.11.2020